சுயமரியாதை மணமுறையில், மணவிழாவினை செய்துகொண்டால்,
வாழ்க்கையில் நன்றாக இருப்பார்களா, என்னாகுமோ? என்று இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களோ, மற்றவர்களோ பயப்பட வேண்டிய அவசியமில்லை!
என்னுடைய திருமணம் இம்மணமுறையில்தான் நடைபெற்றது; நாங்கள் மகிழ்ச்சியுடன்தான் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம்!
தஞ்சை, ஆக. 29 – சுயமரியாதை மணமுறையில், மணவிழாவினை செய்துகொண்டால், வாழ்க்கையில் நன்றாக இருப்பார்களா, என்னாகுமோ? என்று இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களோ, மற்றவர்களோ பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்னுடைய திருமணம் இம்மணமுறையில்தான் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியுடன்தான் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: வானதி – அருண்துரை
கடந்த 24.8.2025 அன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ரீனா மித்ரா மகாலில் நடைபெற்ற வானதி – அருண்துரை ஆகியோரின் மணவிழாவிற்குத் தலைமை வகித்து நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்த மணமுறை குறித்து சில தாய்மார்கள், சகோத ரிகள் சிலருக்குக் கொஞ்சம் அச்சம் இருக்கும். சடங்கு இல்லை, அய்யர் மந்திரம் சொல்லவில்லையே என்று.
நமக்குத் தனிப்பட்ட முறையில், அய்யர்மீது கோபமோ, வருத்தமோ கிடையாது.
இங்கே அமர்ந்திருக்கும் மணமக்கள் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். புகையால் கண்களைக் கசக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த முறையில் மணமுறை நடைபெறுகிறதே, இது சரியாக இருக்குமா? என்று ஒரு பயத்தை மனதில் கொள்கிறார்கள் சிலர்.
மூன்றாவது தலைமுறை!
இந்தக் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இந்த மணவிழா நடைபெறுகிறது. எந்தவொரு சங்கடமும் இல்லை.
இந்தக் கொள்கை எவ்வளவு ஆழமான கொள்கை – அதனால் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், என்னுடைய திருமணம் இம்மணமுறையில்தான் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியுடன்தான் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறோம்.
தந்தை பெரியார்தான்
பெயர் வைத்தார்!
இந்தக் குடும்பத்தில், பெரும்பாலான குழந்தை களுக்குப் பெயர்களை, தந்தை பெரியார்தான் வைத்தி ருக்கிறார். இராஜராஜன் என்ற பெயரை வைத்ததே, தந்தை பெரியார்தான்.
அதேபோன்று, சூரியகுமாரியாக இருந்தாலும், மோகனாவாக இருந்தாலும், இவர்களின் தாயார் ரங்கம்மாள் அவர்களாக இருந்தாலும், அய்யா சிதம்பரம் அவர்களானாலும், எல்லோரும் பெரியார் அய்யா அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
ஓர் அற்புதமான கொள்கையாளராக இராஜராஜனை உருவாக்கிய பெருமை சூரியகுமாரியைத்தான் சாரும். என்னுடைய வாழ்விணையருடைய சகோதரி அவர்.
அவருடைய வளர்ப்பு முறை என்பது அன்பு, கண்டிப்பு, கொள்கை. அந்த முறையில் உருவாக்கப்பட்டவர் இராஜராஜன்.
உருவாக்கப்பட்டவர் என்று நான் சொல்வதுகூட, அவை நாகரிகம் கருதித்தான். ஏனென்றால், எங்கள் பிள்ளைகள் எல்லாம் உரிமை எடுத்துக்கொண்டு, மரியாதையாக இருக்கக்கூடிய பிள்ளைகள்.
1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
இதே தஞ்சையில், ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கவிதா மன்றத்தில், 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி என்னுடைய தலைமையில்தான் மணவிழா நடைபெற்றது. இப்பொழுது அவர்களுடைய மகள் – என்னுடைய பெயரத்திக்கு என்னுடைய தலைமையில் மணவிழா நடைபெறுகிறது. இவருடைய பிள்ளைக்கும் நான்தான் மணவிழாவினை நடத்தி வைப்பேன், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
நீங்கள் எல்லாம் நினைக்கலாம், இவருக்கு இப்பொழுதே 92 வயதாகிறதே, இதற்கு மேல் ஆசைப்படுகிறாரே என்று.
கொள்கைப்படி அவர்கள்
வாழ்ந்து வருகிறார்கள்!
நான் ஆசைப்படவில்லை; இந்தக் கொள்கை அவ்வளவு ஆழமாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தக் கொள்கைப்படி அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே தஞ்சையில், அதே மணமுறையில், மகள் வானதிக்கு மணவிழாவினை ஏற்பாடு செய்து, என்னுடைய தலைமையில் நடை பெறுகிறது என்றால், இந்தக் கொள்கையை நீங்கள் எல்லாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
சுயமரியாதை மணமுறையில், மணவிழாவினை செய்துகொண்டால், வாழ்க்கையில் நன்றாக இருப்பார்களா, என்னாகுமோ? என்று இங்கே வந்தி ருக்கின்ற தாய்மார்களோ, மற்றவர்களோ பயப்பட வேண்டிய அவசியமில்லை.
இது கான்கிரீட் புரூப் – தியரி மட்டுமல்ல, பிராக்ட்டீகல் வகுப்பு.
மணமக்கள் இரண்டு பேரும், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டிருப்பவர்கள். படித்தவர்கள், தகுதி யானவர்கள். ஆஸ்திரேலிய நாட்டின் மிக முக்கியமான நகரம் சிட்னி. அங்கே மணமக்கள் இரண்டு பேரும், முக்கியப் பணிகளில் இருக்கிறார்கள்.
மணமக்கள் பெற்றோருக்குப் பாராட்டு!
மணமக்களை நன்றாக ஆளாக்கிய பெற்றோர் இங்கே இருக்கிறார்கள். மணமக்கள் பெற்றோருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம் என்று சொன்னார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். அதுபோல, இந்தக் குடும்பம், ஒரு பல்கலைக் கழகமாகும்.
இங்கே உறவுக்காரர்கள் நிறைய பேர் வந்தி ருக்கின்றீர்கள். தமிழ்ச்செல்வியின் தந்தையார் கோட்டூர் வீ.பாலசுப்ரமணியம் அவர்களைவிட, நான் வயதில் குறைந்தவன்தான். இயக்கத்தில் அவர் நீண்ட காலமாக இருக்கக் கூடியவர்.
5 லட்சம் ரூபாய் நன்கொடை!
அம்பிகாபதி – கலைச்செல்வி ஆகியோர் இந்தக் குடும்பத்தின் சார்பாக 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்தார்கள்.
இந்தக் குடும்பத்தில் அவர்களது முதல் மணவிழா வினை நான்தான் அன்றைக்கு நடத்தி வைத்தேன்.
பாரம்பரியமாக இந்தக் கொள்கையைச் சொல்லக்கூடிய குடும்பம் இந்தக் குடும்பம்.
தமிழ்ச்செல்வி, எங்களுடைய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சிறந்த மாணவி ஆவார்.
சிங்கப்பூர் நாட்டுக் குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் தமிழ்ச்செல்வி!
சிறந்த மாணவியாக இருந்தது மட்டுமல்ல, எங்கள் குடும்பம் மிகவும் பெருமையாகச் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், சிறுகதைக்காக சிங்கப்பூரில், அந்த நாட்டுக் குடியரசுத் தலைவர் வழங்கிய விருதை வாங்கிய புதுமைப் புரட்சி பெண்ணாவார் அவர்.
இந்த மணமுறையில், மணவிழா செய்துகொண்டால் என்னாகுமோ? என்று யாரும் நினைக்கவேண்டாம்.
திருமணம் ஆவதற்கு முன்பு, தமிழ்ச்செல்வியை, சிங்கப்பூருக்குத் தெரியாது.
தமிழ்ச்செல்வி, பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவுடன், தஞ்சையிலேயே அவருக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தோம். அதற்குப் பிறகுதான், மணமகளாக அவரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
என்னுடைய துணைவியார், இராஜாவிற்கு ஏற்பாடு செய்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
சரி, இராஜாவிற்கு ஏற்ற, ராணியைத் தயார் செய்து விட்டோம் என்று சொல்லி, அவர்களுக்கு மணவிழா வினை நடத்தி வைத்தோம்.
எங்களுடைய பெயரப் பிள்ளைகள்தான்!
எங்களுடைய பிள்ளைகள் எங்களோடு ஒட்ட மாட்டார்கள். தள்ளித் தள்ளி போவார்கள். ஆனால், அதற்கு வட்டியும், முதலுமாகச் சேர்த்துக் கொடுப்பவர்கள் யார் என்றால், எங்களுடைய பெயரப் பிள்ளைகள்தான்.
எங்களுக்கு யார் நண்பர்கள் என்றால், எங்கள் பெயரப் பிள்ளைகள்தான்.
மனோதத்துவ ரீதியாக ஒரு கருத்தைச் சொல்லி யிருக்கிறார்கள்.
‘‘மூத்தவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும்’’ என்று சொல்வார்கள். இந்தக் கருத்து தவறு என்ற அளவிற்கு நம்முடைய காலத்தில் இல்லாத விஷயம்; இவர்களுடைய காலத்தில் வந்தாயிற்று.
ஒரு ஊருக்குப் போகவேண்டும் என்றால், என்ன செய்வோம்? புது ஊராயிற்றே, என்னாகும்? என்றெல்லாம் நினைப்போம்.
ஆனால், பெயரப் பிள்ளைகளைப் பார்த்தீர்களேயா னால், செல்போனைப் பார்த்துவிட்டு, அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களைப்பற்றியெல்லாம் சொல்வார்கள். அந்த அளவிற்கு அறிவியல் இன்றைக்கு வளர்ந்தி ருக்கின்றது.
நம்முடைய பிள்ளைகள் ஒரு பத்தாண்டுகள், நம்மைவிட முன்னால் இருப்பார்கள். ஆனால், நம்மு டைய பெயரப் பிள்ளைகள் 30 ஆண்டுகள் முன்னால் இருக்கிறார்கள். அந்த அளவிற்குச் சிறப்பாக அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
மணமக்களுக்கு அறிவுரை அல்ல;
ஒரே ஒரு வேண்டுகோள்!
ஆகவே, மணமக்களான இவர்களுக்கு அறிவுரையோ, தெளிவுரையோ எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.
உங்கள் வாழ்வில், நீங்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் வாழ்க்கை சிறக்கவேண்டுமானால், ஒன்றே ஒன்றுதான், தந்தை பெரியார் கூறிய அறி வுரைதான் இது.
அண்ணா அவர்கள் கூறிய அறிவுரைகளெல்லாம்கூட, பகுத்தறிவு ரீதியானவைலாகும்.
எல்லா மணவிழாக்களிலும், மணமக்களுக்கு வேண்டுகோளாக வைப்பது இதுதான்.
எளிமை, சிக்கனம், வரவிற்குட்பட்ட வாழ்க்கை இவை அத்தனையும் இருப்பதைவிட முக்கியமானது இது. உங்களை இந்த அளவிற்கு ஆளாக்குவதற்காக, தங்களைத் தியாகம் செய்தவர்கள் யார் என்று சொன்னால், உங்களுடைய பெற்றோர்தான்.
வாழ்வில் எவ்வளவுதான் நீங்கள் உயர்ந்தாலும், உங்கள் பெற்றோரை மறக்காதீர்கள்.
உங்களிடமிருந்து, உங்கள் பெற்றோர், அன்பை, பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே, பெற்றோ ரிடம் உங்கள் பாசத்தைக் காட்ட, நன்றியை காட்ட ஒருபோதும் மறவாதீர்!
எங்களுடைய பிள்ளைகளுக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
இந்தக் கொள்கை உங்களை உயர்த்தி இருக்கிறது. இந்தக் கொள்கை, எந்த வகையிலும் உங்களைத் தாழ்த்தி விடாது.
வேற்று மொழியிலோ, புரியாத மொழியிலோ இங்கு மந்திரம் சொல்லவில்லை!
நம்முடைய தமிழ் மொழியில் உறுதிமொழியைக் கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்கிறோம். வேற்று மொழியிலோ, புரியாத மொழியிலோ இங்கு மந்திரம் சொல்லவில்லை.
ஆகவே, இம்மணவிழாவினை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இவர்கள் இன்றுபோல், என்றும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
புரட்சிக்கவிஞர் மிக அழகாகச் சொன்னார்,
‘‘ஒருமனதாயினர் தோழி,
திருமண மக்கள் நன்கு வாழி!’’ என்று.
தமிழர்களுடைய வாழ்க்கைப் பண்பாடு அதுதான்!
‘‘உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு’’ என்ற திருக்குறளின் தத்துவம் அதுதான்.
தன்முனைப்புதான் நம்முடைய வாழ்க்கைக்குக் கேடு!
‘‘ஒன்றைத் தவிர்த்தால் நீங்கள் வாழ்க்கையில் கீழே போகமாட்டீர்கள். ஈகோ என்று சொல்லக்கூடிய தன்முனைப்புதான் நம்முடைய வாழ்க்கைக்குக் கேடாகும்.
‘ஈகோ’ என்று சொல்லக்கூடிய அந்தத் தன்முனைப்புக்கு இடமில்லாமல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், அதைவிடச் சிறப்பான வாழ்க்கைக்கு வேறு எதுவும் ஈடாகாது.
‘‘விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை;
கெட்டுப் போகின்றவர்கள் விட்டுக் கொடுப்ப தில்லை!’’ இந்த வரிகளை வாழ்க்கையில் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தைப் பின்பற்றி, இதனைக் கூறியுள்ளார். சுயமரியாதைத் திருமணத் தத்துவத்தைச் சொல்லும்போது இதனைக் கூறியுள்ளார்.
நீங்கள் சிறப்பாக வாழ்வதுதான், உங்கள் பெற்றோ ருக்கு மகிழ்ச்சி; குடும்பத்தவர்களுக்கு மகிழ்ச்சி. உங்கள் மணவிழாவினை நடத்தி வைக்கும் எங்களைப் போன்ற வர்களுக்கு மகிழ்ச்சி.
மீண்டும் ஒருமுறை நன்றி, பாராட்டு!
இம்மணவிழாவினை எவ்வளவு எளிமையாக நடத்தவேண்டுமோ அவ்வளவு எளிமையாக நடத்த வேண்டும் என்று மணமகனின் வீட்டாரிடம் சொன்னோம்; அதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்தி, பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மணமக்கள் வானதி – அருண்துரை ஆகியோர் இப்போது வாழ்க்கை இணையேற்பு விழா உறுதிமொழி கூறி, நடத்திக் கொள்வார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை
யாற்றினார்.
