‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் – இந்நாள்!
இது கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் உறுதி! உறுதி!!
‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று – திராவிடக் கொள்கையின் மூலவித்தான திராவிடத்தை இந்தியா எங்கும் கொண்டு செல்ல சூளுரைப்போம் – இது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இலட்சிய வேர்ப் பலாவாகப் பழுத்த இயக்கம் திராவிடர் இயக்கம்!
அடிமை விலங்குகளை உடைத்தெறியும் சம்மட்டியாகப் பிறந்தது!
அரசியல், சமூக, பண்பாட்டு அடிமைகளாக பன்னூறு ஆண்டுகள் அவதிப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாய், அடிமை விலங்குகளை உடைத் தெறியும் சம்மட்டியாகப் பிறந்தது!
அடித்தட்டு மக்களைக் கைதூக்கிவிட, படித்தவர் களாகவும், பணக்காரர்களாகவும் இருந்த திராவிடர்களே முன்வந்து மனிதநேயத்துடன் களங்கண்டார்கள்!
அத்தகையவர்களால்தான் கண்டெடுக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் ஓர் அதிசய இயக்கம்!
மனிதமும், ஒத்தறிவும் (Empathy) உள்ள ஒரு புதியதோர் சமத்துவ, சமுதாய இயக்கத்தைக் கண்ட தோடு, களமாடச் செய்து அரசியலில் கணக்குத் திறந்த இயக்கம் இந்த வரலாற்றுப் பாரம்பரியமிக்க திராவிடர் இயக்கம்!
புத்தாக்க போராளி இயக்கமாக
திராவிடர் கழகம் கண்டார்
சமூகநீதிக்கென சமர்க்களம் அமைத்த அந்த இயக்கத்தில் முன்னோடி – மூத்த தலைவர்களான சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் – அரசியல் களத்தில் – அவ்வியக்கத்தில் சேர்ந்து தொடக்கத்தில் பங்கேற்க இயலாவிட்டாலும், அதன் இலட்சியத்திற்காகவே அரசியல் கட்சிப் பிரவேசம் செய்து, உழைத்து, தான் எதிர்பார்த்த கொள்கை ஈடேற முடியாத நிலையில், அக்கால காங்கிரசை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கம் கண்டு, நீதிக்கட்சியான திராவிடர் இயக்கத்தின் தீவிர செயல் வீரராக இருந்தார் – பிற்காலத்தில் அதன் தலைவரான தந்தை பெரியார் அவர்கள். அதன் அரசி யல் தோல்விக் களத்தையே, சமூகநீதி போர்க் களமாக மாற்றி, புதியதோர் அணுகுமுறையினால் புத்தாக்க போராளி இயக்கமாக திராவிடர் கழகம் கண்டார்.
இயக்கத்தை இளைஞர்களின்
பாசறையாக்கினார் தந்தை பெரியார்
தந்தை பெரியார் அவர்களின் இந்த அரிய பணியில் அந்நாளைய தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி போன்றவர்களும், எம்.ஏ., படித்த அண்ணாவும் வந்து சேர்ந்தனர்; இயக்கத்தை இளைஞர்களின் பாசறை யாக்கினார் தந்தை பெரியார்.
பெரியாரின் கொள்கை முழக்கப் பரப்புரைகளால் சாமானிய மக்களின் இயக்கமாக வலிவுடனும், பொலிவுடனும் வளர்ந்தது. தந்தை பெரியாருக்குத் தோள் கொடுப்போர் அணிவகுத்தனர் – தொடர்ந்தனர்.
அந்த வரிசையில், பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம் போன்ற பட்டதாரி வாலிபர்களின் ‘கொள்கை வசந்த மண்டபமாக’ திராவிடர் இயக்கம் மிளிர்ந்தது.
அவருக்கென ஒரு தனி இடம் பெற்றார்!
நமது நூற்றாண்டு விழா நாயகர் ஒப்பற்ற கலைஞர் அவர்கள் தனது பல்கலை பன்முக ஆற்றலால் – ஒப்புவமை இல்லா உன்னத ஓய்வறியா உழைப்பினால் – அவருக்கென ஒரு தனி இடம் பெற்றார் என்பதுதான் வரலாறு.
முதலமைச்சராக, அண்ணாவுக்குப் பிறகு அவர் தலைமை ஏற்கத் தக்க வகையில், அவரை அடையாளம் கண்டு ஆணையிட்டார் தந்தை பெரியார். முதலமைச்சர் அறிஞர் அண்ணா, ‘‘தன்னால் எழுதப்படும் இந்த வரலாற்றின் அடுத்த பகுதியை என் தம்பி கருணாநிதி தொடருவார்; செவ்வனே செய்வார்’’ என்று மன்னார்குடி பொதுக்கூட்டத்திலேயே தொலைநோக்கோடு சொன்ன துண்டே!
அய்யாவின் தொலைநோக்கு துல்லியமானதாகவே இருந்தது; ஆளுமைமிக்கவர் கலைஞர் என்பதைப் பிரகடனப்படுத்தியது.
பல பரிமாணங்களின் தொகுப்பே கலைஞர்!
பரப்புரை பணியானாலும், எழுத்துலகத் தொண் டானாலும், கலைத்துறை மூலமும் கழகமே மூச்சாகக் கொண்டு செயலாற்றினார்.
இடையறாத போராட்டக் களப் போராளி – எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் என்று பல பரிமாணங்களின் தொகுப்பே ‘கலைஞர்!’
எல்லாவற்றிலும் ஈடற்ற, முத்திரைப் பதித்த, இணை யற்ற உழைப்பால் உயர்ந்தார்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர்ச்சி எந்த சங்கிலியும் இற்றுப் போகாமல், வலிமையுடன் தொடர்ந்து இன்றும் வரலாறு படைக்கிறது!
சிறைக்கஞ்சா சிங்கமாகவும், களப் போராளியாகவும் எப்போதும் ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்பதில் மாற்றுக் குறையாத கொள்கைத் தங்கமாக இன்றும் என்றும் ஜொலிக்கிறார்!
முதலமைச்சராக இருந்த அண்ணா, ‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!’’ என்றார்!
உண்மையான திராவிட இயக்கக் கலைஞராக செம்மாந்து நிற்கிறார்!
அண்ணாவின் அருமைத் தம்பியாகிய மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சர் என்ற நிலையில், ‘‘தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகி றேன் – இந்த அரசு நாலாந்தர அரசுதான். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்!’’ என்று சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தாரே (28.7.1971) அங்கேதான் உண்மையான திராவிட இயக்கக் கலை ஞராக செம்மாந்து நிற்கிறார்.
அந்த வழியில்தான் தளபதி மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிக்கான சரித்திர நாயகராக தனித்த நிலையில் மேலும் ஜொலிக்கிறார்.
மானமிகு கலைஞரின் நூற்றாண்டு நாளில் உறுதி ஏற்போம்!
இன்றைய இந்திய அரசியலுக்கே பாசிசத்தை வீழ்த்த தந்தை பெரியாரின் மூலக்கருத்தான திராவிடம் தேவைப் படுகிறது!
திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டது.
திராவிடம் எப்பொழுதும் காலாவதியாகாது; காலா வதியாகிக் கொண்டு வருவது சனாதனமே! காரணம், திராவிடம் ‘மனித’த்தையே அடிப்படையாகக் கொ ண்டது.
திராவிடக் கொள்கையின் மூலவித்தான
திராவிடத்தை இந்தியா எங்கும் கொண்டு செல்ல முத்தமிழறிஞர் மானமிகு கலைஞரின் நூற்றாண்டு நாளில் அதனை மேலும் மேன்மைப்படுத்த உறுதி ஏற்போம்!
வாழ்க கலைஞர்!
கி.வீரமணி
தலைவர்,’
திராவிடர் கழகம்
சென்னை
3.6.2023