திராவிடம் என்பது வெறும் மொழியையும், இடத்தையும் பொருத்ததல்ல! திராவிடம் என்றால் மனிதம்!
‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவில்
தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்
சென்னை, ஜூன் 2 திராவிடம் என்பது – எங்கெங் கெல்லாம் பேதம் இருக்கிறதோ அவற்றை விரட்டி யடிப்பது என்று பொருள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா – ‘விடுதலை’ நாளேட்டின் 89 ஆம் ஆண்டு விழா!
நேற்று (1.6.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா – ‘விடுதலை’ நாளேட்டின் 89 ஆம் ஆண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யுரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
மிகுந்த மகிழ்ச்சியோடு, எழுச்சியோடு நடைபெறக் கூடிய ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளி யீட்டு விழா – ‘விடுதலை’ நாளேட்டின் 89 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
அறிமுக உரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மிக அருமையானதொரு உரையாற்றி – சிறப்பாக உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கக் கூடியவரும், ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதியை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர் களே, உலக மகாகவி என்று அவருக்கு சிறப்பு செய் தார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த இன உணர் வாளர்; மொழி உணர்வாளர்; பகுத்தறிவாளர் – எல்லா வற்றையும்விட தன்னுடைய பெயருக்கு முன்னால் ஈரோடு என்று ஊர் பெயரை இணைத்துக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றை உருவாக்கிய தமிழன்பன் அவர்களே,
அதேபோல சிறப்பான வகையில் இந்நிகழ்ச்சியில் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர், எப்பொழுதும் நம்முடைய நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுக்காமல் இருக்கமாட்டார்; உரிமையோடும், உறவோடும் அவரை அழைத்து நம்முடைய நிகழ்ச்சி களை நடத்துவோம் – அப்படிப்பட்ட மூன்றாவது குழ லான விடுதலைச் சிறுத்தைகளின் அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான வகையில் வாழ்த் துரை வழங்கிய, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைப் பாரம்பரியம்மிக்க அருமைச் சகோதரர், செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
கலைஞர் தொலைக்காட்சியின் ஆசிரியரும், சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான அருமைச் சகோதரர் மானமிகு ப.திருமாவேலன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் நன்றியுரை கூறவிருக்கின்ற தோழர் மரகதமணி அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற தமிழ்நாடு மூதறிஞர் குழுவைச் சார்ந்த பொறுப்பாளர்கள் நீதிபதி பரஞ்சோதி அவர்களே, சட்டப்பேரவை மேனாள் செயலாளர் செல்வராஜ் அவர்களே, பத்திரிகையாளர்களாக இருக்கக்கூடிய சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமான ‘ப்ரண்ட் லைன்’ மேனாள் ஆசிரியர் அருமைத் தோழர் விஜய் சங்கர் அவர்களே,
சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் தேவதாஸ் அவர்களே,
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களே, பொறியாளர்திவாகரன் அவர்களே,
பொருளாளர் குமரேசன் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே, மதிவதினி அவர்களே,
தலைமைக் கழக அமைப்பாளர்கள் பன்னீர்செல்வம் அவர்களே, தே.செ.கோபால் அவர்களே, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே, துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் அவர்களே, வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே, வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களே, வீரமர்த்தினி அவர்களே, வாசகர் வட்டத்தைச் சார்ந்த நண்பர்களே, அருமை நண்பர் மீனாட்சி சுந்தரம் அவர்களே, ஏனைய சிந்தனையாளர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய உரை நீண்ட நேரம் இருக்காது; இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், இது ஓர் அற்புதமான வரலாற்று நிகழ்ச்சி.
‘விடுதலை’ பணித் தோழர்களுடைய
கூட்டுப் பணித் தோழன்!
உண்மையில் நான் தொகுப்பாசிரியன் என்கிற முறையிலும், இதனுடைய பணியாளன் என்கிற முறை யிலும், ‘விடுதலை’ பணித் தோழர்களுடைய கூட்டுப் பணித் தோழன் என்கிற முறையிலும் அனைவருக்கும் நன்றி சொல்வதுதான் என்னுடைய உகந்த பணியாகும்.
இந்தப் பணி கடுமையான பணிதான்; தொடங்கி விட்டோம்; ஆனால், எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், நீண்ட கடலிலே அலைகளை எண்ணுவதுபோன்ற பணி இந்தப் பணி.
காலம் செல்லச் செல்ல – எத்தனைக் காலம் கடந்தும் அந்தப் பணி என்பது நடந்துகொண்டே இருக்கிற பொழுது, திருமாவேலன் அவர்கள் ஆய்வாளர் என்ற முறையிலே ஒரு கருத்தைச் சொன்னார்.
வாரப் பத்திரிகைகளில்கூட கொஞ்சம் தொகுத்து எடுத்துவிடலாம்; ஆனால், நாளேடுகள் என்று வரும் பொழுது, அதில் எதை எடுத்துப் போடுவது – எதை நீக்குவது – அது சுருக்கமாக ஒரு கேப்சூல் மாதிரி இருப்ப தல்ல – அது மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருக்கும்.
பெரியார் அவர்களுடைய
தொலைநோக்குச் சிந்தனை!
அன்றைய காலகட்டத்தில் இருந்தாலும், இன்றைக் கும் அதைப் படிக்கும்பொழுது, பெரியார் அவர்களு டைய தொலைநோக்குச் சிந்தனை – அதைத்தான் அவர் ‘‘தீர்க்கத்தரிசனம்” என்று சொன்னார்.
பெரியார் அவர்களுடைய தொலைநோக்குச் சிந் தனைக்காகத்தான் – யுனெஸ்கோ மன்றம் மிக ஆழமாகச் சொன்னது Prophet of the new age என்ற வார்த்தையைச் சொன்னது.
இந்தப் பணியை நான் செய்ததற்காக என்னை அவர் பாராட்டினார்; என்னை அவர் ஒரு தனி மனிதனாகவோ, தனி நபராகவோ பாராட்டியதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
‘விடுதலை’ பணித் தோழர்களின் ஒப்பற்ற உழைப்பு –
அத்துணைப் பேருக்கும் பாராட்டு- நன்றி!
அதிலே நம்முடைய ‘விடுதலை’ பணித் தோழர்களுடைய உழைப்பு என்பது ஒப்பற்ற உழைப்பு – அத்துணைப் பேருக்கும் பாராட்டு – அத்துணைப் பேருக்கும் நன்றி!
தொடர்ந்து இந்த ஆய்வுப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்; நூலகராக இருந்தாலும், எழுத்தாளர்களாக இருந்தாலும், தோழர்களாக இருந்தாலும் இரவு – பகல் பாராமல் பணியாற்றியிருக்கிறார்கள்; அதில் ஒரு பெரிய பட்டியலையே போட்டிருக்கின்றோம்.
தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள்!
‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.”
என்ற குறள்தான் – 1330 குறள்களிலேயே தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளாகும்.
அந்தக் குறளை சாதாரணமாக பதவுரை, கருத்துரை, பொழிப்புரையோடு படிப்பதற்குரியது என்று மட்டும் நாங்கள் நினைக்கவில்லை. அதை ஒரு பணிமுறையாக, அதற்கான அடிப்படையாக நினைத்துக் கொண்டிருக் கின்றோம். பணித் துறையில் இருக்கக் கூடியதை தொண்டாக – தொழிலாக அல்ல, தொண்டாக நம் முடைய தோழர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதன் காரணமாகத்தான், பல நேரங்களில் நாங்கள் திட்டமிடுகின்ற நேரத்தில், ஒன்றாம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்த நேரத்தில், நான்கூட கொஞ்சம் யோசித்தேன். ஆனால், கவிஞர் அவர்கள் சொன்னார், ‘‘முதல் தொகுதியை ஒன்றாம் தேதி வெளியிட்டுவிடலாம்” என்று மிகத் தெளிவாக சொல்லி, இரவு – பகல் பாராமல் தோழர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தனர். ஒரு பெரிய பட்டியலையே போட்டிருக்கின்றோம், நேரத்தின் நெருக்கடியைக் கருதி, அதனை சொல்லவேண்டிய அவசியமில்லை.
இங்கே வந்து மிக அருமையான உரைகளை ஒவ்வொரு கோணத்திலும் சிறப்பாக ஆற்றியுள்ளனர். இந்த உரைகளே ஒரு பெரிய புத்தகமாக வரக்கூடிய அளவிற்கு, அவ்வளவு ஆழமாக இருக்கிறது.
பல்கலைக் கழகங்கள் செய்யவேண்டிய வேலை – ஆய்வாளர்கள் செய்யவேண்டிய வேலை!
இதற்கு எப்படி வரவேற்பு இருக்குமோ என்று நினைத்தோம்; ஏனென்றால், பழைய தொகுப்பை கொடுக்கிறோம்; பொதுவாகப் பார்த்தீர்களேயானால், பல்கலைக் கழகங்கள் செய்யவேண்டிய வேலை – ஆய்வாளர்கள் செய்யவேண்டிய வேலை – அரசுகள் செய்யவேண்டிய வேலை – திராவிட மாடல் அரசு 21 மொழிகளில் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து களை புத்தகங்களை மொழியாக்கம் செய்கின்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறது – நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களுடைய அரசு.
காலத்தைத் தாண்டியது –
காலத்தை வெல்லக்கூடியது!
இன்னொரு பக்கத்திலே அதற்கெல்லாம் அடித்தளம் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், ‘விடுதலை’ என்பதை ஒரு வரலாற்று ரீதியாக – இதனுடைய தேவை என்பது காலத்தைத் தாண்டியது – இதனுடைய பயன் என்பது இருக்கிறதே – காலத்தை வெல்லக்கூடியது. எங்களால் முடிந்த சிறிய பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால், நிச்சயமாக இந்தப் பணிகள் முடிவடைகின்ற நேரத்திலே, நாங்கள் இருக்கமாட்டோம்; நம்மில் பலர் இருக்கமாட்டோம்; ஆனால், பணி இருக்கும்; பணி தொடரும்.
தந்தை பெரியாரோடு இந்த இயக்கம் முடிந்து போய்விட்டது என்று நினைத்தவர்களுக்கெல்லாம் எப்படி ஓர் ஏமாற்றமோ – அவற்றையெல்லாம் பொய் யாக்கி, நிச்சயமாக வரலாறு பாதுகாப்பு என்பதில் இத்தகையப் பணிகள் தொடரும்.
அப்பொழுதுதான் இந்தக் கொள்கை என்பது ‘சாகா மருந்து’ என்ற அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு காலத்தை வென்ற கொள்கை என்றாகும்.
மனிதத்துவம் – மனிதம் – திராவிடம்!
திராவிடம் என்பதைப்பற்றி அழகாகச் சொன்னார்கள்; திராவிடம் என்பது வெறும் மொழியைப் பொருத்ததல்ல; திராவிடம் என்பது வெறும் இடத்தைப் பொருத்ததல்ல.
திராவிடம் என்பது இன்றைக்கு எப்படி வந்திருக்கிறது என்று சொன்னால், மனிதத்துவம் – மனிதம் – திராவிடம்.
ஏனென்றால், எங்கெல்லாம் பேதம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அடித்து விரட்டக் கூடிய ஒரே தத்துவத்திற்குப் பெயர்தான் திராவிடம்.
எனவேதான், திராவிடத்தில் பேதம் இருக்க முடியாது.
காலாவதியானது சனாதனம்தான்;
திராவிடம் அல்ல!
சனாதனத்தைப்பற்றி சொன்னார்கள்; சனாதனம் தோற்றுப் போய் நீண்ட காலம் ஆகிவிட்டது. உண்மையிலேயே சொல்லவேண்டுமானால், காலாவதியானது சனாதனம்தான்; திராவிடம் அல்ல. அதைப் புரியாத வர்கள் சொல்கிறார்கள்.
ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன் – திராவிடம் காலாவதியாகிவிட்டது என்று சிலர் உளறுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே திரித்துச் சொல்லுகிறர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சனாதனம் காலாவதியாகி விட்டது என்று அதற்குப் போட்டியான வார்த்தையாக – எரிந்த கட்சி – எரியாத கட்சி என்று நாம் சொல்லவில்லை.
அர்த்தத்தோடு – பொருளோடு சொல்கிறோம் – பதில் சொல்ல முடிந்தால் சொல்லட்டும் அவர்கள்.
சனாதனத்திற்குமூலம் அடிப்படை
வேதம்தானே!
உதாரணத்திற்கு நாங்கள் சொல்கிறோம், இந்த அரங்கத்தின் சார்பாக கேட்க விரும்புவது என்ன வென்றால், சனாதனத்திற்கு எது அடிப்படை – வேதங் கள். வேதத்தினுடைய காலம் என்ன? வேதம் எப்படி உண்டானது? சனாதனத்திற்குமூலம் அடிப்படை அதுதானே!
அந்த வேதம் என்பது இருக்கிறதே, அது எழுதாக் கிளவி என்று பெயர். இது புலவர்களுக்குத் தெரியும்; ஆய்வாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.
எழுதாக் கிளவி என்றால், அது எழுத்துமூலம் கிடையாது; அதை யாரும் அச்சடித்து சொல்ல முடியாது. இன்னுங்கேட்டால், அதை வாயால்தான் சொல்லவேண்டும். உபாத்தியாயனம் என்றால், ஒருவர் சொல்ல, இன்னொருவர் திரும்பச் சொல்லவேண்டும்.
வேதத்திற்கும், டிஜிட்டலைசுக்கும்
என்ன சம்பந்தம்?
ஆகவே, அது அன்றைக்கே முடிந்து போய் இருந்தது என்றால், இன்றைக்கு வேதத்தை சி.டி. போட்டுக் கொண்டிருக்கிறானே, அது எந்த முனிவர் கண்டுபிடித்தது? ‘டிஜிட்டலைஸ் வேதாஸ்’ என்கிறார்கள். வேதத்திற்கும், டிஜிட்டலைசுக்கும் என்ன சம்பந்தம்?
சனாதனம் செத்துப்போய், விஞ்ஞானம் அங்கே துணைக்கு வந்திருக்கிறது என்றுதானே அதற்குப் பொருள்.
ஆகவே, உங்களுடைய சனாதனம் காலாவதி யாகிவிட்டது; அந்த இடத்திற்கு உயிர்க் கொடுக்க வேண்டும் என்றால், எப்படி மனிதனுக்கு ரத்தம் கொடுக்கிறோமோ – வேறு ஒருவருடைய உறுப்பை இன்னொருவருக்குப் பொருத்தி, அதன் மூலம் சரிப்படுத்துகின்றோமோ – அதுபோன்று, அறிவியல் ரீதியாக, விஞ்ஞானத்தை வைத்துத்தான் உங்களுடைய சனாதனத்தையே மெய்ஞானம் என்று காட்டக்கூடிய கற்பனை உலகில் இருக் கிறீர்கள்.
திராவிடம் என்றால் என்ன?
தோற்றுப் போனது திராவிடமா? அல்லது சனாதனமா?
திராவிடம் என்பது அறிவு!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
அறிவுக்கு விளக்கம் சொல்லி, அதற்குமேலே பகுத்தறிவுக்கு விளக்கம் சொல்லி,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
இவை அத்தனையும் சேர்ந்ததற்குப் பெயர்தான் திராவிடம்.
மக்கட்பண்பு – அனைவருக்கும் அனைத்தும் – வெறும் வார்த்தைகள் அல்ல. அவை இன்றைக்கு உல களாவிய அளவிற்கு ஆகி இருக்கின்றதே!
இன்றைய ‘விடுதலை’யின் அறிக்கையில் எழுதி யிருக்கின்றோம் – லட்சக்கணக்கான பிரதிகள் வெளி வருகிறது என்பதல்ல – திராவிடர் கழகத்தில் உறுப் பினர்கள் இத்தனை கோடி என்று அரசியல் கட்சிகள் போன்று சொல்லமாட்டோம்.
ஏனென்றால், நாட்டில் அறிவாளிகள் என்போர் எத்தனைப் பேர் இருப்பார்கள்?
படித்தவர்கள் என்போர் எத்தனைப் பேர் இருப் பார்கள்?
விஞ்ஞானிகள் என்போர் எத்தனைப் பேர் இருப் பார்கள்! என்பனவற்றை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
ஓர் அரிய பணி – தேவையான பணி!
எனவேதான் நண்பர்களே, இந்தப் பணி என்பது ஓர் அரிய பணி – தேவையான பணியாகும்.
அந்த வகையிலே தந்தை பெரியார் சொன்னார், ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு” என்று.
மனிதர்க்கு அழகு – அவருடைய பார்வை மனிதப் பார்வை – அதுதான் திராவிடம் – அது குறுகிய பார்வை அல்ல.
ரத்தப் பரிசோதனையால் நான் திராவிடன் என்று இனத்தைச் சொல்லவில்லை. யாருக்கும் ரத்தப் பரி சோதனை நடக்கவில்லை – எது ஆரியம்? எது திராவிடம்? எப்பொழுது வந்து கலந்தார்கள்? என்பதல்ல என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
தமிழ்நாட்டைத் தேடி ஏன் வருகிறார்கள்?
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? எல்லா மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டைத் தேடி ஏன் வருகிறார்கள்?
அரசியல் பார்வையை விட்டுவிடுங்கள் – ஒரு சமூக ரீதியான சூழலைப் பார்த்தால், அருமையாக சொன்னார் நம்முடைய முதலமைச்சர். அந்தக் காலத்தில் – தென் னாடுடைய என்றால், ‘‘சிவனே போற்றி!” என்பார்கள். ‘‘தென்னாடுடைய திராவிடமே போற்றி” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்குக் காவிக்கு இங்கே வேலையே இல்லை என்று சொல்லக்கூடிய நிலை. இங்கே எட்டிப் பார்த்தாலும் உள்ளே நுழைய முடியவில்லையே! அதற்கு என்ன காரணம்?
ஆகவே, இந்த அடிப்படைக்கு ஒரு தத்துவம் – காலாவதியாகவில்லை என்பதற்கு அடையாளம் என்ன?
நம்முடைய ‘விடுதலை’யினுடைய முதல் களஞ்சியத்தின் ஒரே ஒரு பகுதியை எடுத்துப் பாருங்கள்.
இந்தப் புத்தகத்தை 100 தோழர்களுக்குமேல் வாங்கி யிருக்கிறார்கள்; மற்றவர்களுக்கும் பரப்பவேண்டும்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் இந்த இரண்டும் எப்படிப்பட்ட இயக்கம்! இயக்கம் என்பது வேறு; கட்சி என்பது வேறு.
தந்தை பெரியாரின் பதில்!
இயக்கம் அப்படியல்ல; இயக்கத்தினுடைய பணி என்பதுபற்றி பெரியாரிடம் கேட்டார்கள், ‘‘உங்களுடைய இயக்கப் பணி எப்பொழுது முடியும்?” என்று.
‘‘கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையில், கடைசி முட்டாள் இருக்கின்ற வரையில், கடைசி சுரண்டல்காரன் இருக்கும் வரை எங்களுக்கு வேலை உண்டு; இந்த இயக்கத்திற்கு வேலை உண்டு; இந்த இயக்கத்திற்கு அழிவில்லை” என்று தெளிவாகச் சொன்னார்.
இந்தப் புத்தகத்தில் உள்ள தலைப்புகளைப் பாருங் கள்; எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக – தொகுப்பு ஆசிரியராக இருக்கும் எனக்கு – இந்தப் பத்திரிகை தொடங்கி வந்த நேரத்தில், 1936 இல் எனக்கு என்ன வயது? இரண்டு வயது அன்றைக்கு. ஆனாலும், அந்த வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது.
இது ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது; அதற்காக எத்தனைப் பேர் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். வரலாறு என்பது அதுதான். அந்த வரலாறுகளைத் தொகுத்து இங்கே கொடுக்கிறோம். அப்படி வரலாறை சொல்லும்பொழுது அதற்குரிய அடிக்கட்டுமானம் என் பதற்கொப்ப – ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி யைக் கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கம் எங் களுக்கு வந்தது. அதனைப் புரிந்துகொள்ள வேண்டு மானால் நண்பர்களே, எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும், அந்த சோதனையான பணியில் நாம் ஈடுபட்டு, அதனைக் கொண்டுவரவேண்டும் என்கிற ஓர் உறுதி எங்களுக்கு வந்ததற்குக் காரணம், ‘திராவிட மாடல்’ என்பது வெறும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடியது அல்ல. அதற்கு அடிப்படையானது அடிக்கட்டுமானம் எங்கே இருக்கிறது? என்பதுதான் மிகவும் முக்கியம்.
அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம்!
உச்சநீதிமன்றம்கூட தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி களையெல்லாம் சொல்லி, அடிப்படை உரிமைகளைப் பற்றியெல்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. சகோதரர் இளங்கோவன் உள்பட மற்றவர்களும் சொன்னார்கள். அது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்று சொல்லி, அதில் கைவைக்க முடியாது என்றும் சொன்னார்கள்.
ஆனால், அதையே இன்றைக்குத் தூக்கிப் போட்டு விட்டார்கள்; செல்லரிப்பதுபோன்று; புத்தகம் பார்ப் பதற்கு மேலே நன்றாக இருக்கும்; அந்தப் புத்தகத்தைத் திறந்துப் பார்த்தால், உள்ளே உள்ள பக்கங்களையெல்லாம் செல்லரித்துப் போயிருக்கும்.
இன்றைக்கு செல்லரிப்பதுபோன்று, முழுக்க முழுக்க பாசிசம், இந்திய அரசமைப்புச் சட்டத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
மிக முக்கியமாக இதில் கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால் நண்பர்களே, ஆழமாக எண்ணிப் பாருங்கள்.
We the People of India என்றுதான் தொடங்கும். நமக்கு நாமே வழங்கிக் கொண்டது. இறையாண்மை என்பது நாடாளுமன்றத்திலே கிடையாது; இறை யாண்மை பிரதமரிடம் கிடையாது; இறையாண்மை குடி யரசுத் தலைவரிடம் கிடையாது; இறையாண்மை நீதிமன்றத்தில் இருக்கிறதா? என்றால் கிடையாது.
பின் எங்கே இருக்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டப்படி நான் சொல்லுகிறேன், இறையாண்மை எங்கே இருக்கிறது என்றால், மக்களிடம்தான் இருக்கிறது. மக்கள் பார்த்து முடிவு செய்யவேண்டும். மக்கள் தீர்ப்புதான் இறுதியானது. மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முடிவு செய்வார்கள். கருநாடகமே அதற்கு உதாரணம். வருபவர்களுக்கு பூக்கள் மட்டும் போடுவார்களே தவிர, ஓட்டுப் போடுவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அந்தப் பூக்களும் எப்படி போடப்பட்டன என்பது வேறு விஷயம்.
‘விடுதலை’ களஞ்சியம் தொகுப்பில்….
இந்தப் புத்தகத்தில் பக்கம் 92 இல்,
‘‘சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம்” – என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.
25.4.1936, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை தங்கசாலை தெரு, 327 ஆவது நெம்பர் கட்டட மேல்மாடியில், சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் தோழர்
டி.இராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் முன்னுரை கூறிய பின், தோழர்கள் கே.எஸ்.நாதன், எஸ்.பிரகாசம் ஆகியோர் ‘‘ஜஸ்டிஸ் இயக்கம்” என்பது பற்றிப் பேசினார்கள்.
சென்ற சிறிது நாட்களாக பொதுவாக சென்னை மாகாணத்தின் பல பாகங்களில் ஜஸ்டிஸ் இயக் கத்தைக் குறித்து மிகவும் தூஷணையாக பிரச் சாரத்தைச் செய்து வருகின்றார்கள். இந்தப் பிரச் சாரத்திற்குப் பெரும் ஊக்கமளிக்கக் கூடிய மாதிரி நமது நண்பர்களில் பலரும் அவர்களுக்கு மனப் பூர்வமாக பேருதவி செய்யாவிடினும், நண்பர்களது போக்கை அவர்கள் தங்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக ஆக்கிக் கொள்ளுகின்றனர்.
சென்ற 19 ஆண்டுகளாக தென்னாட்டு பிராமணரல்லாதார் மக்கள் தமது சுதந்திரத்தை அளித்த வலிமை பொருந்தினதோர் உத்வேகம் ஜஸ்டிஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் அளிக்க இயலவில்லை.
பல நூற்றாண்டாக தமிழ்நாட்டு மக்கள் அனை வரும் பிராமணர்களின் அடிமைகளென்றும், அவர்கள் சொல்படி ஆடும் கருவிகளென்றும் கருதி வந்ததை அறவே ஒழித்தது. சமூகக் கொடு மைகளிலும், அரசியல் கொள்கை, உத்தியோகம் முதலியவைகளிலும் கடந்த அரை நூற்றாண்டு களாக பிராமணர் ஆதிக்கம் பெற்றிருந்ததைக் கண்டு நம் மக்களும், சம உரிமை பெறவேண்டும் என்ற சுயமரியாதை சுதந்திர உணர்ச்சியைக் கொண்டே இக்கட்சியை காலஞ்சென்ற டாக்டர் நாயர் பெருமானும், சர்.பிட்டி. தியாகராயரும் கண் டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அடிமைத்தனத்தில் ஆழ்ந்து கிடந்த பிராமண ரல்லாதார் மக்களுக்கு இவ்வறிஞர்கள் கண்ட அறிவுச் சுடராகிய ‘ஜஸ்டிஸ் இயக்கம்’ பெரும் ஆத ரவாக இருந்தது என்பதை கூறவும் வேண்டுமா?
வாலிப இளைஞர்கள் தங்கள் சுயமரியாதை யைக் காப்பாற்ற முன்வந்து நியாயக் (ஜஸ்டிஸ்) கட்சியின் கொள்கைகளை தீவிரமாக பிரச்சாரஞ் செய்ய ஆரம்பித்தார்கள்.
அக்கூட்டத்தில் நமது நண்பர்களான தோழர் கள் ஜே.என்.இராமநாதன், ஒ.சி.ஸ்ரீனிவாசன், திண் டுக்கல் சுப்பிரமணியம் போன்றவர்களின் பெயர் கள் குறிப்பிடத்தகுந்ததாகும்.
தலைவர்கள் என்பவர்கள் எப்பொழுதும் சாசுவதமாக ஓர் இயக்கத்தை நடத்திக் கொண் டிருக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது குறிப்பாக பெரும்பான்மையான ஒரு பெருங்குடி மக்களின் சுயமரியாதையை தங்கள் மேற்போட்டுக் கொண்டு டாக்டர் நாயரும், சர்.தியாகராயரும் அதிக நாள் வாழ இயலவில்லை. அவர்கள் அகால மரணமடைந்தனர். அதன்பின் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் காலஞ்சென்ற பானகல் பெயர் குறிப்பிடத்தகுந்தது. அஞ்சா நெஞ்சம் படைத்த இவ்வீர சிங்கம் கட்டுதிட்டங் களுடன் கட்சியைப் பலப்படுத்தி செய்து வைத்து சீர்திருத்தக் கோட்டையின் மதிற் சுவர்களில் தான் இன்று ஜஸ்டிஸ் கட்சி நிற்கின்றது எனக் கூறல் மிகையாகாது.
தென்னிந்திய சரித்திரத்தில் பானகல் ராஜா செய்து முடித்த அரிய செய்கைகள் என்றும் தங்க லிபிகளில் எழுதக் கூடியவைகளாக பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், இந்து மத சீர்திருத்த பரிபாலன போர்டு போன்ற குறிப்பிடக் கூடிய பல முக்கிய செய்கைகளுக்கு கர்த்தா இவர் என்றால், தென்னாடு இவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது.”
இன்றைக்கும் ‘திராவிட மாடல்’ அதனுடைய பணி என்பது தொடருகிறது என்றால், இந்த அஸ்திவாரத் தின்மீது எழுப்பப்பட்டு இருக்கின்ற கட்டடம் அது.
எனவே, கட்டடம் சாதாரணமானதல்ல – அது மணல் வீடு அல்ல; அதை யாரும் அடித்து நொறுக்கிவிட முடியாது. ஊடகங்கள் உங்களிடம் சிக்கி விட்டது என்பதற்காக விஷமப் பிரச்சாரத்தை செய்துகொண் டிருக்க முடியாது.
இந்தத் தொகுப்பு நூல் எவ்வளவு ஆழமானது – சிந்திக்க வைக்கக் கூடியது என்பதைப் பாருங்கள். ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்வதென்றால், தனித் தனியாக கூட்டங்களை நடத்தலாம். அவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன. தனித்தனி ஆய்வுக்குரியதாக இருக்கும் எழுத்தாளர்களுக்கு.
அதனால்தான், பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்யவேண்டிய பணி என்று நான் ஏற்கெனவே சொன்னேன்.
யாருக்காக இந்த மக்கள் இயக்கம் அன்றைக்குத் தொடங்கியது என்பதை தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதைத்தானே இன்றைக்கும் நாம் எடுத்துச் சொல்கிறோம். இன்றைய போராட்டம் என்ன? பரம்பரை யுத்தம் என்று நம்முடைய இன எதிரிகள் சொல்கிறார்களே, அதனுடைய அடிப்படை என்ன? என்பதை எண்ணிப் பாருங்கள்.
மேலும் இந்தத் தொகுப்பு நூலில் உள்ளவற்றை சொல்கிறேன்:
‘‘பொதுமக்களைக் குறித்த வரையில், இக்கட்சி யின் பிரதானக் கொள்கைகள் பிராமணரல்லாதார் சமூகத்திற்கே குறிப்பாக உரியதென நாம் முன்ன மேயே குறிப்பிட்டுவிட்டோம். ஏழரைக் கோடி நசுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் உரிமைக் காகப் பாடுபட்டு, அவர்களை முதன்மைப்படுத்தி, இன்று இந்திய சட்டசபைகளிலும், மாகாண சட்டசபைகளிலும் தங்களது உரிமைகளை எடுத்துரைக்க நாவன்மை படைத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களை உற்பத்தி செய்த பெருமை ஜஸ்டிஸ் கட்சிக்கு என்றும் உரித்தாகும்.”
நண்பர்களே, இது 1936 இல்!
‘‘காஸ்ட் பிரைடு’’ எனும் புத்தகம்!
அண்மையில் ‘‘காஸ்ட் பிரைடு” என்ற ஒரு புத்தகத்தை ஒரு ஆய்வாளர் மிகத் தெளிவாக எழுதி வெளிவந்திருக்கிறது. அதை வாங்கிப் படித்தேன்; அதிலுள்ள பல பகுதிகளை எடுத்தும் சொல்லியிருக்கின்றேன். இதுவரை வெளிவராத தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டு இருக் கிறது.
அதில் ஒன்றைச் சொல்லுகிறேன், முதன்முதலில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் அடித்தளத்தில் இருக்கிற ஆதிதிராவிட மக்கள் அவர்களுடைய உரிமைப் பறிப்பைப்பற்றி பேசியது வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல – நீதிக்கட்சிதான் பேசியிருக்கிறது – வடபுலத்தில் பேசியிருக்கிறார்கள் என்பதை ‘‘சென்ட்ரல் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று வெள்ளைக்காரர்கள் நடத்தியதில் – 1912 ஆம் ஆண்டிலிருந்து 1913 ஆம் ஆண்டுவரை இந்தப் பிரச்சினை வருகிறது. அதுகுறித்து அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
இதுவரையில் வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட பல செய்திகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார்.
பார்சி இனத்தைச் சார்ந்த
மேனக்ஷா நவ்ரோஜி
அதில் மிக முக்கியமானதாக, ஏழரைக் கோடி ஆதி திராவிட மக்கள் உரிமையற்ற மக்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்களே, அவர்களைப்பற்றி முதல்முறையாகப் பேசியது யாரென்றால், தனியாக ஒரு மசோதா கொடுக்கிறார் – பிரைவேட் மெம்பர் பில் என்று சொல்லக் கூடிய தனியார் மசோதா. யார் கொடுக்கிறார் என்றால், மேனக்ஷா நவ்ரோஜி என்பவர். அவர் ஒரு பார்சி இனத்தைச் சார்ந்தவர்.
அவரை, ‘‘நீங்கள் வேற்று மதத்துக்காரர்; நீங்கள் எங்களையெல்லாம் தாக்கிப் பேசக்கூடாது” என்று திலகர் போன்றவர்கள் சொல்கிறார்கள்.
டில்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்திலே – ‘‘சென்ட்ரல் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’’ என்பதில் பேசுகிறார்கள்.
ஆனால், அவரை முழுக்க முழுக்க மற்றவர்கள் தாக்குகின்ற நேரத்தில், அவருக்காக வாதாடிப் பேசிய குரல் யார் என்று தெரியுமா? நண்பர்களே! இது வர லாற்றில் மறைக்கப்பட்ட செய்தி – அதை விரிவாகச் சொல்லவேண்டும் என்றால், இன்னொரு கூட்டத்தில் சொல்லலாம்.
இங்கே செய்தியாளர்கள் இருக்கிறீர்கள்; அறிவார்ந்த அரங்கம் இந்த அரங்கம் – ஆகவே, இந்தச் செய்தியைப் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.
தாதாபாய் நவ்ரோஜி அல்ல –
மேனக்ஷா நவ்ரோஜி
‘‘மேனக்ஷா நவ்ரோஜி பேசியதை, தாதாபாய் நவ்ரோஜிதான் பேசினார் என்று தவறாகப் போட்டு சில செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார்.
பேசியவர் தாதாபாய் நவ்ரோஜி அல்ல – மேனக்ஷா நவ்ரோஜி என்பவரை எதிர்த்துப் பேசியவர்களைக் கண்டித்துப் பேசியவர் யார் தெரியுமா? நண்பர்களே, அவர்களும் மனிதர்கள் அல்லவா? என்று கேட்ட குரல் யாருடைய குரல் தெரியுமா? பானகல் ராஜா அவர் களுடைய குரல்.
சமஸ்கிருதத்தில் எம்.ஏ. படித்தவர்
1912 ஆம் ஆண்டிலிருந்து 1913 ஆம் ஆண்டுவரை அவர் ‘‘சென்ட்ரல் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில்’’ உறுப்பினர். அதற்குப் பிறகுதான் நீதிக்கட்சிக்கு வருகிறார். தியாகராயர் அவரை அழைத்தார். பானகல் என்பது ஆந்திராவினுடைய ஒரு பகுதி. பானகல் ராஜா அவர்கள் மாநிலக் கல்லூரியில், சான்ஸ்கிரிட் படிப்பில் எம்.ஏ., படித்தவர். அவருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று நினைத்துக்கொண்ட பார்ப்பனர்கள், இவர் பிரதமராக இருக்கும்பொழுது, இரண்டு பேர் இவரைப் பற்றி சமஸ்கிருதத்தில் திட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.
பானகல் ராஜா அவர்கள், ‘‘எனக்கு சமஸ்கிருதம் தெரியும்; நீங்கள் சொல்லியதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்” என்று சொன்னதும், அவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.
அவ்வளவுக் கெட்டிக்காரத்தனமாக இருந்தவர். அவர் பேசிய பேச்சு என்பது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமைகளுக்காகத்தான் நாங்கள் இயக்கம் வைத்திருக்கிறோம்!
நீதிக்கட்சியாக அமைப்பாக உருவாகியது திராவிட இயக்கத்திற்கு முன்னால். அதற்கு முன்பாக, 1907 இல் வெள்ளைக்காரர்களிடம் கொடுத்த பெட்டிஷனில் பார்த்தீர்களேயானால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய உரிமை களுக்காகத்தான் நாங்கள் இயக்கம் வைத்திருக் கிறோம் என்று கொடுத்தார்கள்.
திராவிடம் – அதனுடைய அடிக்கட்டுமானம் மிகவும் பலமானது.
மேலும் ‘‘விடுதலைக் களஞ்சியம்” தொகுப்பில் உள்ளதைச் சொல்கிறேன்.
‘‘பொது மக்களைக் குறித்த வரையில் இக் கட்சியின் பிரதானக் கொள்கைகள் பிராமணரல் லாதார் சமூகத்திற்கே குறிப்பாக உரியதென நாம் முன்னமேயே குறிப்பிட்டுவிட்டோம். ஏழரைக் கோடி நசுக்கப்பட்ட ஆதித்திராவிட மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டு, அவர்களை முதன் மைப்படுத்தி இன்று இந்திய சட்ட சபைகளிலும், மாகாண சட்டசபைகளிலும் தங்களது உரிமைகளை எடுத்துரைக்க நாவன்மை படைத்த தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றால், அவர்களை உற்பத்தி செய்த பெருமை ஜஸ்டிஸ் கட்சிக்கு என்றும் உரித்தாகும். கல்வியிலும் பொது மக்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்ததைப் போல் வேறு எக்கட்சியின் நிருவாகத்திலும் செய்ய இயல வில்லை எனக் குறிப்பிடுவது பெருமையாகாது. நேற்று முன் தினம் கிளம்பின ஹரிஜன இயக்கத்திற்கு பின் ஏற்படுத்தப்பட்ட சில கல்வி பயிற்றுவிக்கும் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுவதற்கு முன்னமேயே ஜஸ்டிஸ் கட்சியார் கட்டாயப் படிப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், அதற்காக மிகவும் உழைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
மற்ற மாகாணங்களுடன் சென்னை மாகாணத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் மற்ற மாகாண பொது மக்கள் கல்வியில் எவ்வளவு பிற்போக்காளர்களாக இருக்கின்றார்கள் என்பது கண்டறிந்த உண்மையாகும்.
சென்னை மாகாணத்திற்குட்பட்ட சுதேச சமஸ் தானங்களை எடுத்துப் பார்த்த போதிலும் கொச்சி, திருவாங்கூர், மைசூர் போன்ற சமஸ்தானங்களில் கல்வி பெற்றவர்கள் நிறைந்திருப்பதுபோல் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லை என்பது தெரிந்த விஷயம். குறிப்பாக பெண் கல்வியில் இந்தியா விற்கே இச்சமஸ்தானங்கள் திலகங்களென விளங்குகின்றன.
குறிப்பிட்டவரை அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு பொது மக்களுக்கு கல்வியை எவ்வளவு தூரம் பரப்பலாமோ அத்தனைத் தூரமும் ஜஸ்டிஸ் கட்சியார் பிரயாசைப்பட்டு வருகின்றனர்.
ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத் திற்கும் எப்படிப்பட்ட தாரதம்மிய மான வித்யா சங்களை எதிரிகள் அல்லது நண்பர்கள் கற்பித்த போதிலும் இரண்டும் சகோதர இயக்கங்கள் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.
ஜஸ்டிஸ் கட்சி தோன்றி இன்று 15 ஆண்டு களுக்கு மேல் ஆகியும் அது செய்த பல தொண்டு களை மக்கள் வெகு சீக்கிரத்தில் மறந்து விடு வதற்குக் காரணம் பார்ப்பனர்களின் விஷமப் பிரச்சாரமேயாகும்.” இந்தக் களஞ்சியத்தில் இது இடம்பெற்றுள்ளது.
அன்றைக்கு என்ன நடந்ததோ அதுதானே இன்றைக்கு அரசாங்கத்தின்மீது நடக்கிறது. இன்றைக்கும் அதே நிலைதானே! தேதியை மாற்றிப் போடவேண்டுமே தவிர, முறை ஒன்றுதானே!
இன்றைக்கும் அவர்கள் புத்தி மாறவில்லை என்றுதானே அர்த்தம். எவ்வளவு பெரிய சாதனைகள் இருக்கின்றன; அந்தச் சாதனைகளைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மற்ற செய்திகளைப்பற்றி கவலைப்படவில்லை.
‘விடுதலை’ காகிதம் அல்ல – இது ஆயுதம் – அறிவாயுதம் – பேராயுதம் – போராயுதம்!
எனவேதான் நண்பர்களே, இது ‘விடுதலை’ காகிதம் அல்ல – இது ஆயுதம் – அறிவாயுதம் – பேராயுதம் – போராயுதம் – பெரியார் தந்த ஆயுதம்.
அந்தக் ஆயுதக் கிடங்குகளில் ஆயிரம் ஆயிரம் கருத்துகள் உண்டு.
1971 ஆம் ஆண்டில் நெருக்கடி – எப்பேர்ப்பட்ட நெருக்கடி? அண்ணா அவர்கள் மறைந்து, கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வருகிறார். கலைஞருடைய நூற்றாண்டு நாளைய மறுநாள் தொடங்குகிறது.
அப்படிப்பட்ட செயற்கரிய செய்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இவர்களால் உருவாக்கப்பட்ட கலைஞர் அவர்கள் ஒரு போர் வாள் போன்றவர்; ஒரு பெரிய ஆயுதக் கிடங்கு போன்றது அவருடைய எழுத்தாற்றல்.
அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்து, முன்கூட்டியே ஓராண்டுக் குள்ளாகவே துணிச்சலோடு தேர்தலை சந்திக்கிறார்.
இதுவரை வெளிவராத தகவல்களை ‘தினமணி’ நாளேட்டிற்குக் கட்டுரையாக எழுதியுள்ளேன்!
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் – ‘தினமணி’ நாளேட்டிற்காக ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதில் இதுவரை வராத செய்திகளை அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.
கலைஞர் காலத்தில் என்ன நடந்தது என்று இப்பொழுது வெளியில் சொன்னால்தான், அவர் எப்படிப்பட்ட சிறந்த நிர்வாகி என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியும்.
அதுமட்டுமல்ல, திருக்குறளை மற்றவர்கள் படித்துவிட்டு, கருத்துரை, பொழிப்புரை, பதவுரை எழுதுவார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அதை நடைமுறைப்படுத்தியவர். பெரியாரை துணைகோடல் – பெரியாரை பிழையாமை.
பெரியாரைத் துணைகோடல் என்பது ஒவ்வொரு கட்டத்திலும். இப்பொழுது தேர்தல் நடத்தலாமா? என்று கருத்து கேட்டார்; அன்றைக்கு சேலத்தில் இருந்தார் தந்தை பெரியார். சென்னையிலிருந்து அய்யாவை சந்திப்பதற்காக திருச்சிக்குச் சென்றேன். எதற்காக நீங்கள் திடீரென்று வந்திருக்கிறீர்கள் என்று அய்யா அவர்கள் கேட்டார்.
முன்கூட்டியே தேர்தலை நடத்தலாமா?
முதலமைச்சர் உங்களிடம் ஒரு செய்தியை கேட்டுக் கொண்டு வரச் சொன்னார் என்றேன்.
என்ன? என்று கேட்டார்.
‘‘சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா? என்று கேட்டார்; இன்னும் ஓராண்டு இருக்கிறது; அதற்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தலாம் என்கிற ஒரு கருத்து இருக்கிறது. அந்த முடிவு சரியா? அதுபோன்று செய்யலாமா? உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டுத்தான் முதலமைச்சர் முடிவு செய்ய இருப்பதாகச் சொன்னார்” என்று நான் சொன்னேன்.
‘‘ஓராண்டு போவதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் – தேர்தலை நடத்தச் சொல்லுங்கள்!”
அய்யா கொஞ்ச நேரம் யோசனை செய்து விட்டு, ‘‘இது சரியான முடிவுதான். ஏனென்றால், நான் மக்களோடு பழகிக் கொண்டிருப்பவன்; விலைவாசி ஏறவில்லை; மழை பெய்துகொண் டிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக் கிறார்கள். இப்பொழுது தேர்தல் வைத்தால், நம் முடைய வெற்றி உறுதி. அதிலொன்றும் சந்தேக மேயில்லை. ஓராண்டு போவதைப்பற்றி கவலைப் பட வேண்டாம் – தேர்தலை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்.
திருச்சியிலிருந்து நான் நேராக கோபாலபுரம் சென் றேன். முதலமைச்சர் கலைஞரிடம் அய்யா சொன்னதை சொன்னேன்.
அன்று இரவே முடிவெடுத்து அறிவித்தார்கள்.
அப்பொழுது தி.மு.க.மீது ஊழல் சொல்லி, வாழ்நாளில் தவறே செய்யாத காமராசர் அவர்கள், அரசியல் ரீதியாக ஒரு தவறைச் செய்தார். அதுதான் ஆச்சாரியாரோடு கூட்டணி சேர்ந்தது.
அதற்கு ஒரு பெயர் சொன்னார்கள் ‘‘ஜனநாயகத்தைக் காப்போம்” என்று.