புதுடில்லி, ஆக.31– தலைநகர் டில்லியில் தமிழ்நாடு, கருநாடகா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநில நிதி அமைச்சர்கள் முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தார்கள்.
அடுத்த மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் நடத்திய தனி ஆலோசனை கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக மாநிலங்களின் வருவாய் குறையலாம்; எனவே, ஒன்றிய அரசிடம் இழப்பீடு கோர வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்றாடம் பயன்படுத்தப் படும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜவுளிப் பொருட்கள், காலணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை மீதான வரியை குறைக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை அளித்துள்ளது.
மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதனால் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என பல்வேறு மாநிலங்கள் கருதுகின்றன. இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
ஜிஎஸ்டி சீர்திருத்தங் களை ஆதரிக்க தயார், அதே வேளையில் இந்த நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசின் இந்த சீர்திருத்த நன்மைகள் நுகர்வோரைச் சென் றடைய வேண்டும்.
சாதாரண மக்களுக்கு உதவ வேண்டும். அதே நேரத்தில் மாநிலங்களின் வருவாய் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது.
தமிழ்நாட்டின் வரிவருவாயில் ஜிஎஸ்டி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இதில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் நடந்து கொண்டிருக்கும் உள் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களை நேரடியாகப் பாதிக்கும்.
எனவே மாநில நிதி பாதுகாக்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.