ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘சல்வா ஜூடும்’ வழக்கின் தீர்ப்பைக் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை ‘நக்சல் ஆதரவாளர்’ என விமர்சித்ததற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 18 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விமர்சனம், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சமீபத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தில் அமித் ஷா பேசும்போது, உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அமர்வு வழங்கிய ‘சல்வா ஜூடும்’ வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, அவரை ‘நக்சல் ஆதரவாளர்’ என விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமித் ஷாவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, கோபால கவுடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் பி. லோகூர், ஜே. செலமேஸ்வர் உள்பட 18 நீதிபதிகள் கூட்டாக ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “‘சல்வா ஜூடும்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய உள்துறை அமைச்சர் தவறாகப் புரிந்துகொண்டது மிகவும் மோசமானது. அந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் நக்சல் மற்றும் அதன் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பிரச்சாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம், ஆனால் அது நாகரிகமாகவும், கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும். இரு வேட்பாளர்களின் தனிப்பட்ட சித்தாந்தத்தை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
அரசியலில் உயர் பதவியில் இருப்பவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தலைபட்சமாகத் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கி எடுக்கும் வகையில் உள்ளது. இது நீதிபதிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இறுதியாக, “குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மரியாதை அளிக்கும் வகையில், தனிப்பட்ட அவதூறுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்” என்றும் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை, இந்திய நீதித்துறையின் சுதந்திரம் குறித்து ஒரு முக்கிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பொறுத்தவரை, அதிகாரமிக்க ஒரு பெரிய பதவியில் இருக்கும் காரணத்தால் எதையும் பேசலாம், எடுத்தெறிந்து பேசலாம் என்று நினைத்தால் அதற்குரிய தண்டனையைக் காலம் கட்டாயம் அளிக்கும்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (குறள் 963)
என்கிறது திருக்குறள்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்போது, அவர் எதிர் அணியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக – அவரை ‘நக்ஸலைட்’ அனுதாபி என்று பழி சுமத்துவது எவ்வளவுப் பெரிய பயங்கரம்!
அவர் அத்தகையவர் தான் என்றால், அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அமித்ஷா சார்ந்திருக்கும் பிஜேபி பிரச்சினையை எழுப்பியதுண்டா?
இதே அமித்ஷாகூட என்கவுண்டரில் 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்திருக்கிறார். அதற்காக அவர்மீது எதிர்க்கட்சிகள் அதை வெளிப்படுத்தினால் அவர் மகிழ்ச்சி அடைவாரா? மற்றவர்கள்மீது அபாண்ட பழி சுமத்துவதைத் தவிர்த்துத் தன் முதுகை ஒரு முறை தடவிப் பார்ப்பது நல்லது.