81 ஆம் ஆண்டில் திராவிடர் கழகம்
1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி, இதே நாளில் சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டது.
பெரியார் எழுதி அண்ணாவால் முன்மொழியப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானத்தின் மூலம் பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கத்தின் பண்பும் மாற்றம் பெற்றது என்பதே வரலாறு!
அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது.
இன்றைய தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் சமூக நீதி வளர்ச்சி யில் திராவிடர் கழகத்தின் பங்களிப்பு முதன்மை யானது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட இந்த நாள், தமிழ்நாட்டின் இந்த மாற்றங்களுக்கு ஒரு முக்கிய தொடக்கப் புள்ளியாகும்.
திராவிடர் கழகத்தில் இருந்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் முளைவிட்டுக் கிளம்பின. எனினும், திராவிடர் கழகம் தேர்தல் போட்டியில் ஈடுபடாத தன்மையில் தொடர்கிறது.
திராவிடர் கழகமாக பரிணமித்த பிறகும் தான் எத்தனை எத்தனை சாதனைகள்?
இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்முறையாகத் திருத்தச் செய்து, பிற்படுத்தப்பட்டோருக்கும், ஒடுக்கப்பட் டோருக்கும் சமூகநீதியை உறுதிசெய்தது இந்த இயக்கம் தான்!
பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்ப தற்காகக் களத்தை உருவாக்கி வழிநடத்துவதும் இந்த இயக்கம் தான்!
பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி சலிப்பின்றிப் பரப்புரை செய்வது இந்த இயக்கம் தான்!
இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் திணிக்கப்பட்டதை எதிர்த்து ஒழித்ததும், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீட்டைப் பெற்றுப் பாதுகாத்துக் கொடுத்திருப்பதும் இந்த இயக்கம் தான்!
இந்தியா முழுமைக்கும் 27% இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் இந்த இயக்கம் தான்!
தந்தை பெரியாருக்குப் பிறகு அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி என்று சரியான தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, போராட்டக் களம் என்றால் அது பெரியார் இயக்கம் தான் என்ற கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது இந்த இயக்கம் தான்!
உலகப் பகுத்தறிவாளர் அமைப்புகளே வியக்கும் மாபெரும் மக்கள் இயக்கம் திராவிடர் கழகம் தான்!
அத்தகைய சிறப்புகளுக்குரிய இயக்கம், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என்று எல்லா வகையிலும் இன்னும் வீரியத்துடன் தோழர்களை உருவாக்கி, உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கும் பெரியாரைக் கொண்டு செல்லும் பணியில் முனைப்புடன் ஈடுபடும் ஒப்புவமை சொல்ல முடியாத கருஞ்சட்டைத் தொண்டர்களின் செந்நீராலும், உழைப்பாலும் நாளும் வலுப்பெறும் திராவிடர் கழகம் தோன்றிய நாள் இன்று!