சென்னை, ஆக.28- முதல்வர் மருந்தகங்களில் கூடுதலாக 144 மருந்துகள் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
முதல்வர் மருந்தகங்கள்
தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மருத்துவச் செலவு சுமையை வெகுவாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ்நாடும் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் தொழில் முனை வோர்களை உருவாக்கும் வகையில் மருந்தகங்களை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 லட்சம் வரை மானியமும் வழங்கப்பட்டது.
மேலும், இந்த முதல்வர் மருந்தகங்களில் மருந்துகளின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘ஜெனரிக்’ (பொதுப்பயன்) மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக நீரிழிவு,ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கான ‘ஜெனரிக்’ மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கூடுதலாக மருந்துகள்
‘ஜெனரிக்’ மருந்து என்பது பிரபல ‘பிராண்டு’களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை அதே மூலப்பொருளுடன் மருந்தின் அளவு, செயல்திறன் போன்றவற்றில் சமரசம் செய்யாமல் ‘பிராண்டு’ பெயரில் அல்லாமல் வேறு பெயரில் விற்பனை செய்யப்படுவது ஆகும். அந்த வகையில் முதல்வர் மருந்தகங்களில் தற்போது 226 ஜெனரிக் மருந்துகளும், 297 ‘பிராண்டு’ மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், இங்கு விற்பனை செய்யப்படும் ‘பிராண்டு’ மருந்துகளின் விலையில் 25 சதவீதம் வரையும் தள்ளுபடியும், ‘ஜெனரிக்’ மருந்துகளை பொறுத்தவரையில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால், முதல்வர் மருந்தகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்திற்குள் கூடுதலாக 144 ஜெனரிக் மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு வரவிருக்கின்றன. இதற்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.