சென்னை, செப். 1- நடப்பு நெல் கொள்முதல் சீசனில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 5.13 லட்சம் விவசாயிகளிடமிருந்து 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 44.90 லட்சம் டன்னை விட அதிகம்.
ஒன்றிய அரசின் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. 2024 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த நடப்பு கொள்முதல் பருவம் இன்றுடன் நிறைவடைகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கு ரூ.11,660 கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கியுள்ளன. இதற்கு முன்பு, 2020-2021 பருவத்தில் 44.90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.இன்று (1.9.2025) முதல், புதிய குறைந்தபட்ச ஆதார விலையில் அடுத்த நெல் கொள்முதல் பருவம் தொடங்க உள்ளது.