குலசேகரன்பட்டினம், ஆக.29- ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்ய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடுத்தபடியாக தூத்துக் குடி மாவட்டம் குலசேக ரன்பட்டினத்தில் நாட்டின் 2-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.986 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இந்தப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட் டினார்.
இதையடுத்து கடந்த 6 மாதமாக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள இடத்தில் உள்கட்ட மைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 27.8.2025 அன்று ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக் கல் நாட்டு விழா நடை பெற்றது. ரூ.100 கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- இன்றைய நாள் இந்திய விண்வெளி நாளில் மிக முக்கிய நாள். குலசேகரன்பட்டினத்தில் 33 கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
மிக முக்கியமானது ராக்கெட் லாஞ்ச் எனப் படும் ராக்கெட் ஏவுதளம் ஆகும். இதற்கான இடம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டுக்குள் குலசேக ரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக் கும் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரன் பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். முதலில் சோதனை முறையில் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.