சென்னை, ஆக.26 ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்’ கீழ் பயன்பெற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு, கல்வியை இடைநிறுத்தாமல் தொடர இந்த உதவித்தொகை 18 வயது வரை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரி படிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடைய குழந்தை களின் உறவினர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை நகல் குழந்தையின் ஆதார் அட்டை நகல் பிறப் புச் சான்றிதழ் கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வங்கிக் கணக்குப் புத்தக நகல் இந்தத் திட்டத்தின் மூலம், ஆதரவற்ற குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.
பொது இடங்களில் உள்ள
அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
புதுடில்லி, ஆக.26 தமிழ்நாட்டில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.
கொடிக் கம்பங்கள்
கொடிக்கம்பங்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்கிஸ்ட் மாநில செயலாளர் பி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘கொடிமரங்களை அகற்ற வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமை, சமத்துவம், சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாகும். பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகும். கருத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமைகளை மறுக்க முடியாது. கொடிகளை அகற்ற உத்தரவிடும் முன்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கோரவில்லை. எனவே, கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இடைக்காலத் தடை
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (25.8.2025) நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எஸ்.முரளிதர் மற்றும் வழக்குரைஞர் எஸ்.பிரசன்னா ஆகியோர், ‘இந்த வழக்கு விசாரணையில் சில முரண்பாடுகள் உள்ளன. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது’ என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதுவரை தமிழ்நாட்டில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.