மெக்சிகோ சிட்டி, ஆக. 31– மெக்சிகோவில் ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவம்’ (new world screwworm) எனப்படும் தசை தின்னும் ஒட்டுண்ணி பாதிப்பு கடந்த நான்கு வாரங்களில் 53% அதிகரித்துள்ளது. பெரும்பாலும் விலங்குகளில் காணப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது.
பசுக்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் உடலில் இந்த ஒட்டுண்ணி பரவலாகக் காணப்படுகிறது. இந்த ஒட்டுண்ணி தொற்றுக்கு ஆளான 86 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், அமெரிக்காவில் இந்த ஒட்டுண்ணியின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. எல் சால்வடோர் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டிற்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாகப் பதிவானது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டிலேயே இந்த ஒட்டுண்ணி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், லத்தீன் அமெரிக்காவில் அதன் பரவல் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த ஒட்டுண்ணி தொற்று, நோய்வாய்ப்பட்ட வர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது.