பலத்த மழை பெய்தாலும் தண்ணீரைத் தேக்கி வைக்க புதிய ஏற்பாடு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குளங்களின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 Min Read

சென்னை, ஆக. 30- சென்னை மாநகராட்சி சார்பில், கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் மழைநீரால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி 477 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்ககூடிய வகையில் 27.67 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய குளங்கள் இங்கே உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கான சக்தி கொண்ட பெரிய குளங்கள் தோண்டப்பட்டு, 49,772 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்கி வைப்பதற்கான குளங்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் தென் சென்னை குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாத வண்ணம் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 3,081 கி.மீ. தூரத்துக்கான மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ள சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருக்கிணைத்து சென்னையில் கடந்த காலங்களில் எங்கேயெல்லாம் மழைநீர் தேக்கம் இருந்ததோ. அந்த பகுதிகளில் முற்றிலுமாக மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 45 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,000 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னமும் 600 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் கால்வாய்களைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த பணிகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முடிக்கப்படும். 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தால்கூட அதைத் தாங்கும் வகையில் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *