“டாக்டர் சார், என் அப்பா மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்பொழுது மங்கிய வெளிச்சத்தில் படி சரியாகத் தெரியாததினால் கால் தவறி கீழே விழுந்துவிட, தலையில் பலத்த அடிபட்டு, இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவிற்கு சென்று பல் வேறுவிதமான சிகிச்சைக்குப் பின் மூன்று மாதங்கள் கழித்து தற்பொழுது தான் வீட்டிற்கு வந்தார். அதன் விளைவு இப்பொழுது பக்கவாதத்தினால் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.”
“என் பாட்டிக்கு வயது 86. எந்தக் காரணமும் இன்றி வீட்டிலேயே விழுந்துவிட்டதால், மணிக்கட்டு எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு விருப்பம் இல்லாததால் மாவுக் கட்டு போட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாட்டி படும் சிரமம் சொல்லிமாளாது. லேசாக கீழே விழுந்ததற்காகவா இவ்வளவு தொல்லைகள். இத்தொல்லையை தடுக்க ஏதாவது வழி உண்டா? ”
“என் தகப்பனாருக்கு 70 வயது தான் ஆகிறது. இரத்த அழுத்த மாத்திரை நாள்தோறும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நாள் தொலைபேசி மணி தொடர்ந்து அடிக்க அதை எடுப்பதற்காக திடீரென்று எழ, மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டார். நல்வாய்ப்பாக தலைக்காயம் அல்லது எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அதில் இருந்து படுக்கையில் இருந்து எழுந்து நடக்கவே பயப்படுகிறார். எங்கே தான் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தினால் நடக்கவே பயப்பட்டு மனச்சோர்வுடன் இருக்கிறார். இதற்கு என்னதான் தீர்வு?”
முதல்முறை விழுதல் – முதுமையின் தொடக்கம் (First fall – beginning of old age)
இரண்டாம்முறை விழுதல் முதுமையின் முடிவு (Second fall – end of it)
இக்கூற்றின் உண்மை நிலையை புரிந்து கொள்ள இக்கட்டுரை ஒரளவுக்கு உதவி புரியும்.
முதியோரைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களிட மிருந்து இதுபோன்ற கேள்விக் கணைகள் எனக்கு தற்பொழுது அதிகமாக வருகின்றன. கீழே விழுதல் அப்படி என்ன பயங்கரமான ஒரு தொல்லையா? அது ஏன் முதியோர்களை அதிகம் தாக்குகிறது. அதை தடுக்க ஏதாவது வழி உண்டா? அதைப்பற்றி விபரமாக தெரிந்து கொள்ள என்னுடன் பயணியுங்கள்!
குழந்தைகள் கீழே விழுவதற்கும் முதியவர்கள் கீழே விழுவதற்குமான வித்தியாசங்கள் மடுவுக்கும் மலைக்கும் இடையே உள்ளதைப் போன்றவையாகும். குழந்தை கீழே விழுந்தால் சிறிது நேரம் அழுதுவிட்டு பழைய படியே சிரித்துக் கொண்டே விளையாட ஆரம்பித்து விடும். ஆனால் முதியவர்களின் விழுதல், சாதாரண உடல் சிராய்பில் இருந்து தலைக் காயம் ஏற்பட்டு மரணத்தைக் கூட தழுவும் நிலைமை ஏற்படலாம்.
சம நிலை பாதிப்பு (Imbalance)
நமது உடல் சம நிலையில் இருப்பது என்பது ஒரு சிக்கலான செயல் முறையாகும். நமது உதவியில்லாமலேயே மூளை நம்மை சம நிலையில் வைத்துக் கொள்கிறது. சமநிலையை பெற உடலில் பல்வேறு உறுப்புகளிலிருந்து மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. அவைகள்:
- நரம்புகளிலிருந்தும், மூட்டுகளிலிருந்தும், தண்டுவடத்தின் மூலமாக தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படுகிறது.
- கண்களின் மூலம் நமது உடலின் சமநிலைப்பற்றிய தகவல் மூளைக்கு தெரிவிக்கப்படுகிறது.
- காது, முக்கியமாக உள்காது அதே வேலையைச் செய்கிறது.
இவைகள் எல்லாம் ஒருங்கிணைந்து உடலின் நிலையைப் பற்றி மூளைக்கு தகவல் அனுப்புகிறது. தகவலைப் பெற்றபின் அத்தகவலை பல உறுப்புகளுக்கும் அனுப்பி நம் உடலை சமநிலையில் வைத்து கொள்ள உதவுகிறது. வயது ஆக ஆக உடலை சரிசமமான அளவில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு. இந்த மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியவர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.
காரணங்கள்
- உடல் சார்ந்த தொல்லைகள் (Intrinunsic factor)
- வெளி இடம் சார்ந்த தொல்லைகள் (Extrunsic factor)
- சூழ்நிலை சார்ந்த தொல்லைகள் (Situational factor)
- உடல் சார்ந்த தொல்லைகள்
(Intriunsic factor)
- கண் சார்ந்த தொல்லைகள், உதாரணம்: பார்வைக் குறைவு, கண் புரை, க்ளுக்கோமா.
- காது சார்ந்த தொல்லைகள்,உதாரணம் : காது கேளாமை, வெர்டிக்கோ
- மூட்டு எலும்பு சார்ந்த தொல்லைகள், உதாரணம்: கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம். மூட்டு தேய்மானம், சதை வலிமை இழத்தல்,
- மூளை, நரம்பு சார்ந்த தொல்லைகள், உதாரணம்; மறதி நோய், உதறுவாதம், பக்கவாதம்
- குறைந்த இரத்த அழுத்தம்
- உடலில் சர்க்கரையின் அளவு திடீரென்று குறைதல் (Hypoglycemia)
- மாறுபடும் இரத்த அழுத்தம் (Postural hypotension) தொல்லைகள், உதாரணம்: இரத்த சோகை, உணவிற்கு பின் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தம், மாறுபட்டு காட்டும் நாடிதுடிப்பு, நீர் வறட்சி, நோய் தொற்று, நீரிழிவு மற்றும் தைராய்டு
- கை, கால் நரம்புகள் பாதிப்பு : நீரிழிவு நோய், வைட்டமின் பி12 குறைவு,
- அளவிற்கு அதிகமாக மது அருந்துதல்
- மருந்துகள்: நீர் மாத்திரை, தூக்க மாத்திரை, உயர்இரத்த அழுத்த மாத்திரை, மனநோய் மாத்திரை
-
வெளி இடம் சார்ந்த தொல்லைகள்
(Extrunsic factor)
கீழே விழுதலுக்கு உடல் சார்ந்த தொல்லைகளைத் தவிர, தான் வசிக்கும் இடத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும் கீழே விழும் வாய்ப்பு அதிகமாகும்.
- வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடு பள்ளமான தரை, அதிக உயரம் உள்ள படிக்கட்டுகள்.
- மங்கிய வெளிச்சம்
- அறையில் உள்ள தேவையற்ற பொருட்கள், உதாரணம்: மேசை, நாற்காலி, தரை விரிப்பு (mattress),
- சமையல் அறையில் உயரத்தில் உள்ள அலமாரிகள்
- குளியல் அறை மற்றும் படிக்கட்டுகளில் கைப்பிடி இல்லாத நிலை (railings)
-
சூழ்நிலை சார்ந்த தொல்லைகள்
(Situational factor)
முதியவர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் மூலமாகவும் கீழே விழ வாய்ப்பு ஏற்படலாம். உதாரணம்: பேசிக்கொண்டே நடப்பது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபடுவது (நடந்து கொண்டே கைபேசி உபயோகப்படுத்துதல்), ஏதோ ஒரு சிந்தனையில் நடக்கும் பொழுது தரையில் கிடக்கும் பொருட்களை கவனிக்காமல் இருப்பது, அரை தூக்கத்தில் அவசரமாக கழிவறைக்குச் செல்லுவது, தொலைபேசி மணி அடித்தவுடன் அவசரமாக எடுக்க முயற்சிப்பது. முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
தொல்லைகள்
கீழே விழுவதால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு வரையிலான பல தொல்லைகள் ஏற்படலாம். சுமார் 20 சதவிகித முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயமும், அதனால் மூளையில் ரத்தக்கசிவும் எற்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால் பலர் நடக்கவே பயந்து, படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள். இதனால் தன் தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடும் கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. இது இறுதியாக மனச்சோர்வுக்கு வித்திடுகிறது.
கீழே விழும் முதியவர்கள் 50 சதவீதத்தினர் மற்றவர்களின் உதவியின்றி எழுந்து கொள்ள முடியாது. கீழே விழுந்து 2 மணி நேரத்திற்குப் பின்பும் எழுந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு நீர் வறட்சி, படுக்கைப் புண் மற்றும் நிமோனியா, சளி ஜூரம் ஏற்பட வாய்ப்புள்ளது.