திருப்பத்தூர், ஆக. 29- திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி – பவித்ரா (40). இவர்களின் மகள்கள் சவுஜன்யா (7), சவுமியா (4). ராஜேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சத்தீஷ்கார் – மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் ராஜேஷ்குமாரை அவரது குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு வருமாறு அழைத்து உள்ளனர். அதன் பேரில் ராஜேஷ்குமார் குடும்பத்தினருடன் காரில் திருப்பதிக்கு புறப்பட்டார். கடந்த 26-ஆம் தேதி அவர்கள் சத்தீஷ்கார் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் ராஜேஷ்குமார் உள்பட 4 பேரும் காருடன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் 4 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று (28.8.2025) மாலை 6 மணி அளவில் பாரண்டப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு உடல்கள் இரங்கல் செலுத்துவதற்காக வைக்கப்பட்டன உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அவர்களின் உடல் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப் பட்டது.
