சென்னை, ஆக. 28- நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிராவை விட தமிழ்நாடு அதிக வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது.
2023-2024ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கை, உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் அதிகபட்சமாக 15% தமிழ்நாடே வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாடு 10.51 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இது மற்ற பெரிய மாநிலங்களான மகாராட்டிரா (7.74 லட்சம்) மற்றும் உத்தரப் பிரதேசம் (6.28 லட்சம்) ஆகியவற்றை விட அதிகமாகும். தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தச் சாதனையைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு, ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் மாநிலம் அடைந்த வளர்ச்சி முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.