எழுத்துப் போராளி விந்தனின் அல்புனைவுகள் புரட்சி எழுத்தாளர் விந்தனின் 50ஆம் ஆண்டு நினைவுகள் – அவரது எழுத்துப் பணிகளின் சிறப்புகள்

6 Min Read

 

பிற இதழிலிருந்து...

வீ.அரசு

மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,

தமிழ் இலக்கியத் துறை,

 சென்னைப் பல்கலைக்கழகம்

 

“ விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்.”

இந்த வரிகள் கல்கி எழுதியது. 1946 இல் விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘முல்லைக் கொடியாள்’ நூலுக்கு கல்கி எழுதிய முன்னுரை.

“அபிப்பிராயத்தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகின்றது.”

1953இல் வெளிவந்த ‘சமுதாய விரோதி’ என்னும் விந்தனின் சிறுகதைத் தொகுதிக்கு எழுத்தாளர் கி.சந்திரசேகரன் எழுதியுள்ள அறிமுகம் மேலே கண்ட சொற்கள்.

கோவிந்தன் எனும் விந்தன் (1916 – 1975) தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். 98 சிறுகதைகளை எழுதியுள்ளார். 7  நாவல்களையும் எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான குட்டிக் கதைகளையும் விந்தன் எழுதியுள்ளார். இவை குறித்து தமிழ்ச் சமூகத்தில் ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால், அவரது ‘அல்புனைவுகள்’ எனும் மரபில் உருவாக்கிய ஆக்கங்கள் குறித்த அறிமுகம் தமிழ்ச் சமூக வெளியில் இருப்பதாகக் கூற முடியாது.

விந்தனின் ஆக்கங்களை எப்படிப் புரிந்து கொள்வது? மதிநலப் பேச்சு (wit), இடித்துக் கூறுதல் (Satire) இகழ்ச்சிக் குறிப்பு (Sarcasm), வினையப் பேச்சு (Lampooning) என்று ஆங்கில இலக்கிய அகராதி கூறும் சொற்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள புனைவுகளையும், அல்புனைவுகளையும் தேடினால், அவை விந்தன் ஆக்கங்களில்தான் கிடைக்கும். அந்த வகையில் தனக்கான தனித்த மொழியைக் கண்டெடுத்து எழுதியவர் விந்தன்.

விந்தனின் அல்புனைவுகள் என்பவை சமகால சமூகத்தைத் தனது எழுத்தில் பதிவு செய்த படைப்பாளியைக் காட்டுகிறது. அந்தப் படைப்புகள் பெரிதும் அறியப்படாமல் இருப்பதால், அவை குறித்து பேசுவோம்.

விந்தன் முதல் தலைமுறை எழுத்தறிவு பெற்றவர். தன்னைத் தொழிலாளி என்றே சொல்லிக்கொள்பவர். 1936இல் அச்சுக்கோப்பாளராக தனது வாழ்வைத் தொடங்கியவர். பின்னர் ‘கல்கி’ பத்திரிகை நிறுவனத்தில் அச்சுக்கோப்பாளராகப் பணியில் சேர்ந்து, உதவி ஆசிரியராக உயர்ந்தவர், இவரது அக்கறை என்பது சமூகத்தின் அடி மட்டத்தில் வாழும், உதிரிப் பாட்டாளிகள், விளிம்புநிலை மக்கள், அன்றாடம் காய்ச்சிகள் என்று கூறப்படும் மக்கள் ஆகியோரின் மீதுதான் இருந்தது. அதனை தனது புனைவுகளிலே பதிவு செய்தார். பெண்கள் மீது அவருக்கிருந்த அக்கறை, அவரது நாவல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேற்குறிப்பிட்ட அவரது படைப்பு உலகில், அல்புனைவுகள் என்பவை, சமகாலத் தன்மையோடு இணைந்து இருப்பதைக் காண முடிகிறது. இரண் டாம் உலகப்போரின் விளைவாகக் காகிதப் பஞ்சம் உருவானதால்தான் சிறிய கதைகளை எழுத நேர்ந்தது என்று விந்தன் குறிப்பிடுகிறார். ஆனால் அந்தப் போரின் விளைவால், சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அவலங்களைப் பேசுவதாக “வேலை நிறுத்தம் ஏன்?” (1946) எனும் அவரது நூல் அமைந்திருக்கிறது. 1930ஆம் ஆண்டு தொடங்கி, இரண்டாம் உலகப்போர் முடியும் காலம் வரை, உலகில் தோன்றிய ‘பெரும் நெருக்கடி’ (Great depression) என்பது தமிழ்ச் சூழலில் எப்படி இருந்தது? என்பதற்கானப் பதிவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

1954இல் விந்தன் ‘மனிதன்’ எனும் பெயரில் பத்து இதழ்களைக் கொண்டு வந்தார். இந்த இதழுக்கு ‘மனிதன்’ என்ற பெயரிடுவது மாக்சிம் கார்க்கியின் ஆக்கங்களை வாசித்ததின் நேரடித் தாக்கம் என்று பதிவு செய்கிறார். ‘மனிதன்’ பொங்கல் சிறப்பிதழை உழைப்பாளிகளுக்குக் காணிக்கை என்று பதிவு செய்திருக்கிறார். “எவன் வானத்தையும் பூமியையும் பயன்படுத்தி, தான் வாழ்வதோடு பிறரையும் வாழ வைக்கிறானோ, அவனுக்கு…” என்று காணிக்கையாக எழுதுகிறார்.

திரைப்படத்துறையில் ஆர்வம் காட்டிய விந்தன், சில படங்களுக்கு கதை, வசனம் மற்றும் பாடல் களை எழுதினார். அப்படி எழுதிய பாடல்களில் ஒன்று இப்படி இருக்கிறது. “ஒண்ணும் புரியவில்லை தம்பி எனக்கு / ஒண்ணும் புரியவில்லை தம்பி /கண்ணு ரெண்டும் சுத்துது / காதை அடைக்குது /கஞ்சி கஞ்சி என்று வயிறு / கெஞ்சிக் கேட்குது … மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை/ மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை /சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது / ஆலையிலே அவனாவிப் புகையாக போகுது.” இந்தப் பாடல் 1953இல் வெளிவந்த ‘அன்பு’ எனும் திரைப்படத்திற்கு எழுதியது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களுக்கு முன்னோடியாக இப்பாடலைக் காண முடிகிறது.

1950 ஆம் ஆண்டுகளில், தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு புதிய செயல்கள் நடைபெறத் தொடங்கின. இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்திருந்தது. திராவிட இயக்கக் கட்சிகளும் வலிமை பெறும் சூழல் உருவானது. இராஜாஜி குலக்கல்வியை நடைமுறைப்படுத்தினார். பெரியார், காமராஜர் ஆகியோர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் இராஜாஜி “பஜகோவிந்தம்” (1956) எனும் நூலை ‘மோக முத்கரம்’ எனும் சமஸ்கிருத நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். இந்நூலை எதிர் கொள்ளும் வகையில் “பசிகோவிந்தம்” (1956) எனும் ‘புடை நூல்’ விந்தன் எழுதினார். இவ்வகையில் பண்பாட்டுப் போராளியாகவும் விந்தன் செயல்பட்டார்.

தினமணிக் கதிரில் “மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்” (1969) எனும் அல்புனைவுத் தொடர் ஒன்றை எழுதினார். விக்ரமாதித்தன் கதை அமைப்பை தழுவி, நடைமுறை வாழ்க்கையை நகையாடுவதாக அவை அமைந்துள்ளன. சமூகத்தின் பிரபலமான திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என்று 32 பேர் குறித்த எள்ளல் பாணியில் அமைந்த அல்புனைவு அது. இந்த வரிசையில், ‘ஓ மனிதா’ எனும் தொடரையும் தினமணிக் கதிரில் எழுதினார். இதில் விலங்குகளும், பறவைகளும், மனிதனைப் பார்த்துப் பேசும் ‘கதைக் கட்டுரை’கள் அவை. இதில் விந்தனின் எள்ளல் வடிவில் அமைந்த சமூக விமர்சனங்களைக் காண முடிகிறது.

இராஜாஜி குலக்கல்வியை நடைமுறைப்படுத்தினார். பெரியார், காமராஜர் ஆகியோர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் இராஜாஜி ‘‘பஜகோவிந்தம்” (1956) எனும் நூலை ‘மோக முத்கரம்’ எனும் சமஸ்கிருத நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். இந்நூலை எதிர் கொள்ளும் வகையில் ‘‘பசிகோவிந்தம்’’ (1956) எனும் ‘புடை நூல்’ விந்தன் எழுதினார். இவ்வகையில் பண்பாட்டுப் போராளியாகவும் விந்தன் செயல் பட்டார்.

‘ஹரிதாஸ்’ (1944) திரைப்படத்தின் மூலம் மிகுந்த செல்வாக்கு மிக்க கருநாடக இசைக் கலைஞராக எம்.கே.தியாகராஜ பாகவதர் அறியப்பட்டார். விளிம்பு நிலைச் சமூகத்தில் இருந்து திரையுலகத்திற்கு வந்த அவரின் வாழ்க்கை வரலாற்றையும் விந்தன் தொடராக எழுதினார். அத்தொடர் பல அரிய சமகால நிகழ்வுகளைக் ‘கதை வடிவ’த்தில் சொல்கிறது. இந்த வடிவத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கைத் தொடரையும், அவரிடம் பேட்டிக்கண்டு வெளியிட்டார். எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட காலத்தில், இத்தொடர் வெளிவந்தது. இவ்வகையில் எம்.ஆர்.ராதாவின் பல பரிமாணங்களை இத்தொடரில் வெளிக்கொண்டு வந்தார் விந்தன்.

விந்தன், கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி வடிவத்தில் “பெரியார் அறிவுச்சுவடி” என்னும் குறுநூல் ஒன்றையும் எழுதினார். அவர் மறைவிற்குப் பின் இந்நூல் அச்சு வடிவம் (1979) பெற்றது. இந்நூல் பெரியாரின் கருத்துக்களை ஆத்திச்சூடி வடிவில் பேசுவதாக அமைகிறது.

விந்தனின் புனைவுலகம் பற்றியப் பேச்சோடு, அவரது அல்புனைவு உலகம் பற்றியும் உரையாட வேண்டும். அதற்கான சிறிய அறிமுகமாக இக் கட்டுரை அமைகிறது. விந்தன் மறைந்து, 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவரது ஆக்கங்கள் நம்மிடையே உள்ளது. அவற்றை மக்கள் பதிப்பாகக் குறைந்த விலையில் வெளியிட வேண்டும் என்று ‘சீர் வாசகர் திட்டம்’ திட்டமிடுகிறது. விந்தனை வாசிப்போம்; விந்தனைக் கொண் டாடுவோம்.

(விந்தன் மறைவின் 50ஆம் ஆண்டின் நினைவேந்தலாக இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது)

நன்றி : ‘இந்து தமிழ் திசை’ 10.8.2025

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *