பொன்னமராவதி, செப்.3- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி முஆத் இப்னு ஜபல் ஜும்மா பள்ளிவாசல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொது மருத்துவம், கண் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு முகாமினை பொன்னமராவதி, இந்திரா நகரிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் நடத்தியது.
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சசிப்ரியா கோவிந்தராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை ஆகியோரின் வழிகாட்டுதலில் முஆத் இப்னு ஜபல் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் எம். முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மருத்துவப் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் பெண்கள் நல மருத்துவர் ஆர்.சவுமியா தலைமையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 201 பேரும் மருத்துவர் எம்.பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 50 பேரும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையின் மருத்துவர் அய்ஸ்வர்யா ஜோஸ்லின் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 123 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம், பேராசிரியர்
என்.கீர்த்தனா மற்றும் மாணவர்கள் மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர் காமாட்சி மற்றும் செவிலிய மாணவர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வும் இம்மருத்துவ முகாமில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.முகமது காசிம் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாசலம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.