செப்டம்பர் 7 – ‘முழு நிலவு மறைப்பு’ சென்னையில் வெறும் கண்களால் பார்க்கலாம்!

1 Min Read

இந்த செப்டம்பர் 7 அன்று நிகழவிருக்கும் முழு நிலவு மறைப்பு, சென்னையில் உள்ளவர்களால் வெறும் கண்களாலேயே காண முடியும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால், அது சிவப்பு நிறத்தில் ஒளிரும். இது ‘ரத்த நிலவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முழுமையான நிலவு மறைப்பு செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு 8:58 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதிகாலை 2:25 மணி வரை நீடிக்கும். இரவு 11:41 மணிக்கு முழுமையான நிலவு மறைப்பு உச்சத்தை அடையும். சென்னையில் இருப்பவர்கள் கிழக்கு நோக்கி வானத்தைப் பார்த்தால் இந்த அரிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம்.

நிலவு மறைப்பின் அறிவியல் படிநிலைகள்

பெனும்பிரல்: பூமியின் நிழல் நிலவின் ஓரங்களில் மெல்ல மெல்லப் படும் நிலை.

அம்ப்ரா: பூமியின் மய்ய இருண்ட பகுதியான அம்ப்ரா, நிலவை முழுமையாக மறைக்கத் தொடங்கும் நிலை. இந்த நிலையில் தான் நிலவு கருஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரும்.

இந்த நிலவு மறைப்பு நிகழ்வு, இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 12:22 மணி வரை, அய்ரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகளில் தெரியும். சிங்கப்பூரில் பின்னிரவு 1:30 மணி முதல் 2:52 மணி வரை ‘செந்நிலா’வைப் பார்க்கலாம் என்று அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த நிலவு மறைப்பு நிகழ்வைக் காண முடியாது. அடுத்த முழுமையான நிலவு மறைப்பு 2026-ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால், அது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தின் மேனாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *