அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை! தொழிற்சாலை பணியாளர்களை காப்பதுபற்றி உரிய நடவடிக்கை! ஒன்றிய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2 Min Read

சென்னை, ஆக.29 அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, வெகு அண்மையில்அமலுக்கு வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஜவுளித் தொழிலின் முக்கிய அங்கமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஆண்டின் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 4 முறை, ஏற்றுமதி வர்த்தகம் சுழற்சி அடிப்படையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு 120 நாட்களுக்கும் ஒருமுறை சுழற்சி அடிப்படையில் ஆர்டர் பெறுவது, அனுப்பி வைப்பது என ஏற்றுமதி வர்த்தகம்நடந்து வருகிறது. அதன்படி திருப்பூரில் தற்போது அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய ரூ.3,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கம் அடைந்து பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் கூறும்போது, “இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுத்துள்ளது போன்ற சூழல் நிலவுகிறது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களை இழக்கும்போது, இயல்பாகவே தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ஆம் தேதி கடிதம் எழுதினார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பால், ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள் ரத்தினக்கற்கள், தோல், காலணிகள், கடல்பொருட்கள், ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி நிவாரணம் வழங்கி, பணப் புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டம் அறிமுகம், அதிக சுங்க வரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.8.2025) வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழ்நாட்டின், குறிப்பாக பின்னலாடை மய்யமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. இந்த சூழலில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *