உலக குரு அல்ல, உலக ரவுடி!

4 Min Read

நரேந்திர மோடி 2014 மே மாதம் பிரதமரானதிலிருந்து, பாரதிய ஜனதா கட்சியும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கமும் இந்தியாவை “விஸ்வ-குரு”வாக்குவோம் என்று உரக்கப் பிரகடனப்படுத்தி வருகின்றன. உலகின் குருவாக மாறுவதற்காகச் பன்னாட்டு அரசியலில் இந்தியாவின் முயற்சிகள் தோல்வியடைந்து வந்தாலும், பன்னாட்டு கிரிக்கெட்டில் இந்தியா உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக உள்ளது. ஆனால் அதன் செயல்கள் கிரிக்கெட்டின் நலனுக்கு உகந்தவையா என்பது கேள்விக்குறி.

2017ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களையும் அடிபணியவைக்கும் ஆசை பி.சி.சி.அய் அதிகாரிகளை ஆட்டிப்படைப்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

இந்தியா, பன்னாட்டு அரசியலில் அமெரிக்கா இருப்பதுபோல, பன்னாட்டு கிரிக்கெட்டிலும் விதிகளை உருவாக்கும் நாடாக மாறக் கூடாது” என்று எனது சக ஊழியர்களிடம் கூறியதை எனது 2022ஆம் ஆண்டு புத்தகத்தில் பதிவுசெய்திருந்தேன்.

எச்சரிக்கைக் குரல்

ரோட் லியாலின் (Rod Lyall) புதிய புத்தகமான தி கிளப்: எம்பையர், பவர் அண்ட் தி கவர்னன்ஸ் ஆஃப் வேர்ல்ட் கிரிக்கெட் என்பதைப் படிக்கும்போது, என்னுடைய (கவனிக்கப்படாத) எச்சரிக்கைகள் நினைவுக்கு வந்தன. 1909இல் ஏகாதிபத்திய சுரங்க அதிபரான ஏப் பெய்லியின் சிந்தையில் உதித்த இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் (Imperial Cricket Conference) உருவான கதையுடன் புத்தகம் தொடங்குகிறது. அதன் முதல் சில பத்தாண்டுகளில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய வெள்ளை நாடுகள் ஆதிக்கம் செலுத்திவந்தன.

குறிப்பாக. இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இழிவாகவும் அலட்சியத்துடனும் நடத்தப்பட்டன. பன்னாட்டு கிரிக்கெட் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதில் இவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அய்.சி.சி ஏகாதிபத்தியப் போக்கும் இனவெறியும் நிறைந்த விளையாட்டு நிருவாக அமைப்பாகவே இருந்தது. (1946வரையிலும் அய்.சி.சி கூட்டங்களில் கலந்துகொள்ளும் பி.சி.சி.அய் பிரதிநிதி வெள்ளை ஆங்கிலேயராகவே இருந்தார்.)

1965இல், அய்.சி.சியின் “ஏகாதிபத்தியம்” “பன்னாட்டு மயமாக” மாறியது. 2005ஆம் ஆண்டில், அய்.சி.சியின் தலைமையகம் லண்டனிலிருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது. இது, “அமைப்பு அதன் புதிய தெற்காசிய சக்தி மையத்திற்கு நெருக்கமாக” வருவதைக் குறித்ததாக ரோட் லியாலின் நூல் குறிப்பிடுகிறது.

கடந்த பத்தாண்டு களில், இந்தியா உலக கிரிக்கெட்டை எவ்வாறு ஆதிக்கம் செய்கிறது என்பது குறித்து ரோட் லியாலின் புத்தகம் ஆராய்கிறது. அவரது பார்வையில் சில குறைபாடுகள் இருந்தாலும், பி.சி.சி.அய்யின் ஏகாதிபத்திய ஆசைகள் குறித்த அவரது கூற்றுகள் நியாயமானவை.

மோடி–ஷா யுகத்தில் கிரிக்கெட்

2024 டிசம்பரில், இந்தியாவின் உள்துறை அமைச்சரின் மகன், பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார். ஜெய் ஷாவின் பதவி உயர்வு குறித்து லியால், “அய்.சி.சி இப்போது, இந்திய தேசியவாத அரசியல் கட்சியின்  கருவியாக மாறுகிறது. கழுகுகள் உலக கிரிக்கெட்டின் மீது கூடு கட்ட வந்துவிட்டன” என்று எழுதுகிறார்.

பி.சி.சி.அய் உலகின் கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யும் அபாயம் குறித்து டோனி க்ரெய்க் 2012ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில், “கிரிக்கெட்டின் முதல் நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டை நிருவகித்தன. பல சந்தர்ப்பங்களில் சுயநலமே கிரிக்கெட்டின் உணர்வைவிட முக்கியமாக இருந்தது.

இந்தியா போன்ற நாடுகள் பாகுபாட்டுக்கு ஆளாயின” என்று அவர் ஒப்புக்கொண்டார். இப்போது, இந்தியாவின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் இருப்பதால், “கிரிக்கெட்டின் உணர்வுக்கு இணங்க இந்தியா நடந்துகொண்டால் கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளும் களையப்படும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆதிக்கத்திற்குச் சில காரணங்கள் உள்ளன: இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள பெரும் ஆதரவு, அத்துடன் அய்.சி.சியின் முதல் 80 ஆண்டுகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அவற்றின் கூட்டாளி களின் ஆதிக்கம் போன்றவை. இருப்பினும், இந்தக் காரணங்களோ அல்லது தளைகளற்ற இந்திய முதலாளித்துவத்தின் கொடுமையோ கிரிக்கெட்டை ஒரு சில தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் பேராசை கொண்ட செல்வந்தர்களால் பணயக்கைதியாக வைத்திருப்பதற்கான நியாயமாகாது.”

பன்னாட்டு ஆதிக்கத்திற்கான வெறித்தனமான ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பி.சி.சி.அய்க்கு ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள சுயநல நிர்வாகிகளும் உதவியுள்ளனர். இந்தப் போக்கு, அது துணைக்கண்டத்தின் மற்ற நாடுகளை, அந்நியப்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவில் வெளியான ஒரு காணொலியில், ஜெய் ஷா வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணியைவிடவும் கிரிக்கெட்டுக்கு முக்கியமானவராகச் சித்தரிக்கப்பட்டது இதன் விபரீதமான வெளிப்பாடாகும். உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இதைக் கண்டு வெட்கப்பட வேண்டும்.

ஆதிக்கமும் தரமும்

1909இல் அய்.சி.சி உருவானதிலிருந்து அது சதித்திட்டங்கள், திறமையின்மையின் கூடாரமாகவே இருந்துள்ளது. இப்போது ஊழலும் தீய எண்ணங்களும் இதில் சேர்ந்துள்ளன.

கோடிக்கணக்கான ரசிகர்கள், பணம், புகழ், பி.சி.சி.அய்யின் செல்வம், செல்வந்தர்கள், அரசியல்வாதிகளின் முதலீடுகள் ஆகிய எல்லாம் இருந்தும், இந்திய கிரிக்கெட்டின் தரம் உலக அளவில் சாதாரணமாகவே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவைவிட நாம் பின்தங்கியே இருக்கிறோம். பாஜக விரும்புவதுபோன்ற “விஸ்வ குரு” அந்தஸ்து தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. ஆனால், பன்னாட்டு கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, நாம் உலக குருவாக மட்டுமல்ல; உலக ரவுடியாகவும் இருக்கிறோம்.

ராமச்சந்திர குஹா, வரலாற்றாசிரியர். சமகால வரலாறு, கிரிக்கெட் உள்ளிட்டவை குறித்த முக்கியமான நூல்களை எழுதியவர்.

நன்றி: மின்னம்பலம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *