நமது நாட்டு வரலாறு என்பது பெரும்பாலும் உண்மைகளை உரைக்கும் வரலாறாக முழுமை பெற்றதாக இல்லை. வரலாற்றாசிரியர்கள் எல்லாம், வரலாறுகளை எழுதிய காலகட்டத்தில் அவற்றை எழுதியவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள். அந்த நேரத்தில் படித்தவர்கள் என்பவர்கள் அவர்கள்தான். அதனால் ஒருதலைப்பட்சமாக தங்கள் வசதிக்கேற்ப எழுதப்பட்டதாகத்தான் நம்முடைய வரலாறுகள் அமைந்துள்ளன. ஏராளமான வரலாறுகள் பார்ப்பனர்களுக்கு எதிராக இருந்தன என்ற காரணங்களால் இருட்டடிப்புக்கு ஆளாகின. தந்தை பெரியார் நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடுகையில், “இந்த நாட்டின் வரலாறு என்பதே ஆரிய, திராவிடப் போராட்டம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வரலாற்றை ஆய்ந்து படித்தவர்களால் இதை நன்கு உணர முடியும், பார்ப்பனர்களை ஆதரித்தவர்கள், பார்ப்பனர்களே ஆட்சி செய்யும் காலகட்டங்கள் மிகவும் சிறந்த காலங்களாகவும், பொற்காலங்களாகவும் உருவகப்படுத்தப்பட்டன. அதே பார்ப்பனர்களுக்கு எதிராக ஆட்சி செய்தவர்களின் காலங்கள் இருண்ட காலங்களாக எழுதப்பட்டன.
இந்த நாட்டின் மதங்களான புத்தமும், சமணமும் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பாகவும், பார்ப்பனர்களும் வேத மதத்தை (அப்பொழுது “இந்து மதம்” என்றெல்லாம் ஒரு மதமே கிடையாது!) எதிர்ப்பதாகவும் இருந்ததால், பார்ப்பனர்களால் நாட்டை விட்டே விரட்டப்பட்டன. முதல் முதலாக அரசன், அரசாட்சி, நாடு என்றெல்லாம் உருவான நந்த வம்சம், பார்ப்பனன் சாணக்கியனால் அழிவுக்கு ஆளானது. அவர்கள் ஆட்சி ஒழிந்து மவுரியர்கள் ஆட்சி வந்தது. ஒரு பேரரசாக கட்டமைக்கப்பட்ட முதல் பேரரசாக மவுரியப் பேரரசு அமைந்தது. ஆரம்பத்தில் வேத மதக்கார ஆட்சியாளராக இருந்த அரசர்கள் பின்னால் புத்த மதத்தைத் தழுவினார்கள். மிகவும் புகழ்வாய்ந்த புத்தமத மன்னராக அசோகர் இருந்தார். வேத மதம் வீழ்ச்சியுற்ற காலம் அது. அசோகரின் பேரன் பிரகத்திரனை அவனுடய தளபதி புஷ்யமித்திர சுங்கன் சதி செய்து கொன்று, சுங்கவம்ச ஆட்சியை நிறுவினான். பார்ப்பன புஷ்ய மித்திர சுங்கன் புத்த மதத்தை ஒழிப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்தான். அவன் காலத்தில் வேத மதம் செழித்தது. அவனது சுங்க வம்சப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் குப்தப் பேரரசு அமைந்தது. குப்தர்கள் காலம் “பொற்காலம்” என்று வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் குப்தர்கள் காலம் பார்ப்பனர்களுக்குத்தான் பொற்காலமாக இருந்தது. அவர்களின் மொழியான சம்ஸ்கிருதம் நாட்டில் ஆட்சி செய்தது. அவர்கள் இலக்கியங்கள், அவர்கள் வாழ்வியல்தான் இந்த நாட்டின் வாழ்வியலாக எழுதப்பட்டது.
மத்திய ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்த பார்ப்பனக் கூட்டம் இந்த நாட்டின், “மண்ணின் மைந்தர்களாக” மாற்றப்பட்டது குப்தர்கள் காலத்தில்தான். பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்புக்கு குப்தர்கள் பேரரசு அனைத்து ஆதரவும் வழங்கி ஊக்கப்படுத்தியதால் அவர்கள் (பார்ப்பனர்) காலம் “பொற்காலமாக” மாறியது. மத்திய ஆசிய நாடோடிக் காட்டுமிராண்டிக் கூட்டம் கைபர், போலன் வழியே வந்தது நிற்கவில்லை. குப்தர்கள் காலத்திலும் தொடர்ந்தது. குப்தர்கள் பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள், “ஹெப்தலைட்டுகள்” என்று அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் நிறுவிய பேரரசு ஹீனர்கள் பேரரசு. அவர்களின் கடவுள்கள் இந்திரன், சிவன், விநாயகன், லட்சுமி போன்றவை இவர்கள் காலத்தில்தான் இந்த மண்ணில் இறக்குமதியாகின.
இந்த நாட்டின் மக்களோடு ஒன்றாகக் கலந்த இந்த ஆரியக் கூட்டம் உருவாக்கிய இனம்தான் இராஜபுத்திரர்கள். இராஜ புத்திரர்கள் ஆட்சியில் பல அரசுகளாகப் பிரிந்து ஆட்சி அமைத்தபோது, அடுத்தப் படையெடுப்புதான் இசுலாமியர்கள்! பல இசுலாமியர்கள் படையெடுப்புகளுக்குப் பின் அமைந்ததுதான் முகலாயப் பேரரசு. முகலாயப் பேரரசின் பரவல், ஒடுக்கப்பட்ட மக்களை அவர்கள் மதத்தில் சேர்த்ததே ஒழிய, பார்ப்பனர்களுக்குப் பெரிதாகத் தொல்லைகள் கொடுக்கவில்லை. அதனால் பார்ப்பனர்கள் அவர்களை எதிர்த்துப் பெரிதாகக் கூக்குரல் எதுவும் எழுப்பவில்லை. முகலாயர்கள் காலத்திலேயே அடுத்து ‘வணிகம்’ என்ற பெயரில் ஊடுருவியர்கள் அய்ரோப்பியர்கள்.
போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று அய்ரோப்பாவிலிருந்து தொடர்ச்சியாக வந்த இவர்களில் முடிவாக இந்தத் துணை கண்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். பார்ப்பனர்களின் மேலாண்மையைத் தகர்த்து, அவர்கள் ஸநாதனக் கோட்பாட்டை உடைத்து, ஒடுக்கப்பட்டோருக்கு வாய்ப்புகளை ஆங்கிலேயர்கள் வழங்கத் தொடங்கியபோது, பார்ப்பனர்களுக்கு எதிரிகளாக அவர்கள் மாறிப் போனார்கள். “சுதந்திரம்” என்ற முகமூடியோடு பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்களை விரட்டினர். அப்போது சுதந்திர நாளை ‘துக்க நாள்’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டார்.
ஆங்கிலேய ஆட்சி போய், “பார்ப்பன ஆட்சி”தான் இங்கு நடக்கும் என்ற கருத்தில்தான் இதைச் சொன்னார். அவர் கூறியபடிதான் இன்றும் இந்த நாட்டில் பார்ப்பன மேலாட்சிதான் நடந்து வருகிறது. ஆனால், இந்த வரலாறுகளெல்லாம் இந்த நாட்டின் வட பகுதியில்தான் நடந்தன. இதைப் பற்றியெல்லாம் முழுமையாக, பெரிதாக எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் தென் இந்தியாவைப் பற்றி எழுதவில்லை என்பது உண்மை. இங்கு ஆட்சி புரிந்த சேரன், சோழன், பாண்டியன் பற்றியோ, அவர்கள் ஆட்சியின் சிறப்பைப் பற்றியோ குறிப்புகள் வரலாற்று நூல்களில் தேடினாலும் கிடைக்காது. நம்முடைய மன்னர்கள், அவர்களின் செழிப்பான ஆட்சிகள் எல்லாம் நம் புலவர்கள் எழுதிய பாடல்களிலும், சங்க இலக்கியங்கள் மூலமே நாம் அறிய முடிகிறது. அதை வைத்தே தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த நம் சரித்திரம் எழுதப்பட்டது. தமிழ்நாடு மூன்று நாடுகளாக இருந்ததும் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என்று புகழ்வாய்ந்த மூன்று பேரரசர்களும், அவர்களின் சிறப்பான ஆட்சிகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
ஆனாலும், அவர்கள் ஆட்சியின் மாட்சிகளை அவர்கள் விட்டுச் சென்ற கலைச் செல்வங்கள் நமக்கு இன்றும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றன. கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் உறுதியோடு, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நின்று, இன்றும் தமிழ் மக்களின் பசியாற்றிக் கொண்டிருக்கும், பொறியியல் சிறப்பை என்னவென்ற சொல்வது? சோழ மன்னர்களின் கடற்படை, கடாரம் (மலேசியா) வரை வெற்றி கொண்டது எவ்வளவு சிறப்பு. பாண்டியர்களின் தமிழ்ச் சங்கங்கள் மூன்றிலும் (முதல், இடை, கடை) அரங்கேறிய இலக்கியங்களின் சிறப்பைச் சொல்லாமலிருக்கவும் முடியுமா? தமிழ்நாட்டின் மேற்கே, ஆண்ட சேரர்களின் மன்னன் சேரன் செங்குட்டுவன் கங்கை வரை படை நடத்தி, வடநாட்டு கனகன், விஜயன் என்ற அரசர்களை வென்று, அங்கிருந்த கற்களை அவர்கள் தலையில் சுமக்க வைத்து, கண்ணகிக்கு சேர நாட்டில் கோயில் எழுப்பிய வீர வரலாறு நம்மை வியக்க வன்றோ வைக்கிறது. அவ்வளவு பெருமைவாய்ந்த சேர நாட்டில், பிற்காலத்தில் பார்ப்பனர்கள் ஊடுருவலால், அந்த நாட்டு மக்கள் இழிவானவர்களாகவும், அடிமைகளாகவும், ஊமை களாகவும் மாற்றப்பட்ட வரலாறை, கறை படிந்த அந்த வரலாறை, மறைந்த, மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தத் தொடர் எழுதும் எண்ணம் எனக்கு எழுந்தது. படியுங்கள்! நடந்த கொடுமைகளை உணருங்கள்.
சேரநாடு மலைகளும், காடுகளும், ஆறுகளும் நிறைந்த வளம் கொழிக்கும் மலை நாடு. விற்கொடியை தங்கள் கொடியாகக் கொண்ட சேர மன்னர்களால் ஆளப்பட்ட நாடு. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே இருந்த தமிழ் பேசும் மக்களின் நாடாக இருந்தது. மாவீரன் நெடுஞ்சேரலாதன் அதன் மன்னனாக இருந்து நல்லாட்சி வழங்கி வந்தான்.
அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் செங்குட்டுவன். இளையவன் இளங்கோ. ஆருடம் கணிப்பவர்கள் இளையவன் இளங்கோதான் பட்டத்திற்கு வந்து சேர நாட்டை ஆள்வான் என்று ஆரூடம் கணித்தனர். அதைக் கேட்டு வெகுண்டு, தம்பி இளங்கோ உடனே துறவறம் பூண்டு, அண்ணன் செங்குட்டுவன் ஆட்சியில் அமர வழி விட்டதாகவும், ஆரூடத்தைப் பொய்யாக்கியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
அந்த இளங்கோதான் துறவியான பிறகு இளங்கோவடிகள் என்று அழைக்கப்பட்டார். தமிழின் அய்ம்பெரும் காப்பியங்களின் ஒன்றான ‘சிலப்பதிகாரத்தை’ எழுதியவர் இவர்தான். சேரன் செங்குட்டுவனுக்கப் பிறகு, சேரமான் பெருமாள் காலத்தில் கி.பி,.789-825, சேரநாடு, ஆய்நாடு, வேணாடு என்ற இரண்டு தன்னாட்சி பெற்ற சிற்றரசர்களால் ஆளும் நிலை ஏற்பட்டது. ஆய்நாடு கன்னியாகுமரி முதல், வடக்கில் திருநல்லா வரை பரவி இருந்தது. வேணாடு கொல்லம், திருவனந்தபுரம் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இந்த சேரநாடு, பின்னாளில் பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது (கி.பி. 650 முதல் 966 வரை). ஆய்வேளிர் என்பவர்கள் பாண்டிய நாட்டின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களாக இந்நாட்டை ஆண்டு வந்தனர்.
வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மன். கி.பி.1758இல் நம்பூதிரி பார்ப்பனர்களால் மார்த்தாண்ட வர்மா கொலை செய்யப்பட்டார். நாயர்கள் சிறந்த போர் வீரர்கள். அவர்களோடு இணைந்து நம்பூதிரி பார்ப்பனர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அன்றிலிருந்து நம்பூதிரிகளே ஆட்சியாளர்களை உருவாக்கினர். அவர்களின் முதல் பொம்மை அரசராக அமர வைக்கப்பட்டவர் “கார்த்திகைத் திருநாள் இராமவர்மன். இவர் காலத்தில் வேணாடு, “திருவாங்கூர்” என்ற பெயர் மாற்றம் பெற்றது. சேரநாடு, திருவாங்கூர் நாடாக (சமஸ்தானமாக) உருவான வரலாறு இதுதான். (அந்த நாட்டு அரசர்கள் பிறந்த நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படும் வரலாறையும் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் புகுத்தினர்.)
திருவாங்கூர் நாட்டின் அரசர்கள் எல்லோரும் பொம்மை அரசர்களாகவே செயல்பட்டனர். ஆட்சி அவர்கள் பெயரில் இருந்தாலும் அதிகாரம் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கையில்தான் இருந்தது. அதன் விளைவு நாட்டின் பெரும்பான்மை மக்கள் அடிமைகளாக்கப்பட்டு, அளவிறந்த கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
நன்றி: http://ta.wikipedia.org
(தொடர்வேன்….)