கலைவாணர் என்றும் வாழ்பவர்! தலைமுறைகள் தாண்டினாலும், தயக்கம் சிறிதுமின்றி அனைவரையும் சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல; அந்தச் சிரிப்பின் மூலம் சிந்தனையைத் தூண்டி சுயமரியாதையும் பகுத்தறிவும் பெற வைப்பவர். பார்வையாளர்களைக் கட்டணம் செலுத்திப் பார்க்க வைத்து சினிமா, நாடகம், வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் எதனையும் அறிவு வழி திருப்பிய அபூர்வ, அதிசய மனிதர் நமது நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள், அரை நூற்றாண்டுகூட தாண்டாமல் 49 வயதில் இயற்கையின் ‘கோணல் புத்தியால்’ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நகைச்சுவை நாயகர்!
அவருக்கு இன்று (30.8.2025) நினைவு நாள். அவரை என்றும் கலையுலகமும், சுயமரியாதை உலகமும் மறந்ததே இல்லை. மறந்தால் அல்லவா தனி நினைவு நாள் என்று கேட்பாரும் உண்டு!
என்றாலும் இது ஒரு வரலாற்றுக் குறிப்பு – அவ்வளவுதான்!
சுயமரியாதைப் பாடங்கள் சொல்லித் தரும் கொள்கைப் பாட வகுப்புகளாக தந்தைபெரியார் நடத்திய பச்சை அட்டை ‘குடிஅரசு’ தான் கலைவாணரின் ஆரம்ப கால ஆசிரியர், வகுப்பறை எல்லாம்!
அவரும், அவரது வாழ்விணையராக நடிப் பினால் ஒன்றிணைந்த டி.ஏ. மதுரம் அவர்களும் கலைத் துறையை சுயமரியாதை நிலைத் துறை யாக்கி மக்களை அந்நாளில் சிரித்து மகிழ்ந்து சிந்திக்க வைத்த சீராளர்கள் ஆவார்கள்.
அவருடைய நகைச்சுவை நிகழ்வுகள் ஒளி – ஒலிப் பதிவை இன்று உள்ள இளந்தலைமுறையினரும் சுவைத்து மகிழ்வதினால் – தலைமுறை இடைவெளி இல்லாத தன்னிகரற்ற தகைசால் தன்னேரில்லாத தமிழ்ப்பெருமகன்.
திராவிட இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் – திரை உலகில் – அந்நாளில்!
பழமையில் ஊறிய கலை உலகத்தை பழைய பஞ்சாங்கங்களை சிரிப்பால் சீர்திருத்தி புது உலகத்திற்கு இட்டுச் சென்ற சமூகச் சிற்பிகள் அவரும், டி.ஏ. மதுரம் அம்மையாரும், உடுமலை நாராயணக் கவிராயர் குழுமமும்!
‘‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி’’ என்ற ஒரு பாடலில், புது உலகத்தைக் காட்டுவார். அது செயலாகி மலர்கிறது இன்று!
தி.மு.க. என்பார் – அந்நாளைய சென்சார் (இன்று அதைவிடக் ெகாடுமை – அது வேறு) கத்திரிக் கோலைத் தூக்க அவகாசம், அவசியம் இன்றி,
அடுத்த வரியில் பாடுவார்
‘‘தீனா… மூனா… கானா… எங்கள் தீனா… மூனா… கானா… (தி.மு.க.)’’ – திருக்குறள் முன்னணிக் கழகம்!
ஒரே கைத்தட்டல் அரங்கத்தில்! ‘பாட்டுக்காக’ என்பதைவிட, அந்த உத்திக்காக – அரும்பெரும் புத்திக்காக!
‘திருஞானசம்பந்தர்’ திரைப்படத்தில் கலைவாணர் பாடுவார்.
‘‘சின்ன வயசிலே சொன்னான் ஒரு பாட்டு என்று போடுகிறாயே ஒரு வேட்டு’’ என்று அப்படத்தின் அடி வேரையே சிதைத்து விடுவார் சிரிப்பு என்ற போராட்டம் மூலம்!
‘திருக்குறள் தந்தார் பெரியார்’ பெரியார் பெயரா – சென்சாரின் புருவங்கள் நெறிக்கப்படும் நிலையே!
அடுத்த வரியில்,
‘திருக்குறள் தந்தார் பெரியார் – வள்ளுவப் பெரியார்’ கத்தரிக்கோல் உடைந்து வீழ்ந்தது!
இப்படிப் பலப்பல!
அதனால் அழி வழக்குப் போட்டு, அவர் புகழைக் குலைக்க அந்நாளில் சில வைதீகர்கள் முயன்ற நிலையில், செய்யாத கொலைக்கு முதலில் அவருக்கு ‘ஆயுள் தண்டனை’ வழங்கப்பட்டது.
‘குடிஅரசில்’ தலையங்கம் தீட்டினார் தந்தை பெரியார். ‘அய்யோ கிருஷ்ணா, உனக்கா 14 வருட தண்டனை’ என்ற தலைப்பில்! அவ்வெழுத்து எஃகு உலோக உள்ள மனமானலும் உருகச் செய்யும், அழச் செய்யும். ஆழமான மனிதநேயம் ெகாந்தளிப்பாக சீற்றம் எடுத்த சிறப்புக்குரியது.
அவரது பகுத்தறிவுப் படக்காட்சியும், பாடல்களின் மாட்சியும் எண்ணில் அடங்காதவை.
ஏட்டில் எளிதில் எழுதிட முடியாது.
வாழ்கிறார் கலைவாணர் இன்றும் என்றும்
காலத்தை வென்ற நகைச்சுவைக் கருவூலமாக!
வாழ்க நம் கலைவாணர்!
வருக அவர் காண விரும்பிய புதிய உலகம்!!