மோடி ஆட்சியில் வெளி உறவுக் கொள்கை தோல்வி செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

3 Min Read

சென்னை, ஆக. 31- அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியும். பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று  (30.8.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் அம்பானிக்கும், அதானிக்கும்தான் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு ரஷ்யா கொடுக்கிறது. அதன் பயன் இந்திய மக்களுக்கு சென்றடையவில்லை.

அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு செப்.7ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலின் உண்ணாநிலைப் போராட்டத்தின் நோக்கம் சரியானது. ஆனால் வாக்கு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடைமாற்றும் வகையில் உள்ளது. அவர் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

ஜி.கே.மூப்பனார் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக்கொண்டதில்லை. அவரது மகன் ஜி.கே.வாசன், அவரது அப்பாவின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா என தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.

புதன்கிழமை மற்றும் மழை நாட்களில் இடுக்கி அணைக்குச் செல்லத் தடை

இடுக்கி, ஆக. 31– இடுக்கி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, புதன்கிழமை மற்றும் கனமழை காலங்களில் அணைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அணைக்குள் நடந்தோ அல்லது சொந்த வாகனங்களிலோ செல்ல அனுமதி இல்லை.  அணைக்குச் செல்ல, மின்சார வாரியத்தால் இயக்கப்படும் பேட்டரி கார்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேட்டரி கார்களில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு ரூ.150 மற்றும் சிறுவர்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  அணைக்குச் செல்ல விரும்புவோர், [www.keralahydeltourism.com](https://www.keralahydeltourism.com) என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.  முன்பதிவைப் பொறுத்து, நேரடியாகச் சென்று நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பு நாட்கள்: வாரம் தோறும் புதன்கிழமை, அணை பராமரிப்புக்காக மூடப்படும்.

மழை முன்னெச்சரிக்கை: கனமழை இருக்கும் நாட்களில் பாதுகாப்புக் கருதி அனுமதி இல்லை.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன.

வாகனங்களுக்கான பேன்சி எண்கள்

ஏல முறையில் ஒதுக்கீடு வரைவு விதிகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை, ஆக. 31– வாகனங்களுக்கான ‘பேன்சி’ எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை, தமிழ்நாடு அரசு அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து விதமான வாகனங்களுக்கும், அந்தந்த பகுதியில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பதிவு எண் வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தாங்கள் விரும்பும் பதிவெண்களை வாங்க, தனி கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், வாகனங்களுக்கான பேன்சி எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய வரைவு விதிகளை தமிழ்நாடு அரசு அரசிதழில், கடந்த 18ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி அதிக தேவை உள்ள எண்களுக்கு, ‘இணைய தளம்’ முறையில் ஏலம் விடப்படும். இதற்கான நுழைவுக் கட்டணம், 1,000 ரூபாய். பேன்சி எண் பெற விரும்புவோர், https://fancy.parivahan.gov.inஇணையதளத்தில் பதிவு செய்து, எண்களை தேர்வு செய்ய வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றோர், 48 மணி நேரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது

தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஆக. 31– ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான நடவடிக்கையை ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நிர்வாக ரீதியிலான தாமதத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.

ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது. ஓய்வுபெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம். தவறு கண்டறியப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *