‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (4)

8 Min Read

சோதிடர்களுக்கு “காணிக்கை!”

“மக்களின் வாழ்க்கைக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கோள்கள் (கிரகங்கள்) மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்தவிதமான அறிவுப்பூர்வமான ஆதாரமே கிடையாது. சோதிடம் பொதுமக்களிடையே மூடத்தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்த சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவைகள்!

186 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு “தி ஹியுமனிஸ்ட்” ஏட்டின் இவ்வாறு சிறப்பிதழிலே அறிக்கை வெளியிட் டுள்ளனர். இவர்களுள் 18 விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை காலம் தான் ஏமாறுவரோ
இந்த “படித்த தற்குறிகள்!”

நம் நாட்டில் “படித்த முட்டாள்” என்று ஒரு சொலவடை உண்டு. சற்று கடினமானதும், காரமானதும் ஆன சொல்தான் இது. படிப்பு என்பதே மக்கள் முட்டாள்களாகக் கூடாது என்பதற்குத்தான் தேவை! ஆனால், இப்படியும்கூட நடக்குமா இந்த அறிவியல் வளர்ச்சி யுகத்தில் இதுபோன்ற மனிதர்களும் கூட இந்த பூமிப்பந்தில் வாழுகிறார்களா? என்ற வியப்பு நம் போன்ற பலருக்கும் விலாவைக் குடைவதாக இருக்கிறது!

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற ஒரு கற்பனைக் கதை படிக்க – கேட்க சுவையானது தான். ஆனால், இன்று உண்மை என்று நம்பி, அதுவும் மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் ஏமாறுகிறார் என்றால், அதுபற்றி என்னதான் சொல்லுவது? புரியவில்லை.

ஏற்கெனவே உங்களில் ஒரு சிலர் இந்தச் செய்தியை சில ஏடுகளில் படித்திருக்கக்கூடும் என்றாலும் வாழ்க்கையில் பேராசைக்கும் அடிமைப்பட்டு, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வறண்ட பாலைவனமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக “விடுதலை”யிலும், மற்ற செய்தித் தாள்களிலும் வந்த செய்தியை அப்படியே தருகிறோம், படியுங்கள்! படித்து, எத்தனை காலந்தான் ஏமாறுவார்களோ படித்தவர்களான பிறகும்கூட என்று கேட்கவே தோன்றும்!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாய்க்கஹன், இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து பிரபல மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

ஞாயிறு மலர்

கலிலியோ

சில ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம் சமீனா என்ற பெண் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் மூலம் மருத்துவருடன் அவரது குடும்பத்தினர் அறிமுகமானார்கள். சமீனாவின் கணவர் இஸ்மாயில் மருத்துவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது விலை உயர்ந்த பொருட்களை கொடுத்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் கேட்டபோது “எங்கள் குடும்பத்தின் மூதாதையர் அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள். அப்படி வரும் போது அலாவுதீன் அற்புத விளக்கையும் கொண்டு வந்துள்ளனர். அதை நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். எங்களுக்கு நேரம் இருக்கும்போது அந்த விளக்கைப் பயன்படுத்தி எங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வோம். அந்த விளக்கின் மூலம் கிடைத்த பொருட்கள் தான் இவை” என்று கூறி ஏமாற்றி உள்ளார்.

வெளிநாடுகளில் படித்திருந்தாலும் மூடநம்பிக்கை காரணமாக சிந்திக்காமல் அவரின் பேச்சை அப்படியே நம்பிய மருத்துவர் அதை தனக்கு விலைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் 10 கோடி ரூபாய் கொடுத்தால் அந்த விளக்கை நான் தருவேன் என்று கூறினார். மேலும் அரபு நாடுகளில் இதை வாங்க நூறு கோடி வரை கொடுக்கக் தயாராக உள்ளனர் என்று ஏமாற்று வார்த்தைகளை இஸ்மாயில் கூறினார்.

தான் 10 கோடி ரூபாய் உடனடியாக தர முடியாது, ஆரம்ப கட்டமாக 2 கோடி ரூபாய் தருகின்றேன் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு இணங்கவில்லை. பின்னர் 2 கோடி 50 லட்சத்திற்குப் பேசி முடித்து அந்த விளக்கினை கொடுத்துள்ளார்.

மேலும் அவரை தங்களின் வீட்டிற்கு அழைத்து விளக்கை காட்டி வேண்டியதைக் கேளுங்கள் என்று கூறினார். சில நிமிடங்களில் அந்த அறை முழுவதுமே புகையாக பரவியது. பின்னர் பூதம் போன்று வேடம் அணிந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டு இருந்தார். உடனே மருத்துவர் சில பொருட்களைக் கேட்க அனைத்தும் உங்கள் வீட்டில் வைத்துவிட்டேன் என்று அந்த பூதமாக வேடம் போட்டவர் கூறினார். அதன் பிறகு மீண்டும் புகை தோன்ற அந்த பூதம் வேடமிட்டவர் ஓடி ஒளிந்துகொண்டார்.

இதனை அடுத்து மருத்துவர் விளக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு பல எதிர்பார்ப்புகளோடு சென்ற அவர் அங்கே ஒன்றுமே இல்லாதது கண்டு பின்னர் பலமுறை விளக்கைப் பார்த்து பூதமே வெளியே வா? என்று கூறியுள்ளார். ஆனால் பூதம் எதுவும் வரவில்லை. இதனை அடுத்துதான் ஏமாற்றப்பட்டதை மிகவும் தாமதமாகத் தெரிந்து கொண்டார்.

இதனை அடுத்து பிரம்மபுரி காவல் நிலையத்தின்கீழ் வரும் காநகர் பகுதியில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மருத்துவர் லாய்க்கஹன் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் சமீனாவின் கணவர் இஸ்மாயில் மற்றும் அவரின் நண்பரைக் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சமீனா என்ற அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.”

இதுதான் அந்த செய்தி!

மூடநம்பிக்கைக்கும், பேராசைக்கும் ஜாதி, மதம், நாடு என்ற எல்லையெல்லாம் கிடையாது!

“உங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. அதை உங்கள் வங்கிக் கணக்கில் (கிரெடிட் செய்ய) சேர்க்க வேண்டும். எனவே, உங்கள் வங்கி கணக்கு, ஆதார் முதலிய தகவல்களை இந்தத் தொலைபேசி எண்ணுக்கோ, மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள் என்று வந்தவுடன், அதுபற்றி என்னவென்று தெரியாத அந்த மின்னஞ்சலை நம்பி. “நமது வங்கிக் கணக்கு எண்ணை தரலாமா? என்ற பொது அறிவுகூட இல்லாதது பெருந்தொகை கனவான்கள்” எப்படி தங்களிடம் உள்ள அத்துணை சேமிப்புகளையும் இவர்களைத் தேடிச் சென்று இழக்கிறார்கள் என்று தெரியவில்லை.! இவற்றை எண்ணும்போது எப்படிதான் திருத்துவதோ?

ஞாயிறு மலர்

கோபர் நிக்கஸ்

எத்தனை காலம்தான் ஏமாறுவார்கள் இது போன்ற படித்த தற்குறிப் பேராசை மன்னனகள்? புரியவில்லை. பகுத்தறிவு வாழ்க்கையின் எல்லாவித கோணங்களிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். எளிதில் ஏமாறக் கூடாது! ஏமாற்றுபவருக்கு அது தொழில். ஏமாறுபவர் நிலை அப்படி இல்லையே! புரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு என்பது அறிவியல் சார்ந்த தத்துவமாகும்.

பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது.

பகுத்தறிவு வளர வளர மூடநம்பிக்கை விலகும்.

அறிவியலும், மதமும்!

பூமி உருண்டையானது எனக் கண்டறிந்தவர் “கலிலியோ” விஞ்ஞவானக் கூற்றை மதக்கோட்பாடு ஏற்கவில்லை. அவரை வாழ்நாள் சிறை வைத்தது மதவெறி 360 ஆண்டுகளுக்குப் பின் 1992இல் தவறு என கத்தோலிக்க மதபீடம் மன்னிப்பு கேட்டது. விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட்டது. பூமி உருண்டை என ஏற்று பைபிளிலும் திருத்தம் செய்யப்பட்டது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வரும் விஞ்ஞானக் கூற்றை நிரூபித்தவர் கோபர் நிக்கஸ், மதவாதிகள் கல்லால் அடித்து அவரைக் கொன்றனர்.

அதே கருத்தை வழிமொழிந்த புருனோவை உயிரோடு கொளுத்தினர் மதவாதிகள்.

மூடநம்பிக்கையால் அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

சந்திரன் ஒரு தெய்வம் அல்ல. அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார். கி.மு.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர்கள் ஆனக்ஸகரஸ். ஏதென்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதென்சு நகர மன்னர் பெரிகளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர்.

சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார் கோபர்நிக்ஸ் மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட் மதத்தை நிறுவிய மார்ட்டின் லுலூதர் கோபர்நிக்சை “முட்டாள்!” என்று கூறி இழிவுப்படுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போது தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார்.

ஞாயிறு மலர்

ஜியார்டனோ புருனோ

அவரை விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக் கூறியவர், அறிவியல் அறிஞர் யோவான் கெப்ளர், இவரது கருத்தை மதத்துக்கு எதிரானது என்று கூறி கண்டித்தனர். இவர் சில காலம் பேரரசர் அவையில் கணித வல்லுநராக இருந்தார். அதனால் நேரிடையாக எதிர்க்க முடியாததால், 75வயதான இவரது தாயார் காத்தரீனா கெப்ளரை, தன் மகனுக்கு இவர்தான் மதவிரோதக் கருத்தினைச் சொல்லிக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டி, அவரைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் கை கால்களைப் பிணைத்து, இருட்டுச் சிறைக் கிடங்கில் தள்ளிப்பூட்டி அடைத்துச் சித்திரவதை செய்தனர். 14 மாதங்கள் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். எனினும் அவர், தான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியில் கெப்ளரின் தாயாரை ஊரை விட்டு வெளியேற்றி மீண்டும் நகர் திரும்பக் கூடாது என்று கூறி துரத்திவிட்டனர்.

கோப்பர்நிகஸ் கூறிய கோள்களைப் பற்றிய கொள்கையை உண்மைதான் என்று கூறியதற்காகவும், தமது புரட்சிகரமான கருத்துகளுக்காகவும் சித்திரவதையை அனுபவித்தவர் இத்தாலி நாட்டு அறிஞர் ஜியார்டனோ புருனோ! இவரை எட்டாண்டு காலம் சிறைக்குள் அடைத்து. பின் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டி, மதவிரோதி என்று கூறி மன்னிப்புக் கேடகக் கூறினார். புருனோ மன்னிப்பு கேட்க மறுத்தார். இவரைச் சுட்டுப்பொசுக்கிக் கொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு ரோமாபுரி நகரின் முக்கிய சதுக்கத்தில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து நெருப்பிட்டு உயிருடனே கொளுத்திக் கொன்றனர்.

“நமது பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது” என்ற கருத்தை வெளியிட்டதற்காக கலிலியோவை ரோம் நகரத்து மதவாதிகள் சிறையிலடைத்தனர். சித்திரவதை செய்தனர். பைபிளில் கூறியதற்கு மாறான கருத்தைக் கூறிய மாபாவி என்று குற்றம் சாட்டப்பட்டு மத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். “மதக் கொள்கை தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், இன்றேல் உயிரிழக்க வேண்டி வரும்” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார். முதுமையின் கோலத்தாலும், உடல் நலிவாலும் தனது கொள்கைகள் தவறு என்று முழந்தாளிட்டு மன்னிப்பு வேண்டி கர்த்தரை மன்றாட வேண்டிய இக்கட்டுக்கு ஆளானார். எனினும் இவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன் “நீதிமன்றத்தினருக்காக உண்மை மாறி விடாது. பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது” என்று கூறினார். எனவே இவரை மீண்டும் கொடுமைப்படுத்தினர். கண் பார்வை இழந்த நிலையிலும் இவரை வீட்டுச் சிறையிலே சாகும் வரை வைத்திருந்தனர் . இவர் இறந்த பின் நினைவுச் சின்னம் எழுப்பக்கூட அரசு அனுமதிக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *