கொள்கைப் பாச அருமைத் தங்கை மீராஜெகதீசன் மறைந்தாரே!  அவருக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

2 Min Read

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வடசேரியில் இயக்கத்தின் முக்கியத் தூண்களில் ஒருவரும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பையும் பெற்ற கொள்கை வீரர் ஆம்பூர் வடசேரி ‘மிராசு’ என்று அழைக்கப்பட்ட து.ஜெகதீசன் அவர்களது வாழ்விணையர் திருமதி. மீரா ஜெகதீசன் (வயது  80)  நேற்று (1.9.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து துயருற்றோம்!

வடசேரியின் பிரபல பெருநிலக்கிழார் திரு.சபாரத்தினம் அவர்களது மகள் திருமதி மீரா அவர்கள்.

ஆரம்ப நாள் தொட்டு கொள்கை உணர்வோடு வளர்க்கப்பட்டு, இறுதிவரை அதைக் கைவிடாதவர்.

நமது அருமைச் சகோதரி மீரா அவர்கள், விருந்தோம்பலில் நிகரற்றவர். கழகக் குடும்பங்களையே தமது உறவுகளாக எண்ணி, கடைசிவரை உழைத்தவர்.

கழக மகளிரணியில் பங்கெடுத்து பணியாற்றி, சில போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். அவரது மகன்கள் வழக்குரைஞர் துரைசாமி, கனடா நாட்டிலுள்ள வீரமணி ஆகியோரும், மூத்த மகள் சித்ரா நாகசரவணன் இளையமகள் சுமதி, பெயரப் பிள்ளைகள் எல்லாம் எங்களிடத்தில் வற்றாத அன்பு காட்டுபவர்கள்; ஒரு குடும்ப உணர்வோடு பழகுபவர்கள்.

முதுமையால் தாக்கப்பட்ட அவரை, வடசேரிக்கு நேரில் சென்று நானும், எனது வாழ்விணையரும், பிள்ளைகளும் பார்த்து வந்தோம். பாசப் பொழிவு, மாறாத நகைச்சுவை உணர்வு, விருந்தோம்பல், கழகக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படாத உறவு நெருக்கம் எல்லாம் கொண்டவர் மறைந்தார் – உடல்நலக் குறைவு காரணமாக என்ற செய்தி கேட்டு ஆறாத்துயரம் அடைகிறோம்.

‘‘தவிர்க்க முடியாததை ஏற்பதுதான் பகுத்தறிவாளர்களின் வழக்கம்’’. எனவே, அவரது மறைவினால் பெரிதும் வருந்தும், துன்பமடையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது சகோதரியாரின் கைமாறு கருதாத கழகத் தொண்டிற்கு வீர வணக்கம்!வீர வணக்கம்!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
1.9.2025

 

குறிப்பு:  தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், கழக தோழர்களுடன்  நேரில் சென்று (2.9.2025)  மறைந்த தோழர் மீரா ஜெகதீசன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

வழக்குரைஞர் துரைசாமி அவர்களைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கழகத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் ஆறுதல் தெரிவித்தனர். இறுதி ஊர்வலம் நாளை (3.9.2025) காலை 10 மணிக்கு வடசேரியில் உள்ள   இல்லத்திலிருந்து நடைபெறும்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *