தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்களை பணியில் அமர்த்த ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம்

2 Min Read

மாஸ்கோ, ஆக. 27- ரஷ்யாவில் நிலவி வரும் கடுமையான தொழி லாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, அந்த நாடு இந்திய நிபுணர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, கனரக இயந்திரங்கள் மற்றும் மின்னணுத் துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப இந்திய தொழிலாளர்கள் ஒரு முக்கிய தீர்வாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் வினய் குமார், ரஷ்யாவின் பிரபல செய்தி நிறுவனமான டாஸ் (TASS)-க்கு அளித்த பேட்டியில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

ரஷ்யாவில் தற்போது மனிதவளத் தேவை அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் திறமையான மனிதவளம் ஏராளமாக உள்ளது. எனவே, ரஷ்ய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அங் குள்ள நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்த ஆர்வம் காட்டுகின்றன.

தற்போது, ரஷ்யாவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமான மற்றும் ஜவுளித் துறைகளில் பணிபுரிகின்றனர். ஆனால், இப்போது இயந் திரங்கள் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அந்தத் துறைகளில் அதிக எண்ணிக்கை யிலான இந்திய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியத் தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக, அவர்களுக்குத் தேவையான தூதரக சேவைகளுக்கான பணிச்சுமை அதிகரித்துள்ளது. கடவுச்சீட்டை புதுப்பித்தல், புதிதாக கடவுச்சீட்டு பெறுதல், மற்றும் பிற அவசர சேவைகளை வழங்குவதற்கு தூதரகம் தயாராக இருக்க வேண்டும். இதை சமாளிக்கும் வகையில், யெகாடெரின்பர்க் என்ற இடத்தில் ஒரு புதிய துணைத் தூதரகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்துறை மய்யப்பகுதி:

ஸ்வெர்ட்லோவ்ஸ்க் இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்வெர்ட் லோவ்ஸ்க் உட்பட ரஷ்யாவிற்கு இந்தியாவில் இருந்து 10 லட்சம் நிபுணர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு வினய் குமார் தெரிவித்தார்.

ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதி, ரஷ்யாவின் கனரகத் தொழில் துறையின் மய்யமாக உள்ளது. இங்குதான் புகழ்பெற்ற உரல்மாஷ் மற்றும் T-90 டாங்க் தயாரிக்கும் யூரல் வேகன் ஜாவோட் போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தத் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்க அதிக திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். உக்ரைன் போரில் சில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாலும், இளைஞர்கள் தொழிற்சாலைப் பணிகளில் ஆர்வம் காட்டாததாலும் இந்தத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலைவாய்ப்புத் திட்டங்கள்:

ரஷ்யாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் ரஷ்யாவில் 31 லட்சம் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். இதைச் சமாளிக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டில் தகுதிவாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை 1.5 மடங்கு அதிகரிக்கவும், சுமார் 2.3 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் முதன்முதலில் 2024-ஆம் ஆண்டு ரஷ்யாவின் கலினின்கிராட் மீன் பதப்படுத்தும் வளாகத்தில் பணிக்குச் சேர்ந்தனர். இந்த நடவடிக்கையின் மூலம், ரஷ்யா நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், அதன் முக்கியத் தொழில்துறைகளின் உற்பத்தியைப் பராமரிக்கவும் முயற்சிக்கிறது. இந்தியத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதார உறவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *