“தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம்” என்ற தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் கடும் கண்டணம்.
’ஆட்சிக்கு வந்தா தானே’
கனிமொழி பதிலடி
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் கனிமொழி எம்.பி. செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை அகற்றுவதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறி இருக்கிறார்.
அதற்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு கனிமொழி எம்.பி. பதில் அளிக்கும்போது, அதற்கு “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம்” என சிரித்தபடி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.
பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் குறித்து இழிவாகப் பேசுவது தவறு. இது பெரியார் மண். அவர் இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் சமூக நீதி இல்லை.
இந்தியாவில் சமூக நீதியை தொடங்கி வைத்தவரே தந்தை பெரியார்தான் என்றார். மேலும் பெரியார் குறித்து அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சியினரோ இழிவாகப் பேசக் கூடாது. பா.ம.க.வின் முன்னோடிகளாக பெரியார், அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களை பற்றி யாராவது தவறாக பேசினால் பா.ம.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரித்தார்.
தலைவர்களை சீண்டினால்
பி.ஜே.பி.க்கு பின்னடைவு
அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தலைவர்களின் புகழை போற்றுவது தான் மாண்பும், மரியாதையும். தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்தவித கருத்து கூறினாலும், அது முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும். தலைவர்களை சீண்டினால் அது அண்ணாமலைக்குத் தான் பின்னடைவு” என்றார்.
பெரியார் சிலை அகற்றப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டார்கள்
அமைச்சர் சு.முத்துசாமி
தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“தமிழ்நாட்டில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து. பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பில்லை. அதை அவர்கள் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது. ஒருவேளை பெரியார் சிலை அகற்றப்பட்டால் யாரும் அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். நீதிமன்றமும் அதை அனுமதிக்காது.” இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
அய்.பி.எஸ். ஆனதற்கு
தந்தை பெரியார்தான் காரணம்
அமைச்சர் க.பொன்முடி
“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ் அதிகாரி யானதற்குக் காரணமே பெரியார்தான். தமிழ் நாட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்றவர் அவர். இங்கு அனைவரும் படிப்பதற்குக் காரணம் பெரியார்தான். வடஇந்தியாவில் உள்ளவர்களேகூட பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் பெரியார் குறித்து அண்ணாமலை மனப்பூர்வமாகப் பேசியிருக்க மாட்டார். தொலைக்காட்சிகளில் செய்தி வர வேண்டும், நான் இருக்கிறேன் என்பதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிப் பேசியிருப்பார்.
பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும். பெரியாருக்கு சிலை வைக்கும் நோக்கமே, அடித்தளத்து மக்களுக்கும் பகுத்தறிவு சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் அண்ணாமலை தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.