திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் 17 ஆண்டுக் கால சமூகநீதி ஆட்சி!
அண்ணா, கலைஞர் தலைமையேற்று சாதனை புரிந்தமாட்சி
8 ஆண்டுக் காலம் கட்சியின் தலைமை, ெதாடர்ந்து முதலமைச்சர்!
தமிழ்நாடு ‘வெற்றிடம்’ அல்ல – ‘கற்றிடம்’ என்று ஆக்கிய சாதனையாளர் மு.க.ஸ்டாலின்!
திராவிட மாடல் ஆட்சியின் நாயகருக்குப் பெருமிதமும் பாராட்டும்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வாழ்த்து
கடந்த 8 ஆண்டு காலமாக கட்சியின் தலைமை, தொடர்ந்து ஆட்சித் தலைமையேற்று ‘திராவிட மாடல்’ நல்லாட்சியின் கோலோச்சும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துக் கூறி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிடர் இயக்கத்தின் கொள்கைப் பயணம் நீண்ட, நெடிய வரலாறு படைத்த ஒன்று. அதில் நீதிக்கட்சி 1920 முதல் 1937 வரை நேரடியாகவும், ஆதரவு தந்து, ஒத்துழைப்பு முறையிலும் 17 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து, வரலாற்றை ஒளிரச் செய்தது.
அண்ணா முதலமைச்சர் பதவி ஏற்று,
குறுகிய காலத்தில் முப்பெரும் சாதனைகள்
கல்வி, மருத்துவம், சமூகநீதி, வகுப்புரிமை, சுயமரியாதையைச் சூடேற்றும் வர்ணாசிரம தர்மம் – தீண்டாமை ஒழிப்பு போன்றவை கொண்ட அந்த லட்சியப் பயணத்தை கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) சில மாதங்கள் தொடங்கி நடத்தி, அதனைத் தொடர்ந்து பானகல் அரசர் தலைமை ஏற்று சாதனைகளைக் குவிக்கத்தார். 1938இல் காங்கிரஸ் – பார்ப்பன அரசு ஆச்சாரியாரின் தலைமை ஏற்பட்ட நிலையில், ‘‘ஜஸ்டிஸ் கட்சியை 500 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைத்து விட்டோம்’’ என்ற இறுமாறுப்பு – ஆணவப் பேச்சு ‘சத்தியமூர்த்திகள்’ மூலம் வெளிவந்ததற்குத் தக்க பதிலடி கொடுத்தார் அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க. ஆட்சி பதவியேற்றதன் மூலம்! முதலமைச்சர் ஆகி, ஒரே ஆண்டில் முப்பெரும் சாதனை முத்துக்களைப் பதித்தார் தமது ஆட்சி மகுடத்தில்!
(1) சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி சட்டம்
2) ‘தமிழ்நாடு’ மாநிலம் பெயர் மாற்றம்
3) இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்தி அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத பாறை போன்று வென்று, நின்று கொண்டுள்ளது.
மானமிகு சுயமரியாதைக்காரரான
கலைஞர் தம் ஆட்சியின் மாட்சி
1969இல் நம் அண்ணா மறைவிற்குப்பின், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்’’ என்று ஒரு வரியில் தனது முகவரி கூறிய நம் கலைஞர், தமது அரசியல் விற்பன்னக் கெட்டிக்கார வியூகத்தில் 5 முறை ஆட்சி செய்து – தமிழ்நாட்டின் பல துறைகளிலும், ஒப்பற்ற சாதனைகளை அடுக்கடுக்காகக் குவித்தார்.
ஜாதி தீண்டாமை ஒழிப்புக்கு ‘அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர் உரிமை’ என்ற தந்தை பெரியாரின் முக்கிய இலக்குக்கு செயல் வடிவம் தந்தார். எம்மொழி செம்மொழி கண்டார். (இந்து) ‘பெண்களுக்குச் சொத்துரிமை’ப் புரட்சிச் சட்டம் முகிழ்ப்பதற்கு மூலகாரணமானார். மாநிலத்திலும் மத்தியிலும் சட்டம் இயற்றச் செய்து சரித்திரம் படைத்தார். மகளிர் உரிமை காத்த மாண்பாளராகி – தாய்க் கழகம் உச்சி மோந்து விருது வழங்கிய பாராட்டையும் பெற்றார்.
வெற்றிடம் அல்ல – கற்றிடமாக
மாற்றிய நமது ‘திராவிட மாடல்’
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
5 முறை ஆட்சிக்குப்பிறகு கலைஞரின் மறைவு தமிழ்நாட்டில் ‘வெற்றிடம்’ என்று சிலர் கொக்கரித்தனர்; அவர்களுக்குப் புரிய வைக்க, எட்டாண்டு காலமாக தி.மு.க.வின் தலைமை ஏற்று, கட்சி – இயக்கம் கட்டிக்காத்து, எமது தமிழ்நாடு ‘வெற்றிடம் அல்ல’ – பிறர் வந்து கற்றுச் செல்லும் ‘கற்றிடம்’ என்று புரிய வைக்கும் அமைதிப் புரட்சியை அன்றாடம் புதுப்புதுச் சாதனைகளை அனைத்துத் துறைகளிலும் செய்து வரும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ முதலமைச்சர்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தடை ஏற்பட்டு விட்டதே என்று கலங்கி, ‘தந்தை பெரியாரை நெருங்கி முள்ளோடு புதைத்து விட்டோம்!’ என்று வருந்திய கலைஞரின் கவலை துடைத்து,ஆட்சிக்கு வந்த நூறாம் நாள் சாதனையாக ஆக.14, 2021இல் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய வரலாற்றுப் பெருமைக்கு உரியவரான நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகருக்குத் தாய்க் கழகத்தின் பெருமிதமும் பாராட்டும் கலந்த வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.8.2025