‘நீட்’ தேர்வு என்பதே சமூக நீதிக்கு எதிரானது – இந்தத் தேர்வால் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும், கிராமப்புற மக்களும், முதல் தலைமுறையாகக் கல்விச் சாலைகளில் நுழைந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தொடக்க முதலே திராவிடர் கழகமும், சமூக நீதியில் அக்கறை கொண்ட அமைப்புகளும், தலைவர்களும் குரல் கொடுத்து வந்துள்ளனர். போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளோம்.
தகுதி – திறமை அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைகளைத்தான் ‘நீட்’ தேர்வு என்று தந்திரமாக உயர் ஜாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள் – இவர்களுக்காகவே கொள்கையை வகுத்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி உள்ளிட்ட அமைப்புகளும், உயர்ஜாதி ஊடகங்களும் சுருதிப் பேதம் இல்லாமல் ஊளையிட்டு வந்தன.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.அய்.) இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கும் வசதி செய்து கொடுத்தது ஒன்றிய பிஜேபி அரசு.
இதைப் பயன்படுத்தி இந்தியாவில் வாழ்பவர்கள் என்.ஆர்.அய். சான்றிதழ்களைக் கொல்லைப்புறமாகப் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்துள்ளனர்.
நேற்று வெளிவந்த ‘தினமலர்’ ஏட்டிலேயே விரிவாக வெளி வந்துள்ளது.
‘‘என்.ஆர்.அய்., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து, 18,000 மாணவர்களுக்கு தனியார் கல்லுாரிகள் சேர்க்கை வழங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, தனியார் கல்லுாரிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வு வாயிலாக நடந்து வருகிறது.
முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்வை கொண்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பின்வாசல் வழியாக சில தனியார் நிறுவனங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் செய்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மருத்துவ கல்லுாரிகளில், என்.ஆர்.அய்., கோட்டா தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய துாதரகங்களின் உதவியுடன் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
அதில், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஆர்.அய்., கோட்டாவில் முறைகேடு செய்து மருத்துவ மாணவர்களை சேர்க்க, தனியார் கல்லுாரிகளே முகவர்களை நியமித்தது தெரியவந்து உள்ளது.
இந்த முகவர்கள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை போல, உள்நாடு மாணவர்களுக்கு துாதரக ஆவணங்கள், போலியான வீட்டு முகவரிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 18,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சில உண்மையான என்.ஆர்.அய்., மாணவர்களும் முகவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மோசடிக்கு துணைபோயுள்ளனர். அதன் மூலம், என்.ஆர்.அய்., கோட்டாவில் அவர்களது பெயர்கள் பயன்படுத்தப்பட்டு, போலி மாணவர் களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கத்தில் ஒரு தனியார் கல்லுாரியில் நடத்திய சோதனையின்போது 6.42 கோடி ரூபாய் வங்கி வைப்பு தொகை கணக்கில் வராததால், அதை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அதே போல் மேலும் சில கல்லுாரிகளில் நடந்த சோதனையில், 12.33 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத சொத்துகள் இருந்ததால், அவற்றை முடக்கியது. இந்த தனியார் கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சான்றிதழ்களை வெளி நாட்டில் உள்ள இந்திய துாதரகங்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில் பெரும்பாலான என்.ஆர்.அய்., கோட்டா சேர்க்கை போலியானவை என்பது தெரியவந்து உள்ளது. தனியார் கல்லூரிகளில் நடந்த இந்த முறைகேடு நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.’’ (‘தினமலர்’ 26.8.2025)
இது ஏதோ இப்பொழுதுதான் நடக்கிறது என்று கூற முடியாது. 27.3.2022 நாளிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடே புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு இருந்தது.
‘‘எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வி பெற உரிய கலந்தாய்வு சுற்றில் இடம் கிடைக்காதவர்கள் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் இடம் பிடித்திடும் முயற்சிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் ‘நீட்’ தகுதி மதிப்பெண் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தகுதி மதிப்பெண் பட்டியலில் ஏறக்குறைய 9 லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், 8,72,911ஆம் இடத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர்’’ என்று ெவளியிட்டதோடு ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஏடு நின்றுவிடவில்லை. எடுத்துக்காட்டுகளையும் சாங்கோ பாங்கமாக ெவளியிட்டது.
மகாராட்டிர மாநிலம் லோனி நகரில் உள்ள பிரவாரா மருத்துவக் கல்லூரியில் வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடி மக்களுக்கான ஒதுக்கீட்டில் 21 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கு தகுதி பட்டியலில் 3,26,385 ஆம் இடத்தில் இருந்தவர் போலியாக என்.ஆர்.அய். சான்று பெற்று, மருத்துவக் கல்லூரியில் நுழைந்துள்ளார்.
கருநாடக மாநிலம் கோலாரில் உள்ள சிறீ தேவராஜ் அர்ஸ் மருத்துவக் கல்லூரியில் 86416ஆம் இடத்தில் தகுதி பட்டியலில் இருந்தவர் என்.ஆர்.அய். சான்றிதழை குறுக்கு வழியில் பெற்று மருத்துவக் கல்லூரியில் வசதியாக நுழைந்து விட்டார்.
‘‘தகுதி – திறமை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் ‘நீட்’ தேர்வு’’ என்று ஒற்றைக் கையில் பூணூலைப் பற்றிக் கொண்டு, இன்னொரு கையை உயர்த்தி முழக்கமிட்ட கூட்டம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
தகுதி தேர்வில் 8,72,911ஆம் இடத்தில் இருப்பவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது தான் ‘தகுதி – திறமையா?’ குறுக்கு வழியில் என்.ஆர்.அய். சான்று பெற்று மரத்துவக் கல்லூரியில் நுழைவதற்கும் ஒரு வகை ‘தகுதி’ ‘திறமை’ தேவைப்படுகிறது – அப்படித்தானே!