சென்னை, செப்.1 ஹலோ எப்.எம்.மில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (31.8.2025) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகிய ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், இந்தியா கூட்டணி நடத்தி வரும் வாக்குத் திருட்டு கண்டனப் பயணம் வாக்காளர் பட்டியல் 100-க்கு 100 விழுக்காடு சரியானதாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டது. வாக்குரிமையில் ஒரு தனிமனிதன்கூட பாதிக்கப்படக்கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது போல் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த இரு மாநிலங்களிலும் வாக்குச்சாவடி முகவர்கள் பலம் வாய்ந்தவர்கள் ஆவர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்று அங்கு அவர் பேசிய பேச்சுக்கு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று தெரிவித்தார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கு முன்பு ‘இது சரியில்லை. இப்போது அமல்படுத்த வேண்டாம்’ என அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தெரிவித்தேன். ஆனால் அவருக்கு மேல் இருந்து அழுத்தம் இருந்ததால் அவர் அமல்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். இதேபோல், தி.மு.க.வையும், காங்கிரசையும் கூட்டணி விவகாரத்தில் பிரித்து பார்க்க இயலாது என்பது உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் பல்வேறு சமகால கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருக்கிறார்.