டாக்டர் சூரியா – டாக்டர் ராகுல் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

16 Min Read

* என்னுடைய பெயர்த்தி சூரியாவின் திருமணம் – எங்கள் வீட்டில் நடைபெறும் நான்காவது தலைமுறை சுயமரியாதைத் திருமணம்!
* மணமக்கள் படித்தவர்கள் – டாக்டர்கள் – ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணையராகி இருக்கின்றனர்!
*சுயமரியாதை என்பது ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே!
வாழ்க்கையில் ஆடம்பரம் கூடாது; எளிமையே முக்கியம்!
சிறந்த மருத்துவராக இருப்பதோடு, சிறந்த ‘‘மனிதர்களாகத்’’ தொண்டறத்துடன் வாழுங்கள்!

சென்னை, செப்.2-  சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவம் என்பது ‘அனைவருக்கும் அனைத்தும்’ – ‘ஆண் – பெண் சமத்துவம்’, ‘மானமும், அறிவும் மனித ருக்கு அழகு’ என்பதாகும். ஆடம்பரத்தைத் தவிர்த்து, எளிமையாக வாழவேண்டும் என்றார்  டாக்டர் சூரியா – டாக்டர் ராகுல் மணவிழா வரவேற்பு விழாவிற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்: சூர்யா – ராகுல்

கடந்த 30.8.2025 அன்று  மாலை, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்டில்,  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் – சுதா ஆகியோரின் செல்வி டாக்டர் சூரியாவிற்கும், சென்னை வீரராக வன் – பேராசிரியர் லோச்சினி ஆகியோரின் செல்வன்  டாக்டர் ராகுலுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்விற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

மிகுந்த எல்லையற்ற மகிழ்ச்சியோடு நடை பெறக்கூடிய மணவிழா வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்து, எங்களையெல்லாம் பெருமைப்படுத்துகின்ற அறிவார்ந்த பெருமக்களே!

குறிப்பாக, எங்கள் குடும்பத்திற்கு மிக நெருக்க மாக இருக்கக் கூடியவரும், தமிழ்நாட்டில், எல்லா கட்சியினராலும், எல்லா மதத்தினராலும், எல்லா வகுப்பினர்களாலும், தொழிலதிபர்கள் எல்லோரா லும் மதிக்கப்படக் கூடியவரும், பொது மனிதராக இருக்கக்கூடியவரும், ‘அண்ணாச்சி’ என்று எல்லோரா லும் அன்பாக அழைக்கப்படக்கூடிய அய்யா முது முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்களே,

இம்மணவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற, விருந்தினர் பெருமக்களான, அழைப்பாளர்களான தோழர்களே,  நண்பர்களே! கொள்கை உறவுகளே, குருதி உறவுகளே!! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் குடும்பத்திற்கு உரியவன் என்ற முறையில், உங்களையெல்லாம் வருக! வருக! வருகவென்று அனைவரையும் வரவேற்கவேண்டிய மகத்தான பொறுப்பு எங்களைப் போன்றவர்களுக்கு உண்டு. அதனால், மிகுந்த மகிழ்ச்சியையும் அடைகிறோம்.

மழை மிரட்டியது- ஆனாலும்,
நாம்தான் வெற்றி பெற்றோம்!

மேடைக்கு வந்து அமரும்போது, மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. ‘‘அடாது மழை பொழிந்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும்’’ என்பதைப்போல, கூட்டங்களில் மழை பொழிந்தாலும், நாங்கள் எழுந்தி ருப்பதில்லை. எங்களுக்கும் – மழைக்கும் போட்டி வரும். அப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் – மழை தோற்றுப்போகும்.

இங்கேகூட உரையாற்ற முடியுமா? என்று நினைத்தேன்.  உரையாற்றவேண்டும் என்று இயற்கை வழிவிட்டிருக்கிறது.

ஆகவே, அதனைப் பயன்படுத்திக்கொண்டு, உரை யாற்றுவதற்கு முன், உங்களையெல்லாம் வரவேற்கின்ற நேரத்தில், ஒன்றைச் சொல்லி, என் உரையைத் தொடங்குகின்றேன்.

மணமக்களைப்பற்றி எங்களின் மூத்த பெயர்த்தி பொறியாளர் கவின் அவர்கள், மிக அழகாகச் சொன்னார். குறிப்பாக, எங்கள் குடும்பத்திற்கு, நான் இந்தக் குடும்பத்தினுடைய மூத்தவன் என்பது மட்டுமல்ல, சூரியாவினுடைய தாத்தா. எங்களுடைய செல்லப் பெயர்த்திகள் இவர்கள் எல்லாம்!

செல்லப் பெயர்த்திகள் மட்டுமல்ல, நல்ல பெயர்த்திர்களும்கூட! பல நேரங்களில், செல்லப் பெயர்த்திகளுக்கும், நல்ல பெயர்த்திகளுக்கும் வித்தியாசம் உண்டு. பெயரர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்; அவர்களும் இதில் அடக்கம்தான்.

உணவுப் பரிமாறுவதைவிட மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வது மிகவும் முக்கியம்!

காலங்காலமாக பெண்கள் சமுதாயத்தை ஒடுக்கி வைத்திருந்தார்கள். ஆகவேதான், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அளவிற்குத் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள்படி பலவற்றை நடைமுறைப்படுத்துகின்றோம்.

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி! இரண்டு மணி நேரத்திற்கு முன், கடற்கரை ஓரத்தில், 10 நிமிடங்களில் மணவிழா உறுதிமொழி ஏற்கச் செய்த மணவிழாவை மிகமிக எளிமையாக நடத்திவிட்டோம்.

இந்த மணமுறை எளிமையாக, அழகாக இருக்கிறது. மணவிழா வரவேற்பு என்பது விருந்தினர்கள் எல்லோ ரையும் சந்திக்கக்கூடிய, மகிழ்ச்சியை நாம் பரிமாறிக் கொள்ளக்கூடியதாகும். உணவுப் பரிமாறுவதைவிட, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வது மிகவும் முக்கிய மாகும்.

இன்றைக்கு ஓர் அழகான இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வி.ஜி.பி. கோல்டன் பீச்சில்தான் எங்கள் இல்ல மணவிழாக்கள் சில நடைபெற்றுள்ளன. எங்களுடைய இல்லம் போன்று இந்த இடத்தை நினைக்கின்றோம். ஏனென்றால், இங்கேதான் சமரசம் – எல்லா வகையிலும் பொது மரபு உள்ள இடம்.

‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்று ஒரு தத்துவமாக இருக்கக்கூடிய இடமாகும் இது. நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள். இன்னும் பலர்  போக்குவரத்து நெருக்கடியால், சற்று தாமதமாக வரவிருக்கிறார்கள்.

மணமக்கள் இரண்டு பேரும் மருத்துவர்கள் என்பதால், மற்ற விருந்தினர்கள் நிறைய சாப்பிடலாம் என்றெல்லாம் கவின் சொன்னார்.

அதைவிட மிக முக்கியமான ஒரு செய்தியை மகிழ்ச்சியோடு சொல்லுகிறேன்.

இது எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறை  – சுயமரியாதைத் திருமணம்!

இந்தக் குடும்பத்தில், இம்மணவிழா – நான்காவது தலைமுறையின் சுயமரியாதை மணவிழாவாகும். சுயமரியாதைத் திருமணம்  என்ற தந்தை பெரியார் கொள்கை இங்கு பெருவெற்றி பெற்றிருக்கின்றது!

நம்முடைய சூரியாவினுடைய கொள்ளுப்பாட்டி ரங்கம்மாள் – கொள்ளுப்பாட்டனார் சிதம்பரம் ஆகியோ ருடைய திருமணம் 1934 இல், தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அதற்கடுத்து, அவர்களுடைய மூத்த மகள்  மோகனா – என்னுடைய வாழ்விணையர்.

தந்தை பெரியார் அவர்களே பார்த்து ஏற்பாடு செய்த மணவிழாதான் எங்களுடைய மணவிழா! திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

எங்களுடைய (கி.வீரமணி – மோகனா) மூத்த மகன் அசோக்ராஜ் அவர்களும், அவரது வாழ்விணையரும் வந்திருக்கின்றார்கள். இரண்டு மகள்களும் இங்கே வந்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்களுடைய இரண்டாவது மகன் அன்புராஜ் – சுதா ஆகியோருடைய மணவிழா சுயமரியாதை மணவிழா முறையில், சீர்திருத்த முறையில், ஜாதியைப்பற்றியோ, மதத்தைப்பற்றியோ கவலைப்படாத மணவிழாவாக – மனிதநேயத்தைப்பற்றி மட்டுமே கவலைப்படக்கூடிய மணவிழாவாக நடைபெற்றது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

எனக்கு இப்போது 92 வயது. எங்களுடைய திருமணம் 66 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்; எங்களுடைய பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மகன் அன்புராஜ் வெளிநாடு செல்லாததற்குக் காரணம் – பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பதற்கே!

இருபால் பிள்ளைகள் சிலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அன்புராஜ் அவர்களுக்கு, அவருடைய தாய் – தந்தை என்ற முறையில் நன்றி சொல்லிக் கொள்கிறோம். இதைச் சொல்வதால், வெளிநாட்டில் உள்ள எங்கள் பிள்ளைகள் தவறாக நினைக்கமாட்டார்கள்.  அவர்கள் வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது.

இந்த நேரத்தில், இதனைப் பதிவு செய்வது எங்களுடைய கடமையாகும்.

அன்புராஜ் அவர்களையும், அவரது குடும்பத்தி னரையும், வெளிநாட்டிற்கு வந்து தொழில் செய்யுங்கள் என்று ஆஸ்திரேலியாவிலிருந்த அவருடைய நண்பர்கள் அழைத்தார்கள். அதே போன்று, அமீரகத்தில் உள்ள நண்பர்களும் அழைத்தார்கள்.

அப்போது அன்புராஜ் அவர்கள் சொன்னார், ‘‘என்னுடைய அண்ணன், சகோதரிகள் எல்லோரும் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார்கள். என்னுடைய அப்பா, அம்மாவோடு கடைசிவரையில் நான் அவர்களோடுதான் இருப்பேன். வெளிநாட்டிற்கு வரமாட்டேன்’’ என்றார்.

இதைச் சொல்வதால், மற்ற பிள்ளைகளை நான் குறை சொல்வது என்று ஆகாது.

அந்த உணர்ச்சியோடு, இன்றைக்கும் அவர் எங்களோடு இருக்கின்றார். எங்கள் உடல் நிலைக்காகவும், எங்களுக்கு உறுதுணையாகவும் உள்ளார்.

நம்முடைய கவின் அவர்களானாலும், சூரியா பாப்பா அவர்களானாலும், தம்பி கபிலன் அவர்களானாலும் மற்றும் குடும்பத்தினர் ஆனாலும் எங்களுக்கு ஒரு பெரிய “அசெட்ஸ்’’ – ‘‘நோ லயேபிளிட்டிஸ்’’ (Assets – No Liabilities)

எதைச் சொன்னாலும், ஒரு சிறிய புன்னகையோடு செல்பவர்தான், எங்களுடைய  அருமை மருமகள் சுதா. அவரை மருமகள் என்று நாங்கள் சொல்லமாட்டோம்; எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களுடைய மூத்த மகள். (எல்லா மருமகன்களும், மகன்களைப்போல! மருமகள்களும் அப்படியே).

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு, பெயரத்திகளுக்கு நல்ல மணமகன்கள் அமையவேண்டுமே என்ற ஒரு பொறுப்பும், கவலையும் எங்களுக்குள் இருந்தது.

‘‘அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்; நாங்களே அதைப் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மணமக்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் வேலை வைக்கவில்லை! மணமக்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் படித்தவர்கள்; ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டவர்கள். அதனால், எங்களுக்கும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறோம்.

எனக்கு எப்போதும் எதிலும் கொள்கைப் பார்வைதான் – பெரியார் தொண்டன் என்ற முறையில்.

எங்களுக்குக் கிடைத்திருக்கும் சம்பந்திகளின் சிறப்பு!

எங்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், இந்தக் குடும்பத்திற்குப் புதிதாக வந்திருக்கின்ற புதிய சம்பந்தி அவர்கள். அவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றையும்விட, மணமகனின் பெற்றோர் – தொழிற்சங்கத் துறையில் பணியாற்றிய அய்யா திரு.வீரராகவன் அவர்களானாலும், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அம்மா திருமதி. லோச்சனி அவர்களானாலும் காதல் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது எங்களுக்குப் பெருமிதம். மணமகளின் பெற்றோரான அன்புராஜ் – சுதா ஆகியோரும் காதல் மற்றும் ஜாதி மறுப்பு, மாநில மறுப்புத் திருமணம் செய்தவர்கள்.

அதே  கொள்கைப் பாரம்பரியத்தை இன்றைக்கும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கும் பெருமை. இந்தக் கொள்கையை நிலைநாட்டுகிறோம் இரு வீட்டாரும்!

நான், 10 வயதில் மேடை ஏறியவன்; என்னு டைய பொதுவாழ்க்கை என்பது 82 ஆண்டு களாகும். பெரியார் கொள்கையைத் தவிர வேறு கொள்கையைப் பின்பற்றாதவன் நான்.

அப்படிப்பட்ட எங்களுடைய இல்லத்தில், மணவிழாக்கள் சரியாக அமையவேண்டுமே – மேடையில் எதைப்பற்றி பேசுகிறோமோ, அது நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பொறுப்பு எப்போதும் எனக்கும், என்னுடைய வாழ்விணையருக்கும் உண்டு.

அப்படி வரும்போது, எங்களுக்குக் கிடைத்ததற்கரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் மணமக்கள் இருவரும். அதற்காக அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய அளவிற்கு, எங்கள் பிள்ளைகள், எங்கள் பெயரப் பிள்ளைகள்கூட இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றவர்கள்தான்.

அவர்கள் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் செய்தார்களா என்பது பிறகு. இயல்பாகவே விழுதுகள் அப்படி வளர்க்கப்பட்டவர்கள்!

மணமகன் டாக்டர் ராகுல் எங்களுக்குக் கிடைத்தி ருப்பது மிகவும் மகிழ்ச்சி. அவருடைய பெற்றோர், அவரை மிகச் சிறப்பாக வளர்த்திருக்கிறார்கள். என்னுடைய பெயர்த்தி சூரிரியா வேண்டுமானாலும், கொஞ்சம் அதிகமாகப் பேசுவார். ஆனால், மணமகன் ராகுல் மிகவும் அமைதியானவர்.

‘‘மணமகன் பெற்றோர், ராகுல் என்று ஏன் அவருக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா?’’ என்று எங்களுடைய பெயர்த்தியை அழைத்துக் கேட்டேன்.

‘‘தெரியாது அய்யா எனக்கு’’ என்றார்!

சித்தார்த்தன் என்கின்ற நமது புத்தருடைய வர லாற்றின்படி, யசோதாவிற்கும் – சித்தார்த்தனுக்கும் பிறந்த குழந்தைக்கு ‘ராகுல்’ என்று பெயர் வரலாற்றில் வைத்திருப்பார்கள். அதைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள், மணமகனின் பெற்றோர். அதுவே மிக அற்புதமான, மிகச் சிறப்பான நிகழ்வாகும்.

பிள்ளைகள் விரும்புகிறார்கள் என்றால், அவ்வளவுதான் – நமக்கு வேலை இல்லை!

பிள்ளைகள் இரண்டு பேரும் நன்கு புரிந்து, பிறகு விரும்புகிறார்கள் என்றவுடன், மணவிழா ஏற்பாட்டிற்காக, மணமகன் பெற்றோரிடம் சென்று பேசச் சொன்னேன் அன்புராஜ் அவர்களிடம்.

மணமகன் பெற்றோர் இரண்டு பேரும், மிகவும் மகிழ்ச்சியோடு, ‘‘எங்களுக்கு உடன்பாடுதான்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, ‘கொள்கையில்  மிகப்பெரிய அளவிற்கு வெற்றியடைந்துள்ளோம்’. அதற்காக, சம்பந்திகளுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

ஏனென்றால், நாங்கள் இம் முறையில், மணவிழாவை நடத்துவது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகும். எங்களுடைய குடும்பத்துப் பிள்ளைகள், இந்தக் கொள்கையைத் தவிர, வேறு கொள்கையை சுவாசித்தது கிடையாது.

மணமகன் குடும்பத்தினர் இதற்கு ஏற்கெனவே பக்குவமாகியிருக்கிறார்கள்.  அது எங்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய அரிய வாய்ப்பாகும். முதலில் அவர்களை, எங்கள் குடும்பத்தின் சார்பாக பாராட்டுகிறோம்.

இந்தக் குடும்பத்தினுடைய மூத்த உறுப்பினர் என்பது மட்டுமல்ல, ஜாதி மறுப்பில், மனிதநேயத்தில், சுயமரியாதைக் கருத்தில் உறுதியாக உள்ள ஒரு பெரியார் தொண்டன் என்கின்ற முறையில் நானும், மணமகன் பெற்றோரைப் பாராட்ட நாங்கள் அனைவரும் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

எங்கள் அன்பைத் தெரிவிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்பு செய்கிறோம். (மணமகன் பெற்றோருக்குப் பொன்னாடை அணிவிக்கப்பட்டது).

நண்பர்களே, இந்த மணவிழாவைப் பொறுத்த வரையில், சிறப்பாக நடைபெறுகிறது.

ஏனென்றால், இந்த அரங்கம் பலதரப்பட்டவர்களைக் கொண்டிருக்கின்றது. முதன்முறையாக இப்படி ஒரு மணவிழாவைப் பார்க்கின்றவர்களும் இதில் இருப்பார்கள்.

நிறைய படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பல்துறை தொழிலதிபர்கள் என்று இப்படி எல்லோரும் கலந்த ஓர் அரங்கமாக இந்த அரங்கம் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டத்தகுந்ததாகும்.

ஒரு சில கருத்தகளை நான் இங்கே சொல்கிறேன்.

சுயமரியாதைத் திருமணத்தின்
தத்துவம் என்ன?

சுயமரியாதைத் திருமணம் என்ற இந்தத் திருமண முறை என்பது யாரையும் சங்கடப்படுத்துவதற்கு அல்ல. வெறுப்பின்மீதோ, குற்றம் சுமத்துவது போன்றோ அல்ல. சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல், மணமக்கள் இங்கே மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கின்றார்கள்.

இம்மணவிழா உறுதியேற்பு 10 நிமிடங்களில், மிக எளிமையாக நடைபெற்றது. ஆனால், இங்கே நடைபெறும் மணவிழா வரவேற்பு என்பது சற்று ஆடம்பரம்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

நான் மகிழ்ச்சியோடு இருக்கின்ற இந்த இடத்தில், கொஞ்சம் மன ஒதுக்கீடு இருப்பது இந்த ஆடம்பரத்தைப் பொறுத்துதான்! அதற்குக் காரணம், ‘அண்ணாச்சி’ போன்றவர்கள், இவ்வளவு பெரிய இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். நமது அன்புராஜ் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

எங்களுடைய மணவிழா மிகச் சாதாரணமாக நடைபெற்றது. ஆனால், இன்றைக்கு இளைய தலை முறைப் பிள்ளைகளைப் பார்த்தீர்களேயானால், அவர்களுடைய மனநிலை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது! ‘இப்படி நடைபெறவேண்டும்; அப்படி நடைபெறவேண்டும்’ என்று நினைக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் நினைக்கவேண்டும் என்கின்ற எண்ணமே எங்களுக்கு உருவாகாத அளவிற்கு, எங்களுடைய சூழ்நிலைகள் இருந்தன. ஆனால், தலைமுறைகள் வேறுபடுகின்றன. அவர்க ளுடைய உணர்வுகளையும் நாம் ஓரளவிற்காவது மதிக்கவேண்டும் அல்லவா?

அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது, இந்த மணவிழா வரவேற்பில், மிகப்பெரிய அளவிற்கு மனிதநேயம் இருக்கின்றது.

‘‘அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி,

மனதுளே பேதா பேதம்

வஞ்சம், பொய், களவு, சூது

சினத்தையும் தவிர்ப் பாயாகில்

செய்தவம் வேறொன் றுண்டோ

உனக்கிது உறுதி யான

உபதேசம் ஆகுந்தானே!’’ என்று சுயமரியாதை இயக்கத்தின் ‘குடிஅரசு’ ஏட்டில் தொடக்கத்தில் இந்தப் பாடல்தான் இடம்பெற்றது. இப்போது இன்றைக்கு சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டாகும்.

சுயமரியாதைத் திருமண முறையில் நடை பெறக்கூடிய இம்மணமுறை – பெண்ணடிமையை நீக்கிய மணவிழா.

‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’’ என்றார் பெரியார்!

சமத்துவத்தை நிலைநாட்டி, ஜாதியை, மற்ற பேதங்களை நீக்கிய ஒன்றாகும்.

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வளர்ச்சி. இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகளை, பெண் பிள்ளை, வேறொரு ஜாதியைச் சேர்ந்தவரை விரும்பினார் என்கின்ற ஒரே காரணத்திற்காக, கூலிப் படையினரை வைத்து, ‘ஆணவக் கொலை’ செய்யும் செய்தியைத் தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் பார்ப்பது வேதனையாக இருக்கிறது.

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – பெரியார் திடலில் இருக்கிறது. அதில், நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள். சட்டப்படி வயது சரியாக இருக்கிறதா? என்பதைத்தான் பார்ப்பார்கள்.

மணமகனின் பெற்றோர், இம்மணவிழா முறைக்கு ஒப்புக்கொண்டார்கள் என்பது மிகவும் சிறப்பாகும்.

மனிதர்கள் எல்லோரும் சமம்; உறவு என்றால், மனித உறவுகள்தான். மானுட நேயம்தான் மிகவும் முக்கியம்.

தந்தை பெரியார் சொன்னார், ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’’ என்று.

அந்த மானம், அறிவு என்று சொல்லக்கூடிய வாய்ப்பு தெளிவாக வந்ததனுடைய விளை வாகத்தான், ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணங்கள்!

ஜாதிக்கு என்ன அடையாளம்?

ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று சொன்னால், அது அவரவர்களது உரிமை. ஒருவருக்குப் பிடிக்காத படிப்பை நாம் திணிக்க முடியாது; பிடிக்காத உடையை நாம் திணிக்க முடியாது.

ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை யாக இருந்தாலும், அவர்களை வளர்ப்பதற்குப் பெற்றோர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள். ஆனால், பெற்ற பிள்ளையை, கூலிப் படைக்குப் பணம் கொடுத்து கொல்லச் சொல்கிறார்களே!

எவ்வளவு கொடுமை! கொடிய கொடுமை!!

ஜாதிக்கு என்ன அடையாளம்?

ஜாதிக்குத் தனியாக ரத்தம் உண்டா?

‘இந்த ஜாதி ரத்தம், அந்த ஜாதி ரத்தம்’, என்று ரத்தத்தில் ஜாதி உண்டா? என்றால், கிடையவே கிடையாது.

ரத்தத்தில், ‘ஓ பிரிவு, ஏ1 பிரிவு’ என்றுதான் உண்டு. ‘ஏ1, பி1, ஓ பாசிட்டிவ்’ என்பதுபோல் உண்டு.

‘‘என்னுடைய ஜாதிப் பெண்ணாக இல்லையே, என்னுடைய ஜாதி மாப்பிள்ளையாக இல்லையே’’ என்று சொல்லக்கூடிய ஜாதி வெறியர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்; மாரடைப்பு வந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும்போது, ‘‘என்னுடைய ஜாதி டாக்டர் இருக்கிறாரா? என்னுடைய ஜாதி செவிலியர் இருக்கிறாரா?’’ என்று கேட்பீர்களா?

‘‘என்னுடைய ஜாதிக்கு தனியாக ஸ்டெத்ஸ்கோப் இருக்கவேண்டும்’’ என்றும், ‘‘தனியாக ெதர்மாமீட்டர் வைக்கவேண்டும்’’ என்று சொல்வீர்களா?

இப்படிப்பட்ட ஒரு ‘வெறித்தனம்’ இருக்கின்ற நேரத்தில், இதுபோன்ற மணவிழாக்கள் அவர்களுடைய கண் திறப்பைச் (Eye Opener) செய்யட்டும்!

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இங்கே அமர்ந்திருக்கும் மணமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஜோதிடம் பார்ப்பது அறிவுடைமையா?

ஜோதிடத்தைக் காரணம் காட்டி மண விழாக்களுக்குத் தடை சொல்வதென்பது ஏற்புடையதா? தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘ஒரு நாய் பிறந்ததற்கும் பெயர் வைத்து; ஒரு பூனை பிறந்ததற்கும் பெயர் வைத்து, இரண்டையும் கொண்டு போய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, இதற்குப் பொருத்தம் பாருங்கள்’’ என்று சொன்னால், ‘‘பேஷாக இருக்கிறது’’ என்றுதான் சொல்வார் என்பார்.

அதேபோன்று, ‘இறந்து போனவர்களின்’ ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் கேட்டாலும், இறந்து போனது தெரியாமல், ஜாதகம் பார்த்துச் சொல்வார்கள். இதுதான் மூடநம்பிக்கை.

அந்த மூடநம்பிக்கை இல்லாமல், இந்த மணமுறையில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார்கள். அதைவிட, அவர்களுடைய பெற்றோர் முழு மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார்கள்.

புதிய உறவுகள் என்று சொன்னாலும், அரிய வரவுகள் என்று பெருமையோடு சொல்லி, மணமக்களுக்கு நான் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. சில வேண்டுகோள்களை வைக்கிறேன்.

உங்களுடைய மணவிழா  சற்று ஆடம்பரமாக நடைபெறுகிறது. இதுபோன்ற ஆடம்பர ஆசைகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

கொள்கையில் நாங்கள் வெற்றி பெற்றாலும், இப்படி ஆடம்பரமாக நடைபெறுவதை நாங்கள் ஒப்புக்கொள்வதில்லை.

பிள்ளைகள், எங்களிடம் உரிமை எடுத்து, இப்படித்தான் நடத்தவேண்டும் என்று சொல்கிறார்கள். வேறு வழியில்லாமல் நாங்களும் ஒப்புக்கொள்ள வேண்டியதாக உள்ளது.

மணமக்கள் இரண்டு பேரும் மருத்துவர்கள். மணமகள் சூரியா பாப்பா, புத்தகம், படிப்பைத் தவிர, அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது வளர்ந்த பிள்ளை!

ஆனால், படிப்பில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு படிப்பவர்கள்.

மணமகன், இங்கிலாந்தில் பல்கலைக் கழகப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

வாழ்க்கையில் நீங்கள் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இங்கே வந்திருப்பவர்களுக்காகவும் சொல்கி றேன். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அன்பான வேண்டுகோளாகவும் இதை வைக்கிறேன்.

உடைகள் அணிவது அவரவர்களுடைய விருப்பம்தான். இதுபோன்று ஆடம்பர உடைதான் அணியவேண்டும் என்று சொல்ல முடியாது; அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆடம்பரம் கூடாது –
எளிமை வேண்டும்!

தந்தை பெரியார் சொல்வார், ‘‘நம்முடைய பெண்களை ‘அலங்கார பொம்மையாக’ ஆக்குகின்றோம். இன்னொரு பக்கம், ‘பிள்ளை பெறும் இயந்திரங்களாக ஆக்குகிறோம்;’ ‘சமையல் கருவிகளாக’ ஆக்குகின்றோம்’’ என்று.

அதையெல்லாம் இன்றைக்கு மாற்றித்தான், மருத்துவர்களாக வந்திருக்கிறார்கள். ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, நீதிபதிகளாக, வழக்குரைஞர்களாக, பொறியாளர்களாக வந்துள்ளார்கள்.

நீங்கள் விரும்புகின்ற உடைகளை அணியுங்கள். ஆனால், ஒரே ஓர் அளவுகோலைக் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் அணிகின்ற உடை, உங்களுக்கு வசதி யானதா? 12 மணிநேரத்திற்குமேல் அந்த உடையை அணிய முடியுமா? என்கிற கேள்விக்குப் பதில் கிடைத்தால் போதும். எப்போது இந்த உடையை மாற்றுவோம் என்று அவஸ்தைப்படுவது என்பது இருக்கக்கூடாது.

ஒரு நாள் இந்த உடையை அணிந்தால், அதற்குப் பிறகு அதே உடையை எத்தனை ஆண்டுகள் கழித்து அணிவார்கள் என்பதும் தெரியாது!

ஆனால், அந்த உடை என்பது உங்களுக்கு வசதியாக இருக்கவேண்டும். ‘‘எலகண்ட் அன்ட் டீசன்சி’’ (Elegant and Decency) என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கட்டும்.

ஆடம்பரம் என்று சொல்லக்கூடிய அளவிற்குரிய உடைகளோ, நகைகளோ தேவையில்லை. நகைகள் அணிவது எவ்வளவுக்கெவ்வளவு ஆபத்து என்பது, சாலைகளில் நடந்து செல்லும்போது தெரியும்!

புன்னகை என்பதுதான் பொன் நகையைவிட மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, புன்னகையை நம்புங்கள்; பொன் நகையை அதிகமாக நம்பாதீர்கள். பிள்ளைகள் மாறி வருவது பாராட்டத்தக்கது. பொன் நகை, உயிருக்குப் பாதுகாப்பு அரண் இல்லாததாக இருக்கிறது என்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கே வந்திருக்கின்றவர்கள் எல்லோருக்கும் சொல்கிறோம்.

மணவிழாக்களுக்கு பட்டுப்புடவை அணிவது தான் மிகவும் சிறப்பு என்று சொல்கிறார்கள். ஆனால், பட்டுப்புடவை  கட்டிக்கொண்டு வருபவர்கள், இன்னொரு மாற்றுப் புடவையை வைத்திருப்பார்கள். எவ்வளவு சீக்கிரத்தில், பட்டுப்புடவையை மாற்றவேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று குறியாய் இருப்பார்கள்.

ஆகவேதான், எது உங்கள் உடலுக்கும், அறிவுக்கும் எது வசதியோ, வாழ்க்கைக்கு எது வசதியோ அதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லி, இந்த உணர்வுகளை, கொள்கைகளைப் பெரியார் தொண்டர்கள் எங்கும் மறைப்பதில்லை.

ஆகவேதான், சொந்தக் குடும்பமாக இருந்தாலும்,  சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும் என்பது எனது கடமை. மணமக்கள் சிறப்பாக வாழவேண்டும். இந்த மணமக்கள் இரண்டு பேரும் மருத்துவர்கள். மருத்துவப் படிப்பு என்பது உயர்ந்த சேவையாகும். நீங்கள் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றுகிறீர்கள்.

வருமானத்தைவிட,
பெருமானமே முக்கியம்!

நீங்கள் என்ன படிக்கலாம் என்கிறபோது, ‘நிறைய’ வருமானம் வருவது எது? என்று பார்க்கக் கூடாது. அதைவிட பெருமானம் – வெகுமானம் எதுவென்று சொன்னால், ‘‘ஒருவர் ஓடி வந்து, என்னுடைய குழந்தையை நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்’’ என்று சொல்லி, அதற்குப் பிறகு ‘‘நன்றி!’’ என்று சொல்கிறார்களே, அதற்குச் சமம் எத்தனைக் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. அதுதான், மருத்துவத் துறையில் இருக்கின்ற மிகப்பெரிய தனிச்சிறப்பாகும்.

ஆகவேதான், நீங்கள் சிறந்த மருத்துவர்களாக இருப்பதோடு, சிறந்த மனிதர்களாகவும் இருங்கள்.

மனிதநேயம் மிகவும் முக்கியமாகும்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றி
னார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *