‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழ் முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கைகளை பரப்புவதற்காக தொடங்கப்பட்டது. இந்த இதழ், பகுத்தறிவுச் சிந்தனையை மய்யமாகக் கொண்டு, மூடநம்பிக்கைகள், ஜாதி, சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது.
இதழின் முக்கியத்துவம்
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இந்தியாவில் பகுத்தறிவாளர் இயக்கத்தின் முதன்மைக் குரலாக விளங்குகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழ் மொழியைக் கடந்து உலகப் பரப்புக்குக் கொண்டு செல்வதுடன், ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்கும் புதிய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
சமூக நீதி, பெண்ணுரிமை, மாநில உரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கிறது. பன்னாட்டு அளவில் செல்வாக்கு பெற்ற இந்த இதழ் modernrationalist.com இணைய தளத்திலும், மாக்ஸ்டர் (Magzter) போன்ற இணைய தளங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் உலகளவில் பகுத்தறிவு ஆர்வலர்களை சென்றடைகிறது.
இதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களாவார்.
சென்னையில் முதன்முதலாக நிகழ்ந்த மேக வெடிப்பு
பல்வேறு பகுதிகளில் கடும் மழை
சென்னை, செப். 1- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (30.8.2025) நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் புழுக்கமும் நிலவியது. நேற்று முன்தினம் (30.8.2025) காலை முதலே கடும் வெயில் இருந்தது. இந்த நிலையில், இரவு 11 மணிக்கு மேல் லேசான தூறலுடன் தொடங்கிய மழை, கனமழையாக கொட்டித் தீர்த்தது. நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பிறகும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை நீடித்தது.
‘சென்னையில் ஆக.30ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் 3 இடங்களில் அதிகனமழை, 8 இடங்களில் மிக கனமழை, 28 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ., மணலி புதுநகரில் 26 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேக வெடிப்பே இதற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
அதிகனமழை காரணமாக, சென்னை வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. 23 விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டது. திடீர் கனமழை, பாதிப்புகள், முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம், ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று (1.9.2025) லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். செப்.2 முதல் 6ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.