மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம்;
நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா என்று சிந்திக்க வேண்டாமா?
அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர்
தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது!
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா என்று சிந்திக்க வேண்டாமா?
அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர்
தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது!
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சென்னை, ஆக.27 சாதாரணமாக இருக்கிற மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா என்று சிந்திக்க வேண்டாமா? காலம் சென்ற மருந்து – காலம் சென்ற நபர்கள் – காலம் சென்ற கருத்துகளை வைத்துக் கொண்டு, ‘‘இதுதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி நம்முடைய ரிஷிகள் சொன்னது, இதுதான் நம்ம முனிவர்கள் சொன்னது, இதுதான் நம்ம வேதம் சொன்னது’’ என்று இருந்தால் என்ன அர்த்தம்? அறிவு வளருமா? எனவே தான், அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம்; நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டனவா என்று சிந்திக்க வேண்டாமா? அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது! புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
- சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் – தமிழர் தலைவர் உரை
- அறிவியலுக்கும், மதத்திற்கும் உள்ள வேறுபாடு
- நாங்கள் எல்லாம் ‘மிசா’ கொடுமையில் உள்ளே இருந்த காலத்தில்…
- ‘படிக்காதே’ என்று சொன்னது மனுதர்மம்!
- அறிவியலுக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசம் ஏதுமில்லை!
- யாருக்கு குறுகிய பார்வை?
- ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இங்கிருந்த மூடநம்பிக்கைகளை மாற்றியிருக்கிறது!
- பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களைத் தூக்கி எறிந்தனர்!
- கணவனின் பெயரைக்கூட சொல்லமாட்டார்கள், அந்தக் காலத்துப் பெண்கள்!
- பெரியார், சுயமரியாதை இயக்கம் செய்த சாதனை!
- ஒரு துளி ரத்தம் சிந்தாமல் நடத்திய புரட்சி!
- ‘வீடியோ’வைச் சாட்சியாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது!
- ஆயிரம் பெரியார்கள் தேவை!
- வடநாட்டில் குளிர் ஜூரம் வருதுன்னு கடவுளுக்கு போர்வை போர்த்துகிறான்!
- நாம்தான் முதலில் ஒற்றுமைப் பேரணியை நடத்தியிருக்கிறோம்!
- நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டதா என்று சிந்திக்க வேண்டாமா?
- ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!’’
- மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயம்; தன்னம்பிக்கை மிகுந்த ஒரு சமுதாயமாக மாறும்!
சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் – தமிழர் தலைவர் உரை
கடந்த 12.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில், சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்த 100 ஆண்டுகளில் அய்யாவுக்கு எவ்வளவு எதிர்ப்பு? எவ்வளவு சிரமம்? இன்றைக்கு முதல் வெற்றி என்னவென்றால், மூடநம்பிக்கைக்கும், அறிவி யலுக்கும் சொல்லும் போது, இங்கே அழகாக SCIENCE AND RELIGION – அதாவது நேர் எதிரான தத்துவம் எது? அறிவியலும் – மதமும்.
அறிவியலுக்கும், மதத்திற்கும்
உள்ள வேறுபாடு
உள்ள வேறுபாடு
அறிவியல் சிந்தனை செய்வது. ‘சோதனை இருக்கிறதா? முயற்சி செய்தார்களா?’ என்று பார்ப்பது அறிவியல். ‘இதுதான் முடிந்த முடிவு’ அப்படியென்று முற்றுப்புள்ளி போடாததற்குப் பெயர்தான் அறிவியல். மதம் அப்படியில்லை. ‘நம்பு… கேள்வி கேட்கக்கூடாது… நம்பு…’ இதுதான் மதம். அறிவியலுக்கு நேர் எதிரான ஒரு தத்துவம் இது.
அதனால்தான் இன்றைக்குக் கூட நாம் சொன்னோம் என்றால், ஒன்றிய அரசாங்கம்; ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இவர்களெல்லாம் செய்கிற வேலை என்ன? வேத கலாச்சாரம் (Vedic Culture). வேத கலாச்சாரம் என்றால் என்ன? நம்பணும். மேலேயிருந்து வந்தது. கேள்வி கேட்காதே! அறிவியல் என்றால், ‘கேள்வி கேள். இதுதான் முடிந்த முடிவு என்று சொல்லாதே.’ அறிவியல் மனப்பான்மை வேண்டும்.
நாங்கள் எல்லாம் ‘மிசா’ கொடுமையில் உள்ளே இருந்த காலத்தில்…
பெரியார் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார் என்றால் – அவருடைய காலத்தில் இல்லை என்றா லும், அவருடைய காலத்திற்குப் பிறகு அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்படுகிறது. அதுவும் எந்தக்காலத்தில் திருத்தப்படுகிறது? நாங்கள் எல்லாம் ‘மிசா’ கொடுமையில் உள்ளே இருந்த காலத்தில் திருத்தப்படுகிறது. மிசாவில் எவ்வளவு மோசமான விளைவுகள் வந்திருந்தாலும், ஒரேயொரு நல்ல விளைவு! அது என்னவென்றால்? இந்த 51a(h) அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்று புதிதாகச் சேர்க்கிறார்கள்.
அந்த அடிப்படை கடமைகளைப் பற்றித்தான் நாம் எல்லா கூட்டங்களிலும் சொல்கிறோம். நேற்றுகூட (11.05.2025) அதுதான் தீர்மானம். நம்முடைய ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் வாங்கு வாங்கு’ என்று வாங்கி விட்டார் பல்கலைக் கழகத்தில்! பகுத்தறிவுப்படி தான் பேசணும். வேறு ஏதாவது பேசுவதற்கு, அங்கே இடம் கிடையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இதைப் பேசினால் ஓட்டு போயிடுமே அப்படி இப்படின்னு பேசறாங்க. ஒன்னும் போகாது. என்னு டைய சாதனைக்குத்தான் ஓட்டு போடுகிறார்கள். இந்தக் கொள்கையினால்தான் என்னால் சாதிக்க முடிந்தது.
‘படிக்காதே’ என்று சொன்னது மனுதர்மம்!
சுயமரியாதை இயக்கம் என்ன சொன்னது? ஆண், பெண் படிக்கணும். ‘படிக்காதே’ என்று சொன்னது மனு தர்மம். அதுதான் மதம்.
‘படி… படி… படி…’ என்று சொல்வதுதான் அறிவியல். அந்த மாதிரி ஒரு கருத்து வந்த பிறகு, இன்றைக்கு மதம் தோல்வி அடைந்துவிட்டது. மற்ற மதத்துக்காரன் நாணயமாக இருக்கிறான். போப்பாண்டவர் கூட என்ன செய்தார்? ஒரு காலத்தில் கலிலியோவைத் தண்டித்தார்கள். கோபர்நிக்கஸ் தப்பிச்சுட்டாரு. அப்படி கலிலியோவைத் தண்டித்ததை தவறு என்று போப்பாண்டவர் ஒப்புக்கொண்டார். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று சொன்னார். அதுதான் பெருந்தன்மை. ஆனால், ஹிந்து மதத்துக்காரன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. மறுபடியும் பழையபடியேதான் நடந்து கொள்கிறார்கள்.
அறிவியலுக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசம் ஏதுமில்லை!
சுயமரியாதை இயக்கம் என்றால், அறிவியல் இயக்கம் என்று பொருள். அறிவியலுக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அது ஒவ்வொரு பெயரில் இருக்கும். பகுத்தறிவு, சுயமரியாதை அதுதான் அறிவியல். ‘‘கேள்வி கேள்; நம்பாதே; முடிந்த முடிவுன்னு எடுக்காதே; நாளைக்கு இதைவிட பெரியது வரலாம்; அப்போது இது சின்னதாக போய்விடும்.’’ ‘தேசபக்தி தேசபக்தி’ என்று எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்களே, இப்போது தேசம் சிறியதாகி உலகம் பெரியதாகிவிட்டது. அதை புரட்சிக்கவிஞர் என்றைக்குச் சொன்னார்? ‘‘பேசு சுயமரியாதை உலகு அமைப்போம்’’ என்றார்.
யாருக்கு குறுகிய பார்வை?
உலகு… உலகப் பார்வை… நம்முடையது! ஆனால், ‘உனக்குக் குறுகிய பார்வை’ என்கிறான் நம்மைப் பார்த்து! யாருக்கு குறுகிய பார்வை? சுயமரியாதை இயக்கத்தினால் எவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தது என்பதற்கு ஒரேயொரு உதாரணம், உலகப்பண்பாடு என்று எழுதியிருக்கிறார்.
உலகப்பர் ஓடப்பரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திப் பேசி, உலகம் முழுவதும் நீ தவறான கணக்குப் போட்டுவிட்டாய் என்று குற்றவாளிக் கூண்டில் வைத்தவுடன், “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ” என்றார்.
இப்போது இருப்பது அறிவு உலகம். அந்தக்காலத்தில் புரட்சிக்கவிஞர், ‘உதைத்தாவது மாற்றுவோம்’ என்று எழுதியிருக்கிறார். ஏனென்றால் எத்தனை காலத்துக்கு அவதிப்படுகிறவன் பொறுத்துக்கொண்டு இருப்பான்? பூனைகூட ஓர் அறைக்குள் வைத்து பூட்டி வைத்து அடித்துக்கொண்டே இருந்தால், பிராண்டுகிறதா, இல்லையா? மனிதன் அதைவிட வெற்றிகரமானவன் தானே? அந்த ‘‘உதையப்பர்’’ என்பதை புரட்சிக்கவிஞர் வன்முறையை ஆதரிக்கிறார் என்று பொருளல்ல. ஆனால், அதைக்கூட இப்போது என்ன செய்துவிட்டார்கள் என்றால், இது ஸ்டாலின் யுகம். தந்தை பெரியாருக்குப் பிறகு வந்த யுகம்.
அய்யா காலத்திலேயே, அண்ணா காலத்திலேயே அந்த உணர்வு வந்தாகிவிட்டது. அதில் ஒரு சின்ன திருத்தத்தைச் செய்துவிட்டார்கள். அதனால்தான் நாம் பாசிசத்தை ஒழித்துவிட்டு, ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் ஓட்டப்பர் ஆகிவிட்டால், ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மறைந்து ஒரு நொடிக்குள் ஒப்பப்பப்பர் ஆகிவிடுவர். ஓட்டுப் போடுகிற வயது ஆகிவிட்டால், 18 வயது ஆகிவிட்டதா? ஒழுங்காகச் சென்று ஓட்டுப் போடுங்கள். அவ்வளவுதானே தவிர வேறொன்றும் இல்லை.
ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இங்கிருந்த மூடநம்பிக்கைகளை மாற்றியிருக்கிறது!
ஏன் இந்த ஆட்சியைப்பற்றி அவன் கவலைப்படு கிறான்? ஏன் தன்னை விலை பேசி விற்றுவிடுகிற வேலையைச் செய்கிறான்? ஏன் பலகீனமான தன்னை விற்றுகொள்கிறவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கிறான்? பைத்தியக்காரனிலிருந்து எல்லாரும் இருக்கிறார்களே! இன்னும் சிலர் 8 விழுக்காடு வாக்குகளை எப்போதோ வாங்கிவிட்டால், என்னமோ எட்டுத் திசையிலும் புகழ் இருப்பது போல் எண்ணிக்கொள்கிறான். எட்டுத் திசை இல்லை. கடைசியில் நான்கு பேர்கூட மிஞ்சமாட்டார்கள். நான்கு விழுக்காடு கூட வராது. உதையப்பர் போய் ஓட்டப்பர் காலம் இது. அதனால்தான் சுயமரியாதை இயக்கம் ஒரு துளி வன்முறை இல்லாமல்; ஒரு துளி இரத்தம் சிந்தாமல் இங்கிருந்த மூடநம்பிக்கைகளை மாற்றியிருக்கிறது.
பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பட்டங்களைத் தூக்கி எறிந்தனர்!
ஒரு சின்ன உதாரணம்… ‘‘நம்ம ஜாதி வெற்றி பெற வேண்டும், நம்ம ஜாதிதான் ஆள வேண்டும்’’ என்று ‘உச்சகட்டத்தில் பேசுகிற ஜாதிக்கட்சித் தலைவர்கள் கூட ஜாதிப் பின்னணியை போடுவதில்லையே! இதுவும் ஒரு சங்க காலம், இதுவொரு புது சங்கக் காலம். ஜாதி சங்க காலம். பெரியாருடைய வெற்றி என்னவென்றால் – கவிஞர் சொன்னார். நாமெல்லாம் பிறக்காத காலத்தில் 1929 இல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் கடைசியில் ‘‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி. நாயக்கர் கிடையாது.’’
‘‘சவுந்திரபாண்டியன் நாடார் ஆகிய நான், இன்று முதல் சவுந்திரபாண்டியன்தான். நாடார் கிடையாது.’’
‘‘இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்று முதல் இராமச்சந்திரன்’’ என்று பெயரை மாற்றிக்கொண்டார்கள்.
‘‘இனிமேல் என்னை ஈ.வெ.ராமசாமி என்று அழை யுங்கள்’’ என்று பெரியார் சொன்னார். உடனே அன்னை நாகம்மையார் அடுத்த கூட்டத்தில், ‘‘தோழர் ராமசாமி அவர்களே’’ என்று அழைத்தார்.
கணவனின் பெயரைக்கூட சொல்லமாட்டார்கள், அந்தக் காலத்துப் பெண்கள்!
கிராமத்தில் ஓட்டுக்குக் கணக்கு எடுக்கப் போனா, ‘ஏம்மா… எல்லார் பெயரையும் சொல்லிட்டீங்க. உங்க வீட்டுக்காரர் பேரு என்ன?’’ என்றால், அந்தம்மா ‘‘ஹாஹா…’’ என்று சிரிக்கும். இப்போது கொஞ்சம் வெளியில் வந்திருக்கிறார்கள். இன்னும் ஜன்னலுக்கு உள்ளே இருந்துகிட்டு இருக்காங்க. ‘‘ஏம்பா, தம்பி உங்க அப்பா பெயரைச் சொல்லு, உங்க அம்மா சொல்லமாட்டாங்க’’ என்பார். இப்போது வெளியில் வந்திருக்காங்க. இந்த மாற்றம் எப்படி வந்தது?
எல்லாரையும் போட்டு அடிச்சாரா பெரியார்? இல்லை எல்லார் மீதும் ஏவுகணை விட்டாரா? அறிவுக்கணை விட்டார்! அதுதான் மிக முக்கியம். மிகப்பெரிய அளவுக்கு. இப்போது எந்த அளவுக்கு வந்தா யிற்று என்றால், ‘‘சரிம்மா ஆள் இல்லை. சீக்கிரமாக சொல்லும்மா’’ என்றால், ‘‘அதாங்க தெக்கத்தி பக்கம் ஒரு கடவுள் இருக்கு பாருங்க, அந்தக் கடவுள் பேருதாங்க எங்க வூட்டுக்காரர் பேரு எழுதிக்கங்க’’ என்பார்.
தெக்கத்தி பக்கம் ஒரேயொரு கடவுள் இருந்தா எழுதிட்டு போயிடுவாரு. நம்மாள்கள்தான் ஒரு கோடி கடவுள் வைத்துக்கொண்டு இருக்கிறார்களே. என்னத்த எழுதுவாரு அவரு? அவரு என்ன பண்ணுவாரு?
சரிம்மா.. ‘‘தெக்கத்தியில் பரமேஸ்வரனா? இவரா? அவரா? அங்க வந்து இவரு இருக்காரே… நெல்லை யப்பர் இருக்காரே…’’
‘‘அதெல்லாம் கிடையாது, இன்னும் கிட்ட வாங்க.’’
இந்தம்மாவுக்கு பேரு கிட்ட வராது. அப்பவும் அந்தம்மா வாயில பேரு வரமாட்டேங்குது. மருதை இருக்கில்ல மருதை – மதுரை வராது – மருதைக்கு பக்கத்தில குதிரை இருக்கு பாருங்க. அதுக்குப் பக்கத்துல ஒரு ஊரு இருக்கு பாருங்க’’ என்பார்.
பெரியார், சுயமரியாதை
இயக்கம் செய்த சாதனை!
இயக்கம் செய்த சாதனை!
ஒரு ஆள் கிட்ட ஒரு நிமிடத்தில் செலவு பண்ணிட்டு போற விசயத்துக்கு உயிரை எடுத்து, ஒன்றரை மணி நேரம் இழுத்தடிச்சா வாத்தியாரு என்ன பண்ணுவாரு. பட்டியலில் பெயர் மாறுவ தெல்லாம் நடக்கிறதே. அதிலிருந்து பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதுவே பெரியார் செய்த சாதனை! சுயமரியாதை இயக்கம் செய்த சாதனை!
‘‘அதாங்க மொட்டை போடுவாங்களே; மலை மேல இருக்காரே!’’
‘‘ஓகோ… முருகனா?’’
இல்லீங்க, அவருக்கு இன்னொரு பேரு இருக்கு பாருங்க.’’
விட்டா முருகன்னே எழுதிகிட்டு போயிடுவாரு. ‘‘அவருக்கு இன்னொரு பேரு இருக்கு பாருங்க.
‘‘சுப்பிரமணியனா?’’
‘‘ஆ…. அதேதான்’’ என்று சொன்னால், என்னய்யா அர்த்தம்?
இன்றைக்குப் பெரியார் என்ன செய்தார்? என்று கேட்கிறார்களே!
கணவன் பெயரைச் சொல்லக்கூடாது என்பதே ஒரு மூடநம்பிக்கைதானே?
ஒரு துளி ரத்தம் சிந்தாமல்
நடத்திய புரட்சி!
நடத்திய புரட்சி!
இப்போது, ‘‘மிஸ்டர் சுப்பிரமணியம் உங்களுக்கு போன் வந்திருக்கு வாங்க’’ என்கிறார்களே! கவ னிக்காமல் விட்டால், அடுத்தவர், மிஸ்டர் சுப்பிரமணி யம் கூப்பிடறாங்க, ‘போய்யா’ என்கிறார்களே. அதுவும் இளைய தலைமுறை இருக்கே… ‘ஏண்டா… போகலீயா?’ என்னுடைய பேத்தி சொல்லுது. அவன் இப்போ வரமாட்டான்யா நீங்க போங்க’’ன்னு. அவங்க பாட்டிக்கு கோபம். என்ன இந்தமாதிரி பேசுதுன்னு. பேத்தி, ‘‘அய்யோ பாட்டி நீங்களெல்லாம் எந்த யுகத்தில் வாழறீங்க? அய்யா பெரியார் சொன்னதை கேட்டீங்களா? இல்லையா?’’ கேட்கிறது பிள்ளைகள். எப்படி? பெரியார்…. ஒரு துளி ரத்தம் சிந்தாமல் நடத்திய புரட்சி! மூடநம்பிக்கை ஒழிப்பு!
அதுமட்டுமே இல்லே… இன்னொரு சங்கதி! ஜாதி சங்கத் தலைவர்கள் பதவி கேட்கறாங்களோ, உரிமை கேட்கறாங்களோ – அது ஒன்றும் தவறு என்று நாம் சொல்ல வரவில்லை. அது பிரச்சினையும் இல்லை. அவருகிட்டயே ஜாதிப்பட்டம் கிடையாது. தமிழ்நாட்டின் சாதனை அதுதான். இப்போது ஜாதி என்று சொல்லவும் வெட்கப்பட்டுக்கொண்டுதான்! ‘நம்ம இனம் வாழ வேண்டாமா?’ என்கிறான்.
‘ஏய்யா… இனமும், ஜாதியும் ஒன்றா? ஜாதின்னு சொல்றதுக்கு வெட்கப்படறான் பாருங்க, அங்கே தான் பெரியார் வெற்றி பெற்றார்! அங்கே தான் சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றது!
அதுபோலவே குடிகாரனைப் பழக்கி, அத்துடன் மேலே மேலே இளைஞர்களுக்கெல்லாம் கற்றுக் கொடுப்பது.
ஆன்லைன் சூதாட்டத்தில் அவனவன் தற்கொலை பண்ணிக்கிட்டு போறான். அந்தமாதிரி அடுத்தது என்னவென்றால், ஜோதிடம், ஜாதகம் – மதம் எப்போது வாழ்கிறது என்றால், அறிவியலுக்கு நேர் எதிரான தத்துவமான அவன் மதம் வாழ்வதற்கே அறிவியல் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டர் ஜோதிடம். பெரியார் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்திருந்தார் என்றால், புத்தகம் படிப்பதற்கு! இவரு குழாயை மாட்டிக்கிறாரு. நவீன அஸ்ட்ராலஜி? காதில் மாட்டிட்டு வருகிறார். தொலைக்காட்சி யார் கண்டுபிடித்தது? முப்பத்து முக்கோடி தேவர்களில் யாருக்காவது டி.வி–ன்னா என்னன்னு தெரியுமா? மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்த ணும் என்று சொன்னால், வீடியோ வந்திருச்சான்னு கேட்கிறான். அது வீடியோ சாட்சியாக!.
‘வீடியோ’வைச் சாட்சியாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது!
‘முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சி’யாக ஏற்றுக்கொள்ளப்படாது. ‘வீடியோ’வைச் சாட்சியாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அக்னி சாட்சி யாகங்கிறான். ‘‘அக்னி நீதிமன்றத்துக்கு வந்தால் என்னாவது?’’ ஃபயர் சர்வீசும் சேர்ந்து வரணும். வீடியோ சாட்சியாக, சரி… அது வந்தாச்சு. இன்னிக்கு யார் தயவில் இருக்கிறது அத்தனையும்? கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவன் அவன். அதை இவன் கையில் கொடுத்தா, இவன் ‘‘ஓம்…. பத்திரிகையிலும் பார்த்தால் ஓம்…’’ என்னய்யா அர்த்தம்? கம்ப்யூட்டரை, ஓம் கண்டுபிடிச்சிருந்தால் அவன் பெயரைப் போடு. இவன் ஓம் கிடையாதே… கண்டுபிடித்தது எது? அறிவியல்! புத்தகங்கள் நிறைய வந்திருக்கிறது. நீங்கள் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
இந்திய அளவில் இந்தக்கருத்து பரவியிருக்கிறது. ANJELS – DEVILS AND SCIENCE புஷ்பா எம்.பார்கவா எழுதியிருக்கிறார். இது ஒரு சிறிய புத்தகம். 24 பக்கம்தான். பேருந்தில் போகும்போதே படித்து விடலாம். பெரிய புத்தகங்கள் அச்சிட்டால், மக்கள் படிப்பதில்லை. பெரியார் திடலுக்கு அவர் வந்திருக்கிறார். நாம் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். அய்தராபாத்தில் இருக்கும் Atheist Society விஜயவாடாவில் நடத்திய நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஜோதிட மூடநம்பிக்கை குறித்து உலக அறிவாளிகள் சொல்கிறார்கள். இந்தச் சிறிய புத்தகத்தில் ஒரு பெரிய செய்தி பாருங்கள். அதாவது நோபல் பரிசு பெற்ற 19 அறிஞர்கள் அனைவரும் சேர்ந்து, போலி விஞ்ஞானம் பற்றி எழுதி உலகளவில் அறிஞர்கள் 140 பேர் கையெழுத்து போட்டிருக்கிறர்கள்.
நம்மாளுங்க பாருங்க. வாஸ்து பார்க்கிறான். ‘இவர் வாஸ்து நிபுணர்!’
கொஞ்சம் ஏமாந்தவுடனே பாடத்தில் வச்சுக்கிட்டான். நரேந்திர தபோல்கார் உயிரை விட்டார். அதற்காகவே சுட்டுக்கொன்றார்கள். அவர் புத்தகத்தில் அழகாக எழுதியிருக்கிறார்.
ஆயிரம் பெரியார்கள் தேவை!
இப்போதும் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள். தினப்பலன், வாரப்பலன், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஒன்னு ஒன்னா கண்டுபிடிக்கிறான் – புதுசு புதுசா…! நாம் பிரச்சாரம் செய்து கொஞ்சம் நிமிர்ந்து எழுந்திருச்சா, மறுபடியும் போதையை ஊத்தறான். நம்மாளு என்ன பண்றான்? அதிகமாக குடிச்சவன்கிட்ட போய், நாம் என்ன செய்ய முடியும்? ‘‘ஏண்டா வேட்டி இல்லாம இருக்கியேன்னு கேட்டா?’’ ‘‘உன்கிட்டதான் வேட்டி இல்லை. எனக்கு வேட்டி சரியாக இருக்குங்கிறான்.’’ நாலு பேர் சொன்னவுடனேயே வேட்டி கட்டினவனுக்கே சந்தேகம் வந்திடும். நாம் கட்டியிருப்பது வேட்டிதானான்னு. ஆகவே இந்த மாதிரி முட்டாள்தனத்தையும், மூடத்தனத்தையும் வைக்கும் போது, ஆயிரம் பெரியார்கள் தேவை என்று அவர்களே சொல்லக்கூடிய அளவுக்கு வந்தாகிவிட்டது.
வடநாட்டில் குளிர் ஜூரம் வருதுன்னு கடவுளுக்கு போர்வை போர்த்துகிறான்!
நாம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றோம்? திரைப்படத்தில் விவேக் சொன்னாரு. ‘‘சின்னக் கலைவாணர்’’ என்று பாராட்டினோம். இவ்வளவு பெரிய காரை வாங்கிக்கொடுத்தால், ஒரு சின்ன எலுமிச்சம் பழத்தைக் கொண்டு போய் வைக்கிறான். எலும்மிச்சம் பழம் என்ன பிரேக் இன்ஸ்பெக்டரா? அது என்ன மெக்கானிக்கா? எலுமிச்சம் பழத்தை அறுத்து உன் தலையிலாவது தடவிக் கொண்டால், வெயிலுக்குக் கொஞ்சம் பயன்படும். பொழுதுவிடிந்ததும் நீங்கள் தொலைக்காட்சியைத் திறந்தீர்கள் என்றால், முதல் நிகழ்ச்சி ராசி பலன்தான். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு திருவிழா. அதைவிடக் கொடுமை – எவ்வளவு முட்டாள்தனம் பாருங்கள், நம்ம ஓரளவுக்கு மோசம்தான். ஆனால், இந்திய அளவுக்கு பார்த்தீர்கள் என்றால், இந்த கோவிட் வந்தது பாருங்கள். வடநாட்டில் குளிர் ஜூரம் வருதுன்னு கடவுளுக்கு போர்வை போர்த்துகிறான். நம்ம ‘விடுதலை’ தான் அதைப் படத்துடன் வெளியிட்டது. நாளும் பலன் கேட்பதற்குத் தயாராக இருக்கிறான்.
ஒரு ஜோதிடர் சொன்னார் – ‘‘ஒரு பெரிய பிரபல நடிகர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போறார். ஆரம்பிச்சே தீருவார்’’ என்று! வாசல்படி வரைக்கும் வெளியில் வந்துட்டார்; அப்புறம் யோசனை பண்ணாரு. ‘இல்லேல்ல இது சரிவராது’ என்று பின்வாங்கிட்டார். ‘தொழிலையே விட்டுவிடுவேன்’ அப்படின்னாரு ஜோதிடர். அவர் இன்னமும் ஜோசியம் சொல்லிகிட்டு இருக்கிறார். ஜோதிடக்காரர்களுக்கு எவ்வளவு நாணயம் பாருங்க.
நாம்தான் முதலில் ஒற்றுமைப் பேரணியை நடத்தியிருக்கிறோம்!
அடுத்தபடியா ஜோதிடர் என்ன சொல்றாரு? ஒரேயொரு கேள்வி, திடீரென்று பெரிய சண்டை. நான்கு நாளில் முடிந்திருக்கிறது. இன்னமும் முழுமையாக வந்துவிட்டதா, இல்லையா என்பது தெரியாது. பாகிஸ்தானுக்கும், நமக்கும்! உடனே மோடி வந்தாரு. நாடுன்னு இருந்தால் நாட்டுக்குச் சுயமரியாதை ரொம்பவும் முக்கியம் அப்படின்னு சொன்னார். நாம்தான் முதலில் ஒற்றுமைப் பேரணியை நடத்தியிருக்கிறோம். நம்ம முதலமைச்சர்தான் நடத்தியிருக்கிறார். எந்த ஜோதிடனாவது, ‘‘இந்தத் தேதியில், இத்தனை பேரை சுட்டுக்கொல்லப் போகிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்’’ என்று சொன்னார்களா?
ராகு, கேது எல்லாம் நம்ம பையன்தான். இந்த பையன் எல்லாம் எங்கே போனான்? மத்தவங்க எல்லாம் என்ன பண்ணாங்க? இந்த ஜோதிடப் பலன் எல்லாம் என்ன ஆச்சு? திடீரென்று பாகிஸ்தான் சண்டை வரும் அப்படின்னு எங்கயாவது எதாவது சொல்லியிருக்கானா? இல்லையே!
அடுத்து ‘‘நெடுஞ்சாலையில் ஒரு கார் வேகமாக வரப்போகுது. இன்னொரு கார் வரப்போகுது. இரண்டு காரும் முட்டப்போகுது’’ அப்படின்னு ஜோதிடர் சொல்லிட்டாருன்னா, டிராபிக் கான்ஸ்டபிளுக்கு வேலையே இல்லை. விபத்தே நடக்காதே. நாங்களெல்லாம் முதல் ஆளா இருப்போம் ஜோதிடக்காரங்களுக்கு மாலை போடறதுக்கு!
ஆகவே தான், இந்த மூடநம்பிக்கைகளை சுயமரியாதை இயக்கம் வாழ்நாள் எல்லாம் கண்டிக்கிறதே, அது பெரியாருக்காக அல்ல. நான் எப்போதும் சொல்லும் உதாரணத்தை இங்கேயும் சொல்லி நிறைவு செய்கிறேன்.
நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டதா என்று சிந்திக்க வேண்டாமா?
என்னவென்றால், மருத்துவருக்காகவா மருந்து சாப்பிடுகிறோம்? இல்லே மருந்து வியாபாரி வருத்தப்படுவாரே என்றா மருந்து சாப்பிடுகிறோம்? நம்முடைய நோய்க்கு, நாம் மருந்து சாப்பிடுகிறோம். மருந்து வாங்கினால்கூட எதை முதலில் பார்ப்பீர்கள்? கண்களை மூடிக்கொண்டு கொடுப்பதை வாங்கிக் கொள்கிறோமா? இல்லையே, வாங்கியவுடன் மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துதானா அது என்று பார்ப்பீர்கள். அடுத்து என்ன பார்க்கிறோம் Expiry date – மருந்தின் காலாவதி தேதி என்ன? காலாவதியான மருந்தையும் அவசரத்தில் விற்றுவிடுவார்கள் நம்மாட்கள்! காலாவதியான மருந்து பயன்படாது. சாதாரணமாக இருக்கிற மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம். நம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துகிற கருத்துகள் காலாவதியாகிவிட்டதா என்று சிந்திக்க வேண்டாமா? காலம் சென்ற மருந்து – காலம் சென்ற நபர்கள் – காலம் சென்ற கருத்துகளை வைத்துக் கொண்டு, ‘‘இதுதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி நம்முடைய ரிஷிகள் சொன்னது, இதுதான் நம்ம முனிவர்கள் சொன்னது, இதுதான் நம்ம வேதம் சொன்னது’’ என்று இருந்தால் என்ன அர்த்தம்? அறிவு வளருமா?
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!’’
எனவே தான், அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது. அதனால்தான் ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்று சொன்னார். அப்படிப்பட்ட மனிதர்களாக நாம் உருவாவோம்.
மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயம்; தன்னம்பிக்கை மிகுந்த ஒரு சமுதாயமாக மாறும்!
பெரியார் சாக்ரடீசு போன்ற இளைஞர் அந்தப் பணியிலிருந்து பறிக்கப்பட்டார் என்றாலும், பல ஆயிரக்கணக்கானவர்கள் உருவாகிறார்கள். இந்த இயக்கம் உருவாக்கிக் காட்டும் என்பதை நேற்று முன்தினமும் நாம் பார்த்திருக்கிறோம். எனவே, அவர்கள் வளரவேண்டும். இயக்கம் வளரவேண்டும். உங்கள் குழந்தைகளுக்குப் ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழை வாங்கிக்கொடுங்கள். சந்தா செலுத்துங்கள். அவர்களுக்கு அறிவூட்டுங்கள். குழந்தைகளாக அவர்கள் இருக்கும் போதே தொடங்குங்கள். திராவிட இயக்க ஏடுகளை – குறிப்பாக ‘விடுதலை’, ‘உண்மை’ இவற்றை வாங்கிப் படிக்க வையுங்கள். இதுபோன்ற நிறைய நூல்களை வாங்கி மற்றவர்களிடம் பரப்புங்கள். மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு சமுதாயம்; தன்னம்பிக்கை மிகுந்த ஒரு சமுதாயமாக மாறும். எங்கே மூடநம்பிக்கை ஒழிகிறதோ அங்கே தன்னம்பிக்கை பெருகும். எங்கே தன்னம்பிக்கை பெருகுகிறதோ அங்கே தன்னிறைவு தானே வரும். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.
வாழ்க பெரியார்! வருக பெரியார் சாக்ரடீசு உருவாக்க விரும்பிய ஒரு புதிய சமுதாயம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.