சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் ஏஅய் வளர்ச்சியை மேம்படுத்த, 35 அரசுத் துறைகள், 38 புத்தொழில் நிறுவனங் களில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் மூலம் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கி வரும் அய்டிஎன்டி மய்யம், அய்சிடி அகாடமி, எல்காட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) சார்ந்த புதுமைகளுடன் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த ரூ.13.93 கோடியில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் கடந்த 2024இல் தொடங்கப்பட்டது.
ஏஅய் மூலம் சமூக சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்த இந்த இயக்கம் ஏற்படுத்தப் பட்டது.
38 புத்தொழில் நிறுவனங்கள்
அதன்படி, தேவையான பயிற்சிகளை அளித்து, ஆராய்ச்சிகள், புதுமைகள், திறன் மேம்பாடுகளை ஊக்கு வித்து, ஆட்சி நிர்வாகம், மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் எழும் சிக்கல்களுக்கு ஏஅய் மூலம் தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை இந்த இயக்கம் உருவாக்கி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏஅய் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அய்சிடி அகாடமி, அய்டிஎன்டி மய்யம், எல்காட் ஆகியவற்றுடன் இணைந்து 35 அரசுத் துறைகள், 38 புத்தொழில் நிறுவனங்களில் ஏஅய் பயிலரங்குகள் நடத்தப் பட்டன.
இதன்மூலம் 30 முக்கிய ஏஅய் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல, மருத்துவம், வேளாண்மை, கல்வி, மின்ஆளுமை ஆகியவற்றில் ஏஅய் மூலம் தீர்வு காண வகை செய்தல், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஏஅய், இயந்திரவியலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல், தமிழ்நாடு தரவு பகிர்வு தளத்தை மேம்படுத்துதல், திறன் போட்டிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் மாணவர்களிடம் ஏஅய் திறன்களை வளர்த்தல் போன்றவற்றையும் இந்த இயக்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.