வல்லம், செப். 3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) குமுதம் மற்றும் கிங் மேக்கர்ஸ் அய்.ஏ.எஸ் அகாடமி இணைந்து மாணவர்களுக்கான போட்டித் தேர்வுக்கான ‘வாகை சூட வா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 28.08.2025 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி ஒன்றிய அரசின் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக இருந்தது.
இத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், வெற்றிபெறுவதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
நம்பிக்கையும் – முயற்சியும்!
இந்நிகழ்ச்சிக்கு கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மய்யத்தின் இயக்குநர் முனைவர் கா.செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா உரையாற்றினார்.
அவர் தமது உரையில்: “ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்கள், நல்வாழ்த்துக்காக தன்னுடைய நேரத்தை முழுமையாக போட்டித் தேர்வுக்கு பயன்படுத்தியவர்கள் மன உறுதி கொண்டவர்களாகவும் இருந்து, நம்மால் முடியுமா? என்று தளர்ச்சி அடையாமல் முடியும் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்தால் எத்தகைய வலிமையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொண்டு இயல்பாக வெற்றி பெறலாம்” என்று உரையாற்றினார்.
நம் திறமை நம் கையில்…
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி டி.தியாகராஜன் கலந்துகொண்டார்.
வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உபகோட்ட நடுவர் செ.இலக்கியா “நம் திறமை நம் கையில்” உள்ளது. வைராக்கியமாக இருப்பவர்கள் தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் போட்டி போடும் சூழ்நிலையை உருவாக்கி முழுமையான வாசிப்பை மற்றும் முயற்சியை மென்மேலும் அதிகரிக்க வேண்டும்.
மேலும் தன்னுடைய ஆழமான வாசிப்பையும் முழுமையான நேரத்தையும் பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார். தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான எளிமையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிய இந்நிகழ்ச்சி மாணவ- மாணவி களுக்கு இனிய எளிய நடையில் இருந்தது.
போட்டித் தேர்வுக்கான…
மேலும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளை மாணவ-மாணவிகள் கேட்டு பயன்பெற்றனர். கிங் மேக்கர்ஸ் அய்.ஏ.எஸ் அகாடமி திட்ட இயக்குநர் வாகினிசிறீ துரைராஜ் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்களை படிப்பது. குறிப்பு எடுப்பது, ஒரு கேள்விக்கான பதில்களை எவ்வாறு தேர்வு செய்வது, இன்றைய அணுகுமுறையும் ஆலோசனை களையும் சிறப்பாக வழங்கினார். பல்வேறு மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கான விளக்கத்தினையும் பெற்றார்கள்.
வாய்ப்பைப் பெற்றார்
‘வாகை சூட வா’ என்ற நிகழ்ச்சியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் அரசியல் அறிவியல் துறையின் மாணவி யாழினி கிங் மேக்கர்ஸ் அய்.ஏ.எஸ். அகடாமியின் இலவச மாக சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சிறந்த அரசு அதிகாரிகளை உருவாக்குதும், ஆட்சித் தலைவர் களை உருவாக்குவதும், இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாக உள்ளது. இறுதியாக குமுதம் வார இதழின் மண்டல மேலாளர் கே.கணேசன் நன்றி கூறினார். குமுதம் என்றென்றும் மாணவர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது என்பதில் அனைவருக்கும் அய்யமில்லை என்பது இந்நிகழ்சியே சான்றாக அமைந்தது.