சென்னை, ஆக.30- சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) “ஊர் கேப்ஸ்” செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும்.
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு சிஎன்ஜி ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் பன்னாட்டு மகளிர் நாளான 8.3.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சிஎன்ஜி ஆட்டோக்கள் மூன்றாம் கட்டமாக வழங்கப்பட உள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.09.2025 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.அய். மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்
சென்னை, ஆக. 30- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.8.2025) மருத்துவமனைக்கு வந்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில், கடந்த 22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினை காரணமாக, சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், கடந்த 24ஆம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தொடர்ச்சியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.8.2025) மருத்துவமனைக்கு வந்து, நல்லகண்ணு உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் நா.பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.