*தந்தை பெரியார்
நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்த தன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணா சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும், இருந்த பார்ப்பனர்களுடைய கௌ ரவமும் குறையத் தொடங்கி விட்டதென்பதும் உண்மையாகும். ஆகையால் அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோகத்தின் செல்வாக் காலும், மற்றும் பல பொது இயக்கங்களின் பேராலும், தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு, பார்ப்பன ரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள், இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறுபல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்கின்றார்கள்.
நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாகக் கருதுவதற்குக் காரணமாக இருந்த ‘மதம்’, ‘வேதம்’ ‘புராணம்’, ‘ஸ்ருதி’, ‘கடவுள்’, ‘ஆன்மா’, ‘மோட்சம்’, ‘நரகம்’, ‘பாவம்’, ‘புண்ணியம்’, முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கியவுடன், அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழைய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள், காங்கிரசின் பெயரால், ‘மகாத்மா’ ‘பாரதமாதா’ ‘அவதாரம்’ கதர் ‘ஹிந்தி’ ‘கொடியேற்ற வணக்கம்’ ‘ஜெயந்தி’ விழாக்கள் முதலியவைகளைக்கொண்டு பாமர மக்களின் மனத்தில் பழைய வருணாசிரம தருமத்தையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்குவதோடுமட்டும அல்லாமல், ‘பிராமண சபை’ ‘சனாதன தரும சபை’ ‘தருமரட்சணசபை’ ‘வேதோத் தாரண சங்கம்’ ‘அத்வைத சபை’ ‘ஹிந்து மத சபா’ முதலிய சங்கங்களை அமைத்துக் கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து, அவர்களை வைதிக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த மாதிரியான வைதிக சபைக் காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டுகிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர் களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும், தீர்மானங் களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமண ரல்லாதார் ஏமாறாமல் இருக்கவும், பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது, என்கின்ற இந்தக்காரணத் திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாகக் கூறுகிறோம்.
பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிரா யத்தை அறிய வேண்டுமனால், சென்ற 23-11-1931இல் கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமண சபையின் இரண்டாவது வருடக் கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களாகவும், வக்கீல் தொழில் செய்பவர் களாகவும் அரசாங்க உத்தியோகத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தி யாயர்களாகவும், ஒன்றுந் தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப் பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளைக் கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற 26-11-1931ஆம் தேதி வெளியான ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் காணப்படுகிறது.)
“நவ நாகரிகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமண னையும், குடிக்கும் பிராமணனையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்ச மாய்த் தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஓர்விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை நான் அறிவேன்.”
“கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதி திராவிடர்களைக் கோயில்களுக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால் ஆதிதிராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்துவரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதிகர்கள் பிள்ளைகள்கூட அய்.சி.எஸ். முதலான பரீட்சை களுக்குச் சீமைக்குச் செல்லுகிறார்கள். அதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம்?” என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார்.
இவர் பேசியிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இந்த நிலைமையைச் சீர்த்திருத்திப் பழைய வைதிக நிலைமைக்கு மறுபடியும் பார்ப் பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற் கூறியபடி ‘ஒழுக்கம்’ கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப்பார்ப் பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களைச் ‘சூத்திரர்களாக’ மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழியவேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு ‘ஒழுக்கங் கெட்டவர்’களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வரமாட்டான் என்பதை நாம் அறிவோம். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு. காந்தி, பண்டித ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய், முதலியவர்களைக் கப்பலேறிச்சென்று வந்தவர்கள் என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடை நீக்கப்பட்டு அப்பார்ப்பனரல்லா தாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதிகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் ‘இந்து மதம் அழிந்துவிட்டது’ என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப்பிளக்கும் அல்லவா? அன்றியும், இதே சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது ‘உலககுரு’ என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற ‘சங்கராச்சாரியார்’ அவரை ‘ஆசீர் வதித்து’ பாராட்டினாரே. இதுபோலவே ‘சூத்திரர்கள்’ என்கின்றவர்களிடத்தில் பேசினால் ‘பாவம்’ என்ற கொள்கையையுடைய சங்கராச் சாரியாரும் மற்றும் வைதிகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர் களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப்பனர் களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர் களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார்கள்- பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல்லையே, ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிராயத்தை வேறு எந்தப் பார்ப் பனரும் ஒப்புக்கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயம்.
மற்றொரு பார்ப்பனர் ‘ஆங்கிலப்படிப்பினால் தான் பார்ப்பனீயம் கெட்டது’ என்று பேசியதற்குப் பதிலாக ‘நான் ஆங்கிலக்கல்வி கற்றவனே, ஆனால் என் னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக் கிறதாய் நான் சொல்ல முடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்குச் சமகிருதக் கல்வியைப்புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்’ என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற பார்ப்பனர் பேசியிருக்கிறார். இதி லிருந்து படித்த பார்ப்பனர்களும், உத்தியோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்ன தான் கெட்டாலும் தங்கள் பிராமணியக் கொள்கைகளைத்தாம் விட்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளுவதேயில்லை யென்பது விளங்கும், அவர்கள் வருணச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள் என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. மற்றும் “பிராமணியம் ஒருநாளும் அழியாது. அது எந்தக் காலத்திலும் நிலைபெற்றிருக்கும் சக்தியை உடைய தாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிரா மணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந் தார்கள். இப்பொழுது இது புதிதல்ல” என்று ஒருவரும்?
“நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை நாம் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பக் கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்குப் போதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப் போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சாரதா சட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன்ஜாக்கிரதையுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்” என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர்.
இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப் பனர்கள் பிரசாரங்கள் செய்து கொண்டு வருவதிலி ருந்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. “அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாசிரம தருமராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்” என்பது தான். இந்த வகையில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ்செய்யும் பார்ப்பனர் களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள் ஆதிக்கம் அழியாமல் இருப் பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும் தேசத்தில் நிலைபெற்றுப் பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப் படுத்துவதற்குமே பல துறைகளிலும் இருந்து உழைக் கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
இந்தக் காரணத்திற்காகவே தான், மதசம்பந்தமான ‘அவதாரபுருஷர்கள்’ எனறு அவர்களாலேயே கொண் டாடப் படுகின்ற ‘ஆழ்வார்கள்’ ‘நாயன்மார்கள்’ ‘பக்தர்கள்’ முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார் என்ற வித்தியாசத்தை மனத்திற்கொண்டு பார்ப்பனரல்லாத ‘ஆழ்வார்’களுக்கும், ‘நாயன்மார்’ களுக்கும் ‘பக்தர்’களுக்கும் பெருமை கொடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்திருக்கும் திரு.காந்தியை, ‘மகாத்மா’வாகவும் ‘அவதார’ புருஷராகவும் கொண் டாடுகின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசை, போற்றுகின்றனர். இன்றேல், திரு காந்தியை மூலையில் தூக்கிப்போட்டு விட்டுக் காங்கிரசையும் ஒழித்து விட அவர்கள் முயற்சி செய்யப் பின்வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.
மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல் களோ, இலக்கியங்களோ இல்லாததும், வருணாசிரம தருமத்தைப் போதிக்கும், துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை முதலிய நூல்கள் உள்ளதுமாகிய இந்தி மொழியைப் பிரசாரம் செய்கின்றனர். சனாதன தர்மத்தைப் போதிக்கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்தி செய்யவேண்டு மென்று பேசுகின்றனர்.
இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிறநாட்டு நாகரிகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரச்சாரஞ் செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறோம்.
இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதிக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
சென்ற சில தினங்களுக்கு முன் குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தைக் கண்டிக்க முன்வந்த, திரு.எம்.கே. ஆச்சாரியார், “கோயில் பிரவேசஞ் செய்ய விரும்பு கிறவர்கள், மத பக்தியினால், சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்லவேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்றனர்.ஆகையால் அதைத் தடுக்க வேண்டும்” என்ற அபிப் பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது, மததர்மம் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காணலாம். ‘மத தர்மத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கலாம்’ என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக் கொண்டி ருக்கிறார். இதிலிருந்து மத தர்மம், ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணியம் அழியாமல் நிலைக்கும் என்பது தான் அவர் கருத்து என்பதை அறியலாம்.
ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப்படும் போது, எல்லாவகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார் கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக்கூடாது என்பதற்கும் அந்தப் பாழும்மத தர்மந்தானே காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, திரு.ஆச்சாரியார் கூறும்மத தர்மத்தையும், பிராமண சபையார் பிரசாரம் செய்யும் மத தர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக் கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றே கூறுகின்றோம்.
ஆகையால், பார்ப்பனர்கள் செய்யும், எல்லாப் பிரச் சாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன் மூலம் வருணாசிரம தருமத்தையும், பார்ப்பனியத் தையும் காப்பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்கிறோம்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.11.1931