‘‘அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு வராக்கடன் விதிகளைத் தளர்த்த வேண்டும்”
சென்னை, ஆக 29 அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிவிதிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு (MSMEs) வராக்கடன் (NPA) விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா தொடுத்துள்ள இந்த “இறக்குமதி வரி யுத்தத்தால்” இந்தியத் தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வராக்கடன் விதிகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை இந்த நிறுவனங்களை வராக்கடன்களாக அறிவிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.