(இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா)
விடுதலை என்னும் பெரியாரின் பிள்ளை,
கெடுதலை நீக்கி, நம் மானம் – நடுதலை,
நாளெல்லாம் ஆற்றும் திராவிட நாளிதழால்,
கோளெல்லாம் பாய்ந்த ஒளி! (1)
வீரமணி என்னும் விளக்கு ஒளிதன்னில்,
காரமணி தன்மான வித்திட்டு – ஆரமணி
வீசும் இதழாம், விடுதலை தந்ததே
‘ஆசிரியர்’ என்னும் அடைவு ! (2)
பிறந்தநாள் ஏட்டுக்கா? வீட்டுக்கா? என்றால்,
பிறந்தநம் வீட்டுக்கே இன்பம்! – பிறந்ததே,
மானம் பகுத்தறிவு நீதி, விடுதலையால்
ஆனதே நந்தமிழ் நாடு! (3)
பேரா. கண்ணபிரான் இரவிசங்கர்,
பாரீசு (பிரான்சு).