சென்னை, ஆக.31- ஆண்டுக்கு 9.87 லட்சம் ரூபாய் முதல், 32 லட்சம் ரூபாய் வரை ஊதியத்தில் வேலைகள் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் படித்த இளங்கலை மாணவர்களுக்கு கடந்த இருபதாம் தேதி நிலவரப்படி, 70 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் ஆண்டுக்கு 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக 32 லட்சம் ரூபாய் வரை ஊதிய அளவிலான வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் வளாக கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர் களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவரப்படி எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன என்ற விவரங்களை வேலை வாய்ப்புக்கான திட்ட இயக்குநர் பேராசிரியர் சண்முகசுந்தரம் வெளி யிட்டுள்ளார்.
எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு?
அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரியை பொறுத்தவரை தகுதி பெற்ற 690 மாணவர்களில் 501 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. (72.61%)
குரோம்பேட்டையில் இயங்கி வரும் எம்.அய்.டி. கல்லூரியில் தகுதி பெற்ற 522 மாணவர்களில், 408 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அதாவது, 78.2 விழுக்காடு மாண வர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத் துள்ளன.
அழகப்பா தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் 291 மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், 143 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
49.1 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தமாக 1503 மாணவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், 1052 மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான உத்தரவை பெற்றுள்ளனர்.
மொத்தம் 70 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. குறைந்தபட்ச ஆண்டு ஊதியமாக, 9.87 லட்சம் ரூபாயில் துவங்கி, 32 லட்சம் ரூபாய் வரை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து இருப்பதாக பேராசிரியர் சண்முகசுந்தரம் தெரிவித் துள்ளார்.