திண்டுக்கல், ஆக.28 திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி நேற்று (27.8.2025) மாவட்டம் முழுவதும் இந்து அமைப் புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 2234 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து அமைப் புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வ லம் நடத்துவ தற்கு காவல் துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இதை ஏற்காத இந்து முன்னணியினர், காவல் துறையினரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து கூடுதல் காவல்துறை கண் காணிப்பாளர் மகேஸ், நகர காவல்துறை கண்காணிப் பாளர் கார்த்திக் தலைமை யில் ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதற் கிடையே இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ராஜேந் திரன் மற்றும் இந்து முன் னணியினர் மேளதாளம் முழங்க வேனில் 3½ அடி விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்குள்ள காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் வைத்தனர். பின்னர் அந்த சிலையை கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதை யடுத்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த காவல்துறையினர் ஊர்வ லத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பறி முதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி மற்றும் 24 பெண்கள் உள்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.