சென்னை, ஆக.31– பொறியியல் கலந்தாய்வில் இதுவரை இல்லாத வகையில் 75 கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பின் மீதான மோகம் மீண்டும் திரும்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொதுப் பிரிவு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு, துணை கலந்தாய்வு என அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், 27.8.2025 அன்று எஸ்.சி.ஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கு இடங்கள் மாற்றப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.
அந்த வகையில் ஒட்டு மொத்தமாக 2025-2026ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. மொத்தமாக 1,90,494 இடங்களில் 1,53,966 இடங்கள் நிரம்பியுள்ளன. அதன்படி, மீதம் 36,528 இடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு 49,579 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், கடந்த 6 ஆண்டுகளை காட்டிலும் நன்றாகவே நடந்து இருக்கிறது.
அதிக ஆர்வம்
இதுமட்டுமல்லாமல், இதுவரை இல்லாத அளவில் 75 பொறியியல் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்ட போது, பொறியியல் படிப்புகள் மீதான மோகம் அதிகரித்திருப்பது, நீட் தேர்வு இந்த ஆண்டு கடினமாக இருந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம்
புத்தகமாக வெளியிடும் மம்தா
கொல்கத்தா, ஆக.31- மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதலமைச்சராக இருக்கும் மம்தா இது தொடர்பாக கூறியதாவது:-
நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப் போகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.
நான் ஒன்றிய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரயில்வேத் துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.
இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு ஒன்றிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.
உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் வரதட்சணைக் கொடுமை!
இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்துக் கொன்ற கணவன் குடும்பத்தினர் – அதிர்ச்சி சம்பவம்
லக்னோ,ஆக.31- உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியை சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குல் பைசா தனது கணவர் பர்வேஷ் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இதனிடையே, திருமணத்திற்குப்பின் கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது தாய், தந்தை, உறவினர்கள் குல் பைசாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி கூடுதல் வரதட்சணை கேட்டு குல் பைசாவை பர்வேசும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரம் அடங்காத பர்வேசின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த ஆசிட்டை குல் பைசாவின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக அதை குடிக்க வைத்துள்ளனர். ஆசிட் குடித்ததில் படுகாயமடைந்த குல் பைசா அலறி துடித்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல் பைசாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குல் பைசா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.