சென்னை, செப். 1 விநாயகன் சதுர்த்தி விழா கடந்த 27 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய நாள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாள்களாக பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (31.8.2025) விநாயகன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. காலை 11.30 மணி முதலே விநாயகன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
அதன்படி மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திரு வல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணா ரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகன் சிலைகள் ஆட்டோக்கள், மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையை நோக்கி வந்தன.
அங்கு 2 பெரிய கிரேன்கள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரமும் தயார் நிலை யில் நிறுத்தப்பட்டிருந்தன. கடற்கரை மணற்பரப்பில் விநாயகன் சிலைகளை எளிதாக நகர்த்துவதற்காக இரும்பினாலான டிராலியும் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்துக்கு கொண்டுவரப்பட்ட சிலைகள் பெரிய கிரேன்கள் மூலம் கடலுக்குள் பத்திரமாக இறக்கி கரைக்கப்பட்டன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரை யில் விநாயகன் சிலை கரைப்பை அடுத்து, நேற்றிரவு (31.8.2025) வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவது, கிரேன் நிறுத்தத்திற்காக போடப்பட்ட மண் மேடை ஆகியவற்றை அகற்றும் பணிகள் இன்று (1.9.2025) காலை தொடங்கி நடந்து வருகின்றன.