‘‘பெரியார் உலகம்’’தான் மிக முக்கியமான இலக்கு நமக்கு! ‘‘பெரியார் உலகத்திற்கு’’
நீங்கள் எந்த அளவிற்கு உதவுகிறீர்களோ, அதுதான் எனக்கு மருந்து, அதுதான் சிகிச்சை!
பெரியார் உலகத்திற்கு நல்ல தொகையை இம்மணவிழாவில் அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள்!
தஞ்சை, ஆக. 28 – ‘‘பெரியார் உலகம்’’தான் மிக முக்கியமான இலக்கு நமக்கு. எனவே, பெரியார் உலகத்திற்கு நீங்கள் எந்த அளவிற்கு உதவுகிறீர்களோ, அதுதான் எனக்கு மருந்து, அதுதான் சிகிச்சை என்று அறிக்கை எழுதினேன். நான் எதிர்பார்க்கவேயில்லை, மிகப்பெரிய அளவில் பெரியார் உலகத்திற்கு நல்ல தொகையை இங்கே அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், தோழர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இது அமைந்திருக்கின்றது. அதற்காக இந்தக் குடும்பத்திற்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பில், உளப்பூர்வமான மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: வானதி – அருண்துரை
கடந்த 24.8.2025 அன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ரீனா மித்ரா மகாலில் நடைபெற்ற வானதி – அருண்துரை ஆகியோரின் மணவிழாவிற்குத் தலைமை வகித்து நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மற்றவர்கள் பின்பற்றத்தகுந்த
ஓர் அருமையான மணவிழா!
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் தஞ்சையில் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் வானதி – அருண்துரை ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டான, மற்றவர்கள் பின்பற்றத்தகுந்த ஓர் அருமையான மணவிழாவாகும்.
மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தி ருக்கின்ற திருவாளர் சாத்தனூர் கு.சம்பந்தன் அவர்களும், இன்றைக்கு வாழுகின்ற திருமதி ச.சூரியகுமாரி அவர்களும், இராஜராஜனை சிறப்பாக வளர்த்து ஆளாக்கியிருக்கின்றனர்.
அதேபோல, கோட்டூரில், இயக்கத்திற்கும், ஊருக்கும் மிகப்பெரிய அளவிற்குப் பாராட்டத்தகுந்த அளவிற்கு இருக்கக்கூடிய திருவாளர்கள் வீ.பாலசுப்ரமணியம் – பா.ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகள் வழிப் பெயர்த்தி யும், ச.இராஜராஜன் – இரா.தமிழ்ச்செல்வி ஆகியோருடைய மகளுமான செல்வி வானதி அவர்களுக்கும்,
பவளத்தாள்புரம் திருவாளர்கள் தி.ரா.துரைசாமி – செல்லாயி அம்மாள் ஆகியோருடைய மகன் வழிப் பெயரனும், கொண்டிகுளம் ரா.கோவிந்தசாமி – அரும்பு ஆகியோரின் மகள் வழிப் பெயரனுமான அருமை அய்யா து.சியமளவர்ணம் – அம்மா சி.அமுதா ஆகியோருடைய செல்வன் அருண்துரை அவர்களுக்கும் சிறப்பாக நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழாவிற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவரையும், அழைப்பிதழிலே அழைத்தவன் என்ற உரிமையோடும், இது எங்களுடைய குருதி உறவு, கொள்கை உறவு இந்த இரண்டும் இணைந்த உறவு என்ற பெருமையோடு நடைபெறக்கூடிய எங்கள் குடும்பத்து உறவாக இருக்கக்கூடிய அத்துணை நண்பர்களையும், இயக்கத்தின் துணைத் தலைவர் நம்முடைய அருமைக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களையும், பொருளாளர் வீ.குமரேசன் அவர்களையும், மற்ற இயக்கக் கொள்கைக் குடும்பத்தவர்களையும், பொறுப்பாளர்களையும், பெரியவர்களையும் வருக, வருக என வரவேற்கி
றேன்.
அனைவரையும் உளப்பூர்வமாக
வருக, வருக, வருக என்று நான் வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்!
புதிதாக இந்தக் குடும்பங்களில் இணைந்துள்ள எங்கள் மிகுந்த அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய வரான அய்யா சியமளவர்ணம் அவர்களுடைய உற்றார், உறவினர்களாக இருக்கக்கூடியவர்களையும், நம் அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கின்ற அனை வரையும் உளப்பூர்வமாக வருக, வருக, வருக என்று நான் வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
மணவிழாவினை நடத்தி வைப்பது என்பது அடுத்த கடமை. ஆனால், இந்த அழைப்பிதழில் இருக்கக்கூடிய அளவிற்கு, இம்மணவிழாவிற்கு அனைவரையும் அழைத்தவர்கள் நாங்கள்.
எனவே, என் சார்பாகவும், என்னுடைய வாழ்விணையர் மோகனா அவர்களுடைய சார்பாகவும், சூரியகுமாரி அவர்களின் சார்பாகவும் உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
அடுத்தபடியாக, இந்த மணவிழாவில் அதிகமாகப் பேசவேண்டிய அவசியமில்லை. ஆனால், சில குறிப்பு களைச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாக கலந்துகொள்கின்ற முதல் நிகழ்ச்சி இந்த மணவிழா!
எதிர்பாராத வகையில், காது தொற்றுக்காக அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி இருந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வழமையான என்னுடைய நிகழ்ச்சிகளையெல்லாம் தள்ளி வைத்து, அதற்குப் பிறகு முதன்முறையாக கலந்துகொள்கின்ற முதல் நிகழ்ச்சி இந்த மணவிழாவாகும்.
எனக்கே மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கின்றது. எங்களுடைய பெயரப் பிள்ளைகள்; இந்தக் கொள்கை வயப்பட்டு இருக்கக்கூடிய குடும்பங்கள்; எங்களோடு எப்போதும் ஒன்றிப் போனவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது.
‘‘பெரியார் உலகம்’’தான்
மிக முக்கியமான இலக்கு நமக்கு!
நான் ஓர் அறிக்கையை கழகத் தோழர்களுக்காக எழுதினேன். ‘‘பெரியார் உலகம்’’தான் மிக முக்கியமான இலக்கு நமக்கு. எனவே, பெரியார் உலகத்திற்கு நீங்கள் எந்த அளவிற்கு உதவுகிறீர்களோ, அதுதான் எனக்கு மருந்து, அதுதான் சிகிச்சை என்று எழுதினேன்.
நான் எதிர்பார்க்கவேயில்லை, மிகப்பெரிய அள வில் பெரியார் உலகத்திற்கு நல்ல தொகையை இங்கே அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள். எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், தோழர்களுக்கு வழிகாட்டு தலாகவும் இது அமைந்திருக்கின்றது. அதற்காக இந்தக் குடும்பத்திற்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பில், உளப்பூர்வமான மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்த ஒன்று என்னவென்று சொன்னால், இராஜராஜன் – தமிழ்ச்செல்வி ஆகியோருடைய மகள் வானதி, எங்களுடைய பெயர்த்தி.
இந்த மணவிழாவை எளிமையாக, மகிழ்ச்சியாக, சிறப்பாகக் கொள்கை வயப்பட்டு நடத்துவதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை.
தந்தை பெரியார் வழியிலேயே வந்திருக்கக் கூடிய குடும்பம்!
ஏனென்றால், இவர்கள் முழுக்க முழுக்க மூன்று தலைமுறைகளாக, தந்தை பெரியார் வழியிலேயே வந்திருக்கக் கூடிய குடும்பமாகும்.
உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அய்யா சியமளவர்ணம் அவர்கள், மணமகன் அவர்களுடைய தந்தையார், அவர்களுடைய குடும்பத்தவர்கள் இங்கே புதிதாக அறிமுகமானவர்கள். அவர்களுக்கு நம்முடைய கொள்கைகளைப்பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம்முடைய இராஜராஜன் அவர்களுடைய பாட்டி – பாட்டனார்; அவர்களுடைய கொள்ளுப்பாட்டி – பாட்டனார்; திருமணத்தை, தந்தை பெரியார், திருச்சி யில் 15.4.1934 ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மணவிழாவினை, தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். அதேபோல, மணமகளின் தந்தையார் மணவிழாவும் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில்தான் நடைபெற்றது.
மூன்றாவது தலைமுறை
மணவிழா இது!
மூன்றாவது தலைமுறை மணவிழா இது. அடுத்து நான்காவது தலைமுறையினருக்குக்கூட இம்மண முறையில்தான் நடைபெறும். அப்படி நடப்பதில் ஒரு பெரிய அதிசயமும் இல்லை. ஏனென்றால், இந்தக் கொள்கையை இவர்கள் அன்றாட வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.
எனக்கு வாழ்விணையரைத் தேடிக் கொடுத்ததே, தந்தை பெரியார் அவர்கள்தான். எங்களுடைய மண விழாவினை நடத்தியதும் பெரியார்தான்.
புதிதாக இங்கே வந்திருக்கின்றவர்களுக்கு இந்தத் தகவல் வேடிக்கையாகவும், அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம்.
மிக எளிமையாக எங்களுடைய மணவிழா நடை பெற்றது. பெரியாரும் – மணியம்மையாரும்தான் எங்களு டைய மணவிழாவிற்கு அழைப்பிதழ் போட்டவர்கள்.
அதற்குப் பிறகு இக்குடும்பங்களில் தொடர்ச்சியாக இம்மணவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் அணிந்திருக்கும் உடையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அய்யா பாலசுப்பிரமணியம் அவர்களுடைய குடும்பமும் அப்படித்தான்.
எனவே, இந்தக் குடும்பத்தவர்கள் இம்மண முறை யில் மணவிழா நடத்திக் கொள்வது ஒன்றும் அதிசய மில்லை.
மணமகனின் குடும்பத்தாரைப் பாராட்டவேண்டும்!
நாங்கள் யாருக்கு நன்றி செலுத்தவேண்டும் என்றால், யாரை மிகவும் பாராட்டவேண்டும் என்று சொன்னால், புதிதாக இந்தக் குடும்பத்தில் வரவிருக்கக்கூடிய மணமகன் அருண்துரை அவர்களுடைய தந்தையார் சியமளவர்ணம் அவர்களையும், மணமகனின் தாயார் அமுதா அம்மையாரையும்தான் பாராட்டவேண்டும்.
ஏனென்றால், இவர்கள் இந்தக் கொள்கையில் ஊறியவர்கள் இல்லை. அவர்கள் வேறு வகையான நம்பிக்கை, கொள்கையில் இருந்தவர்கள். அது அவரவர்களுடைய உரிமை.
ஆனால், இந்தப் பிள்ளைகள் இருவரும் விரும்பு கிறார்கள் என்று தெரிந்தவுடன், இம்மணவிழாவிற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்.
பேராவூரணித் தோழர் சிதம்பரம் –
வீ. அன்புராஜ்!
பேராவூரணித் தோழர் சிதம்பரம் அவர்களை, மணமகனின் குடும்பத்தாரிடம் பேசி, மணவிழாவிற்கு ஏற்பாடு செய்யும்படி அனுப்பி வைத்தோம். ஏனென்றால், மணமகளின் வீட்டாருக்கு, மணமகன் வீட்டார் அறிமுகம் இல்லை.
ஆனால், எனக்குத் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களும் தெரியும். நான் செல்லாத கிராமங்கள் கிடையாது, பகுதிகள் கிடையாது. அதனால், மணமகன் வீட்டாரைப் பார்த்து வரும்படி சிதம்பரம் அவர்களை அனுப்பி வைத்தோம். அன்புராஜ் அவர்களும் அவரோடு சென்று பார்த்துப் பேசினர்.
மணமகன் வீட்டாரின் பெருந்தன்மையைப் பாராட்டவேண்டும். என்ன ஜாதி? என்ன மதம்? என்று எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மகனைப் படிக்க வைத்திருக்கிறார்கள். அதனால் அவர், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் பெரிய பொறுப்பில் இருக்கின்றார்.
ஆணவக் கொலை செய்யக்கூடிய கீழிறக்க நிலை இன்றைக்கு!
இன்றைக்கு ஆணவக் கொலை செய்யக்கூடிய கீழிறக்க நிலை இருக்கின்றது. வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளை கூலி கொடுத்து கொலை செய்யக்கூடிய மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான நிகழ்வுகள் நடைபெறக்கூடிய நாட்டில், மணவிழாவிற்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு, இந்த மணவிழாவில் சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல், யாகக் குண்டம் வளர்க்காமல், புகையினால் மணமக்கள் கண் எரிச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இம்மணவிழா நடைபெறுகிறது என்றால், அதற்காக மணமகனின் குடும்பத்தாரைப் பாராட்டவேண்டும்.
மணமகனின் பெற்றோருக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு!
அதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, முதலில் அழைத்தவன் என்ற முறையிலும், உறவுக்காரன் என்கின்ற முறையிலும், இந்தக் குடும்பத்தில் மூத்தவன் என்ற முறையிலும், மணமகனின் பெற்றோரைப் பாராட்டி, சிறப்பு செய்கின்றோம். (மணமகனின் பெற்றோருக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது).
இராஜராஜன் – தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்வி ணையர்களாக மாறுவதற்கு முன்பாகவே, இந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள்; கொள்கையால் வளர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினர்.
நான், இந்தக் குடும்பத்தின் மூத்தவன் என்ற முறையில், இம்மணவிழாவிற்கு உங்களையெல்லாம் அழைத்தாலும்கூட, மணமகள் பெற்றோரையும் பாராட்டு கின்றோம்.
என்னதான் எங்கள் பிள்ளைகள் என்றாலும், அவர்களுக்கும் சிறப்பு செய்வதை நான் தவிர்க்க விரும்பவில்லை. ஆகவே, அவர்களுக்கும் சிறப்புச் செய்கின்றோம்.
(மணமகளின் பெற்றோருக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது).
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்!
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, புதிய குடும்பமாக அய்யா சியமளவர்ணம் அவர்களுடைய குடும்பம் வரக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது. இந்த இணைப்பை ஏற்படுத்திய பெருமைக்குரிய எங்களுடைய இயக்கப் பொறுப்பாளரான பேராவூரணி வட்டாரத்தில் மிகுந்த மரியாதையோடு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய சிதம்பரம் அவர்களுக்கு, அனைவர் சார்பாக, மணவிழா சார்பாக இந்தச் சிறப்பைச் செய்கின்றோம்.
(பேராவூரணி சிதம்பரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது).
நண்பர்களே, செல்வர்கள் வானதி- அருண்துரை ஆகியோரின் மணவிழா, நான் சொன்னதைப்போல, மூன்றாவது தலைமுறையாக நடைபெறக்கூடிய ஒரு மணவிழாவாகும்.
புதிதாக நம்மோடு இணைந்திருக்கின்ற அருண்துரை, அவர்களுடைய உறவுக்காரர்கள் – நம்முடைய உறவுக்காரர்கள்தான் அவர்கள் – இனிமேல் அவர்கள் வேறு உறவுக்காரர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு இடமேயில்லை. நாமெல்லாம் ஒன்றிப்போனவர்கள்தான், ஒன்றுதான். இதில் வேறு எதுவும் குறுக்கீடு கிடையாது.
எல்லோரும் மனித குலம் – ஒற்றுமை – மனிதநேயம்தான் மிகவும் முக்கியமாகும்.
(தொடரும்)