இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரி – இந்தியாவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் சுற்றுலாப் பயணத்தில் வலம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி! ஜப்பானுக்குச் சென்று அங்குப் பாடப்படும் காயத்ரி மந்திரங்களைக் கேட்டு ரசிக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு முறை (16.8.2025 மற்றும் 28.8.2025) பிரதமருக்குக் கடிதம் எழுதியும் பாரா முகமும், கேளாக் காதும்தான் ஒன்றிய அரசின் நிலைப்பாடு!
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு முக்கிய வாழ்வாதாரம் தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனங்கள்.
எடுத்துக்காட்டாக தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதியம்புத்தூர் என்ற கிராமத்தில் இருந்து 70 விழுக்காடுப் பெண்கள் தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர். இவர்கள் காலை 8 மணிக்கு நிறுவனங்கள் அனுப்பும் வாகனத்தில் ஏறிச்சென்று வேலைமுடித்து மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடுவார்கள்.
தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனங்களால் இது போன்று ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரம் செழிக்கிறது. குறிப்பாக 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகள் போன்றவையால் – தூத்துக்குடி தொழில் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியால் இப்பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார ஏற்றம் பெற்றது.
இதனால் குடும்பத்தில் கல்விச்செலவு உள்பட இதர அனைத்துக்குமே நிறைவான ஒரு சூழல் இருந்தது. இந்தப் பகுதியில்தான் 2011ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் 140க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்திருந்தனர். ஆனால் 2020 க்குப் பிறகு கந்துவட்டி கொடுமை குறைந்து தற்கொலைகள் அறவே நின்றுவிட்டன.
இதற்குக் காரணம் தூத்துக்குடி தொழில் நிறுவனங்கள் ஆகும். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா அதிபர் டிரம்ப் கோபம் கொண்டு முதலில் 25 விழுக்காடு வரி விதித்தார். இதனால் பல ஏற்றுமதி நிறுவனங்கள் ஆட்டம் காணத் துவங்கின. ஏதோ சமாளித்த நிறுவனங்களும் 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த மேலும் அபராத வரி 25 விழுக்காடு சேர்ந்து 50 விழுக்காடாக மாறியதும், நெருக்கடியால் ஒரே நாளில் 23 நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தின.
இதனால் அங்கு வேலை பார்த்த 250 பெண்கள் வேலை இழந்தனர். வரும் நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தும் அபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றன. இதனால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளப் போவது ஆயிரக்கணக்கான பெண்கள்தான்!
இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக பாதிப்பிற்குள்ளாவது குறைந்த பட்சம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆகும்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றில் உள்ள விவரம்:
தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி தொழில்களில் மீன் பதப்படுத்தல், ஆடை, பிரம்பு, பாதுகாப்பு பெட்டி தொழில்கள் போன்றவை ஆகும்
தூத்துக்குடி மாவட்டத்தில் 49.85% மக்கள் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். ஏற்றுமதி தொழில்களில் பெண்களின் பங்கு அதிகம், குறிப்பாக உணவு பதப்படுத்தல், ஆடைகள் தயாரிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அளவில் பெண் தொழிலாளர்கள் பங்கு 21% (கிராமப்புறத்தில் அதிகம்).
மேலும், தமிழ்நாடு அரசின் இலவச பேருந்துப் பயணத் திட்டம் (விடியல் பயணம்) பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம் வழங்குவதால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சென்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல, மோடியின் குஜராத்தில் உள்ள வைரம் பட்டைதீட்டும் நிறுவனம், கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனம், உத்தரப் பிரதேசத்தின் மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதி நிறுவனம் என கிட்டத்தட்ட 7.5 கோடி மக்கள் உடனடியாக பாதிக்கப்படுகின்றனர்.
இனி வரும் காலங்களில் 10.7 கோடி பேர் அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆயத்த ஆடை உற்பத்தித் துறையில் 30 லட்சம் பேர் பாதிப்புக்கு ஆளாவர்.
ஆனால் இதற்குத் தீர்வு காணவேண்டிய இடத்தில் இருக்கும் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வணிகம் மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.
மோடியோ ஜப்பானிற்குச் சென்று காயத்திரி மந்திரம் கேட்டு லயிக்கிறார். எதிர்காலம் இருட்டாக உள்ளது. எதில் போய் முடியும்?’ மக்கள் விழிப்பார்களாக!