சென்னை, செப்.3- தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ.3.200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும், வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், மாநில முதலமைச்சரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்த வேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதலமைச்சர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு 10 நாள் அய்ரோப்பிய பயணம் எதற்கு? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் தமிழ்நாடு பாஜ தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா? ஜெர்மனியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நாளிலேயே ரூ3,201 கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான நோர்-பிரெம்ஸ் சென்னையில் உள்ள நிறுவனம் என்றும், அதனுடன் ஜெர்மனியில் போய் ஒப்பந்தமா என நயினார் கேட்டிருப்பது, தொழில்துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது. நோர்-பிரெம்ஸ் 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவங்கப்பட்டது.
தற்போது 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மகாராட்டிரா பாஜ முதலமைச்சர் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என்கிறார் பாஜ மாநில தலைவர். தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிக்கொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார்.
டாவோஸ் நகரில் இருந்து மகாராட்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்திய தொழில் நிறுவனங்களுடன் அதுவும் அவர்களது தலைநகரமான மும்பையிலேயே உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தோடு காணொலிக் கலந்தாய்வில் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழ்நாடு பாஜ தலைவர் அறிந்துகொள்வது நல்லது. டாவோசில் அமர்ந்து இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் காணொலிக் கலந்தாய்வு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு அறியும்.
திராவிட மாடல் அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒருபோதும் இதுபோன்ற சில்லரை வேலைகளை செய்வதில்லை. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசே புள்ளிவிவர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுக்குமாறு தமிழ்நாடு பாஜ தலைவரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்
29 பேர் சிறையில் அடைப்பு
பொன்னேரி, செப்.3- காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சக தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கேட்டு நேற்று (2.9.2025) நடந்த போராட்டத்தின்போது காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தினர்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் (35) வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் (1.9.2025) இரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது அமரேஷ் பிரசாத் தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தார். காட்டூர் காவல் துறையினர் இறந்தவரின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த நிறுவனத்திடம் இழப்பீடாக ரூ.25 லட்சம் கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிவில் ரூ.5 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் விசாரணைக்குச் சென்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசினர். இந்நிலையில் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.