நாளந்தா, ஆக.29 பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலாவன் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல, நேற்று காலை அமைச்சர் ஷ்ரவன் குமார், உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் உடன் அந்த கிராமத்திற்குச் சென்றார்.
அவர்கள் இரங்கல் செலுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் அமைச்சரையும், சட்டமன்ற உறுப்பினரையும் தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பினர். தாக்குதலுக்குப் பிறகு, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பெரிய கூட்டம் அவர்களைத் துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் அமைச்சரின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர் ஷ்ரவன் குமார், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளை அழைத்துச் சென்றேன். அவர்களை சந்தித்துவிட்டு நான் வெளியேறவிருந்தபோது, சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த விவகாரம் மேலும் மோசமடைய வேண்டும் என்று சிலர் விரும்பினர். ஆனால், நான் அமைதியாக அங்கிருந்து திரும்பிவிட்டேன்” என்று அவர் கூறினார்.
இந்த வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு, அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் பல காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.