மகாராட்டிராவில் சோலாப்பூருக்கு அருகில் மர்கத்வாடி என்ற கிராமம் முழுக்க முழுக்க இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளால் நிறைந்த கிராமம். துவக்க காலம் முதலே காந்தியாரின் கொள்கைகளைத் தீவிரமாக கடைப்பிடித்து வந்தது. இன்றும் இந்தக் கிராமத்தில் எல்லா விழாக்களிலும் கதர் ஆடை மட்டுமே புத்தாடையாக அணிந்து மகிழ்வார்கள்.
இந்தக் கிராமத்தில் காந்தியாரின் கொலைக்குப் பிறகு “ஹிந்துத்துவ சக்திகளுக்கு எப்போதும் இடமளிக்க மாட்டோம்” என்று சூளுரைத்த மராட்டிய கிராமங்களில் இதுவும் ஒன்று. மற்றவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கபளீகரம் செய்துவிட்ட நிலையில் இந்த கிராமம் மட்டும் இன்று வரை காந்தியாரின் கொள்கை, காங்கிரஸ் கட்சி, அம்பேத்கரின் பாதை என்றவாறு நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 200 வாக்காளர்கள் உள்ளனர்.
100 ஆண்டுகளாக முழுக்க முழுக்க கதர், காந்தியார், காங்கிரஸ் என்று வாழ்ந்த இந்தக் கிராமத்தில் மராட்டிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் பா.ஜ.க.விற்கு விழுந்துள்ளன. இது இந்தக் கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களித்த அனைவருக்கும் பெருத்த வியப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அனைவருமே நாங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை. பிறகு எப்படி எங்கள் கிராமத்தில் பாஜகவிற்கு வாக்குசென்றது என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து சோலாப்பூர் மர்கத்வாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் நாங்கள் மாதிரி வாக்கெடுப்பு வாக்குச்சீட்டை வைத்து நடத்துகிறோம் என்று அறிவித்தனர்.
இதற்கும் நடந்து முடிந்த தேர்தலுக்கும் தொடர்பில்லை. நாங்களாகவே நடத்துகிறோம். அரசுக்கு எதிராகவோ, சட்டத்திற்கு விரோதமாகவோ நாங்கள் இதை நடத்தவில்லை. எங்கள் மனத்திருப்திக்காக நடத்துகிறோம் என்று கூறி வாக்கெடுப்பு தேதி அறிவித்தனர். அவர்களாகவே டம்மியான வாக்குச்சீட்டு சின்னம் அச்சடித்து வாக்குப் பதிவு தேதியை அறிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
ஆனால், நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் கோமார் ஆசீர்வாத் உத்தரவின் பேரில் கிராம மக்கள் மீது கீழ்க்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
பாரதிய நீதி சட்டம் (BNS) 2023 – பிரிவுகள் பிரிவு 353(1)(b) பொது மக்களிடையே குழப்பம், பயம் அல்லது பிரிவினைகளுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பொய்யான அறிக்கைகள், வதந்திகள் அல்லது தகவல்களைப் பரப்புவதைத் தடை செய்கிறது.
பிரிவு 189(1): இந்தப் பிரிவு, சட்டவிரோதமான கூட்டத்தில் பங்கேற்பதை ஒரு குற்றமாக வரையறுக்கிறது. சட்டவிரோதக் கூட்டம் என்பது, பொது அமைதியை சீர்குலைக்கும் அல்லது குற்றச் செயல்களைச் செய்யும் நோக்கத்துடன் ஒன்று கூடும் நபர்களின் குழுவைக் குறிக்கிறது.
பிரிவு 189(2): சட்டவிரோதக் கூட்டத்தை கலைக்குமாறு சட்டப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அதில் தொடர்ந்து பங்கேற்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
பிரிவு 190: சட்டவிரோதக் கூட்டத்தில் உள்ள ஒருவர், கூட்டத்தின் பொதுவான நோக்கத்தை அடையும் பொருட்டு மற்றொரு உறுப்பினர் செய்யும் குற்றத்திற்கு இந்தப் பிரிவின் கீழ் பொறுப்பாகக் கருதப்படுவார்.
பிரிவு 223: இந்தப் பிரிவு, ஒரு பொது ஊழியர் (Public Servant) தனது கடமையை விட்டு விலகுவது அல்லது தனது பணியிடத்தை கைவிடுவதை குற்றமாக வரையறுக்கிறது.
பிரிவு 103(2): அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் கொலை.
மகாராட்டிர காவல்துறை சட்டம் – பிரிவு 135: இந்தப் பிரிவு, அனுமதியின்றி கூட்டம் நடத்துவது அல்லது சட்டவிரோத நோக்கத்திற்காக ஒன்று கூடுவது, குறிப்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவதை குற்றமாக வரையறுக்கிறது.
பிரிவு 103(2): கொலை போன்ற கடுமையான குற்றங்கள் செய்யத் தூண்டுதல், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றம் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் கிராமத்தினர் அனைவரின் மீதும் நாட்புடே காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
ஒட்டுமொத்த கிராமமுமே சீல் வைக்கப்பட்டு ரிசர்வ் காவல்துறை பட்டாளமும் கிராமத்தை சுற்றி வளைத்தது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இதே போன்றுதான் காவல்துறை பல முறை தங்கள் கிராமத்தை சுற்றி வளைத்ததாக பெரியவர்கள் கூறியதாக அந்த ஊர் மக்கள் கூறினார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் வித்தியாசமில்லை என்றும் கூறுகின்றனர் அவ்வூர்ப் பெரியவர்கள்.
அந்தக் கிராமமக்களின் கோரிக்கை என்ன எங்க ஊரில் யாருமே பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை. அப்படி இருக்க எப்படி எங்கள் ஊரின் வாக்கு பா.ஜ.க.விற்குச் சென்றது என்று கேட்கின்றனர். தாங்களே மாதிரி வாக்கெடுப்பு நடத்தி எங்கள் ஊரின் நேர்மையை நிறுபிக்க வாய்ப்புக் கோருகின்றனர். ஆனால் அரசு மிகக் கடுமையாக நடந்துகொண்டது.
ஏன் என்றால் ஒட்டுமொத்த மகாராட்டிர மாநிலமுமே குழப்பத்தில் இருந்தது. பல ஊர்களில் நாங்கள் பா.ஜ.க.விற்கோ, அதன் கூட்டணிக் கட்சியான ஷிண்டே சிவசேனாவிற்கோ, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசிற்கோ வாக்களிக்கவில்லை என்று தான் கூறுகின்றனர்.
பிறகு எப்படி பா.ஜ.க. அங்கு வெற்றி பெற்றது. அன்றே பெரும் சந்தேகம் எழும்பியது. இந்த சந்தேகத்தை மற்ற எந்த ஊர்க்காரர்களும் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் 10க்கும் மேற்பட்ட பிரிவில் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.