ஒன்றிய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் ஹிந்தி ஆசிரியர் உட்பட ரயில்வே அதிகாரிகள் இருவர் கைது

3 Min Read

சென்னை, ஆக.30– ஒன்றிய அரசு பணி தேர்வுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு தேர்வு எழுதிய புகாரில் 2 ரயில்வே அதிகாரிகள், ஹிந்தி ஆசிரியர் ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிய அரசு பணியில் 35 காலி பணி யிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த 17.9.2023 அன்று நடத்தியது.

“இந்த தேர்வை ஆள்மாறாட்டம் மூலம் எழுதி அரியானாவை சேர்ந்த காஜல், பீகாரை சேர்ந்த சகுன்குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிங்கு, பிரேம்சிங், அங்கித்குமார், ஜித்துயாதவ் ஆகிய 6 பேர் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நட வடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலு வலகத்தில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி புகார் அளித்தார்.

3 மாநிலங்களில்
காவல்துறையினர் முகாம்

இது தொடர்பாக சென்னை காவல்துறையினர் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பணி ஆணை பெற்ற காஜல், சகுன்குமார் உள்பட 6 பேரும் அதிரடியாக கடந்த ஜுலை மாதம் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு பெருந்தொகையை பெற்றுக் கொண்டு தேர்வு எழுதி கொடுத்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இறங்கினார்கள். அதன்படி ஆய்வாளர்கள் சுமதி, கமல்மோகன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. டில்லி, பீகார் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் முகாமிட்டு புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.

ரயில்வே அதிகாரிகள் கைது

காவல்துறையினரின் புலன் விசாரணையில், பீகாரை சேர்ந்த சகுன்குமாருக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது பீகாரை சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (வயது 34) என்பதும், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி அருகே உள்ள சோப்பன் ரயில் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டிங்குவுக்கு தேர்வு எழுதி கொடுத்தது அதே மாநிலத்தை சேர்ந்த அரவிந்தகுமார் (30) என்பதும், டில்லி அருகே உள்ள புலந்த்ஷஹர் என்ற ரயில் நிலையத்தில் மூத்த கமர்ஷியல் மற்றும் ‘டிக்கெட்’ சூப்பர்வைசராக புரிந்து வருவதும் கண்டறியப்பட்டது.

ஜித்துயாதவ்வின் பெயரில் தேர்வை எழுதியது உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்தர் குமார் (32) என்பதும், இவர் அந்த மாநிலத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் 3 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆணையர்
எச்சரிக்கை

காஜல், பிரேம்சிங், அங்கித் குமார் ஆகியோருக்கு தேர்வு எழுதிய ஆள்மாறாட்ட நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான புலன் விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடும் சவால்களுக்கு மத்தியில் குற்றவாளிகளை கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரை ஆணையர் அருண் பாராட்டி உள்ளார். இந்த மோசடி செயல் தொடர்பாக அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அரசு பணிகளுக்கு தேர்வு எழுத உதவுவதாக கூறி தங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *