‘பகுத்தறிவு’ வார இதழ் வெளிவந்த நாள் (26.8.1934)
ஆகஸ்ட் 26, 1934 பகுத்தறிவு வார இதழாக வெளிவந்தது. இதழின் முகப்பில் ‘பகுத்தறிவு’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதழின் ஆண்டினைக் குறிக்க ‘மாலை’ என்பதையும், வாரத்தையைக் குறிக்க ‘மலர்’ என்பதையும் பயன்படுத்தியது.
ஞாயிறு தோறும், 20 பக்கங்களூடன் வெளிவந்த பகுத்தறிவு இதழின் விலை ஒரு அணா. ஆண்டுச் சந்தா-உள் நாடு: மூன்று ரூபாய்; வெளிநாடு: அய்ந்து ரூபாய். இதழில் பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகள், வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், தந்தை பெரியாரின் சுற்றுப்பிரயாண விவரங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய செய்திகள், சுயமரியாதை மணம் செய்துகொண்டோரின் படங்கள், தந்தை பெரியாரின் உரைகள், பொதுக்கூட்டங்கள், சுயமரியாதை மாநாட்டுச் செய்திகள் போன்றவை இடம் பெற்றன. இதழ் தோறும் தலையங்கம் இடம் பெற்றது. விளம்பரங்களும் இவ்விதழில் இடம் பெற்றன. இதழின் முகப்பில் திருக்குறள்கள் இடம் பெற்றன. பகுத்தறிவு இதழில் தான் (ஜனவரி, 1935) முதன் முதலில் எழுத்துச் சீர்த்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. ஈரோடு உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு பகுத் தறிவு வார இதழ் வெளியானது. பகுத்தறிவு வார இதழுக்கும், அதன் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று ஜனவரி 1935இல் பிரிட்டிஷ் அரசு ஆணை பிறப்பித்தது. அதனால் ஜனவரி 1935 இதழோடு பகுத்தறிவு வார இதழ் நின்றுபோனது.
பகுத்தறிவு இதழ், மீண்டும் மே 1, 1935-லிருந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், மாத இதழாக வெளிவந்தது. ’அறிவை வளர்க்கும் ஓர் சிறந்த மாத வெளியீடு’ என்ற குறிப்பு இதழின் முகப்பில் இடம் பெற்றது.
திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த நாள் (26.08.1883)
திரு.வி.க. அரசியல், சமுதாயம், எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசலம் – சின்னம்மா இணையருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். கலியாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் மேற்கொண்டிருந்த ஆசிரியர் இருந்து விலகினார்.
பின்னர் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் ‘திராவிடன்’, ‘நவசக்தி’ போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். கடலூரில் திராவிட நாடு பிரிவினை மாநாடு 14.09.1947இல் நடந்த போது திரு.வி.க. பெரியார் படத்தைத் திறந்து வைத்து, “திராவிடப் பெருமக்களின் தலைவன் எனது பழைய நண்பரும் உழுவலன்பனு மாகிய இராமசாமிப் பெரியார் படத்தைத் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர் ஓர் இயற்கை ஞானி என்றுதான் கூறவேண்டும். பெரும் பெரும் காரியங்களை எல்லாம் எளிய முறையில் சாதிக்கும் திறமை இவரிடம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டு வந்தது.மனோதத்துவ ஆய்வின்படி இப்பெரியாரின் புற உறுப்புகளை நோக்கினால் அஞ்சாமை சாயல் இவருடைய கண்ணொளியில் பொலிவதைக் காணலாம். இந்தியா எங்கும் ஏன் உலகமெங்கும் கூட இந்த ஆகஸ்ட்15 ஆம் நாள் இந்திய சுதந்திர விழா கொண்டாடப்பட்ட காலத்தில் “நாம் எதிர்பார்த்த சுதந்திரம் அல்ல இது . சுரண்டல் சக்கரத்துடனும், சர்வாதிகார சக்கராயுதத்துடனும், வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியைத் துவங்கும் நாள் தான் இது” என்று கட்டளையிட்டார்.தன் மனசாட்சிக்குத் தோன்றியதை யார் என்ன கூறினாலும் தனக்கு லட்சியமில்லை என்று வெளியிட எவ்வளவோ அஞ்சாமை வேண்டும்.அஞ்சாமை உள்ள இடத்தில் உண்மை இருக்கும்.உண்மை உள்ள இடத்தில் தான் அஞ்சாமை பிறக்க முடியும்” என்று பேசினார்.